sivaஐபிசி தமிழ் தொலைக்காட்சி இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் பணியை தனது தாயக நிகழ்ச்சிகளினூடாக திறம்பட நடத்தி வந்ததை அதன் ஆரம்ப காலங்களிலேயே நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இது குறித்து விரிவாக பேச வேண்டிய தேவையை அதன் அண்மைய செயற்பாடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஐபிசி மட்டுமல்ல இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் எந்த ஊடகங்களையோ அமைப்புக்களையோ நாம் தமிழ்ப்பரப்பிற்குள் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது இந்த இனம் தனக்கு தானே தோண்டும் சவக்குழி என்பதை நாம் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

 
இது குறித்து நாம் ஒரு விரிவான பதிவை எழுத முன்பாக, ஒரு செய்மதி ஊடகத்தின் பங்கு குறித்து மாமனிதர் சிவராம் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தோற்றுவிக்கப்பட்டபோது எழுதிய இந்தக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு மீள் பதிவு செய்கிறோம்.

 

இந்த கருத்துக்களை கவனமாக உள்வாங்கி ஐபிசி போன்ற ஊடகங்கள் தம்மை சரி செய்து கொள்ள முன்வரவேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் இத்தகைய ஊடகங்களை புறக்கணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

 

இனஅழிப்பை சந்தித்து தொடர் இனஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலையை – நீதியை மடைமாற்றும் ஒரு ஊடகம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை என்பதே இந்த இனத்தின் விடுதலையை வேண்டி நிற்கும் அனைவரினதும் கருத்தாக இருக்கிறது.

 

நன்றி

ஈழம்ஈநியூஸ்.

 

00000000000000000000000000000000

 

செய்மதித் தொலைக்காட்சி இன்று போரியலின் ஒரு புதிய பரிமாணமாகக் கொள்ளப்படுகிறது. பெரும் படையெடுப்புகளுக்கான திட்டமிடலின் இன்றியமையாத அங்கமாக இதை மேலைத்தேயப் போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

1991 இல் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈராக்கின் மீது படையெடுத்த காலத்திலிருந்து இவ்விடயம் தொடர்பாக நிரம்ப ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. போரியலின் இப்புதிய பரிமாணத்தை சி.என்.என். விளைவு (C.N.N.Effect) என அழைப்பர். சி. என். என். என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளில் துரித வளர்ச்சி கண்ட ஒரு அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பு. (Cable Television Network என்பதன் சுருக்கம்) இதை 24ஃ7 வகைத் தொலைக்காட்சி என்பர். அதாவது, ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் கிழமையில் ஏழு நாளும் இடையறாது இயங்குகின்ற சர்வதேசத் தொலைக்காட்சிச் சேவை. ‘சி.என்.என். விளைவு’ எனில் என்ன? ஒரு சிறு உதாரணத்தின் மூலம் அதை உங்களுக்குப் புரிய வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

 

1993 ஆம் ஆண்டு கிளாலித் துறையைக் கைப்பற்றுவதற்காக ஒரு பெரும் நடவடிக்கையில் ஸ்ரீலங்காப் படைத்துறை இறங்கிற்று. இதற்கு ‘யாழ் தேவி’ எனப் பெயருமிட்டனர். ஆனையிறவிலிருந்து தொடங்கி யாழ் கடல் நீரேரிக் கரையோரமாக நகர்ந்து கிளாலியைக் கைப்பற்றி விட்டால் குடா நாட்டுக்கும் வன்னிக்குமிடையிலான தொடர்பை முற்றாகத் துண்டித்து விடலாம் என்பது ஸ்ரீலங்காப் படைத்துறையின் திட்டம். ஆனால், புலோப்பளை என்னுமிடத்தில் வைத்து தளபதி பால்ராஜின் தலைமையில் புலிகள் இப்படையெடுப்பை முறியடித்தனர்.

 

அப்போது ஸ்ரீலங்காப் படைத்துறை வட்டாரங்களிலிருந்து துண்டும் துணியுமாகக் கசிந்த தகவல்களிலிருந்து மேற்படி நடவடிக்கை பிழைத்து விட்டது எனத் தெரிய வந்தது. அதை வைத்துக் கொண்டு நான் ஒரு கோணத்திலும் இலங்கையின் முன்னணிப் படைத்துறைச் செய்தியாளர் இக்பால் அத்தாஸ் ஒரு கோணத்திலும் கட்டுரை வரைந்தோம். புலிகளின் குரல் ஒலி பரப்பிலிருந்து தெளிவான தகவல் எதுவும் இல்லை. (பல சந்தர்ப்பங்களில் களமுனையில் என்ன நடக்கிறதென்று கொழும்பிலிருந்து எங்களுக்குக் கிடைத்த அளவிற்குக் கூடப் புலிகளின் குரலுக்குத் தெரிந்திருக்கவில்லை) சுருங்கக் கூறின் போரினை வழி நடத்திய சிங்கள அரசியல் தலைமைகளுக்கோ, சிங்கள மக்களுக்கோ அதன் அழிவுகளை எதிர்கொண்ட தமிழ் மக்களுக்கோ இலங்கையின் இன முரண்பாட்டை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த வெளிநாட்டவருக்கோ ‘யாழ் தேவி’ படை நடவடிக்கை பற்றிக் கிடைத்த தகவல்கள் அனைத்துமே இரண்டாங்கை மூன்றாங்கையாக இரண்டு மூன்று நாட்கள் படிப்படியாகக் கசிந்து எழுத்துருவில் வந்தவையே.

 

அதுவும் செய்தித் தாள்களை, குறிப்பாக ஆங்கிலச் செய்தியேடுகளை வாங்கி இக்பால் அத்தாஸ் மற்றும் எனது கட்டுரைகளை படித்தபோது ஒரு குறிப்பிட்ட வாசகர் கூட்டத்திற்கு மட்டுமே கிடைத்திருக்கக் கூடிய, ‘மூளை வழிபுரிதலுக்கான தகவல்களே அன்று ‘யாழ் தேவி’ நடவடிக்கை பற்றிக் கிடைக்கக் கூடியதாக இருந்தது.

 

இந்தப் படை நடவடிக்கை கிளப்பிய செய்திப் புழுதி அடங்கி ஓராண்டின்பின் நான் யாழ்ப்பாணம் போயிருந்தேன். ‘யாழ் தேவி’ நடவடிக்கையின்போது யாழ்ப்பாணத்தில் புலிகளோடு தங்கியிருந்தவர் ‘ராவய’ சிங்கள அரசியல் கிழமையேட்டின் செய்தியாளர் நந்தன வீரரட்ண என்பவர். அவரும் என்னுடன் கூட வந்திருந்தார். பயணத்தின்போது புலோப்பளை முறியடிப்புச் சண்டையின்போது தான் கண்ட காட்சிகளைக் கூறி வந்த அவர் தான் சொன்னவற்றை எமக்கு நிறுவிடும் நோக்கில் ஒரு ஒளிப் பேழையை Ngioia (Video Cassette) புலிகளிடம் பெற்று அதை எமக்கு போட்டுக்காட்டினார்.

 

அதில் ஒரு காட்சி. புலிகளின் தாக்குதலின் ஒரு போர்த் தாங்கி பற்றியெரிகிறது. புலிகள் சுட்டபடி முன் செல்கிறார்கள். ஸ்ரீலங்காப் படையாட்கள் பலர் அந்தக் களமுனையிலிருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள். இதை நானும் வேறு செய்தியாளரும் கண்டது அந்தச் சண்டை நடந்து ஓராண்டின் பின்னர். அந்நேரத்தில் அது புலிகளின் சண்டையிடும் திறனை எமக்கு எடுத்தியம்பிய ஒரு வரலாற்று ஆவணம் மட்டுமே. அதற்கப்பால் அக்காட்சிக்குப் பெறுமானம் இருக்கவில்லை.

 

ஆனால் இந்தக் காட்சியைப் புலிகள் செய்மதித் தொலைக்காட்சி வழியாகச் சண்டை நடந்த அன்றே ஒளிபரப்பினர் என வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும்? சிங்கள மக்களுக்கு தமது படைகள் மீதான நம்பிக்கை கடும் ஆட்டம் கண்டிருக்கும். சிங்கள அரசியல் தலைமைகள் அன்று போர் மீது வைத்திருந்த பற்றுறுதி சிதைந்திருக்கும் அவ்வசையும் பிம்பங்களின் அதிர்வலைகள் ஸ்ரீலங்கா படைகளின் ஒரு குறிப்பிட்ட களமுனைப் பின்னடைவை மாறாக் களங்கமான ஒரு படுதோல்வி என மாற்றியிருக்கும்.
இலங்கையின் இன முரண்பாட்டை அக்காலத்தில் கூர்ந்து அவதானித்து வந்த பல நாடுகள் இங்கு ஸ்ரீலங்கா படைகளின் கையே தவிர்க்க முடியாத படி மேலோங்கும் என கூறி வந்தன.

 

சிங்கள மக்கள் தனிப் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களுக்கு எப்போதும் தமிழரைவிட படைபலம் கூடுதலாகவே இருக்குமெனவும், அதன் காரணமாகத் தமிழரது விடுதலைப் போராட்டம் என்றும் ஒரு தேக்க நிலையிலேயே இருக்குமெனவும் அந்நாட்டுப் போரியல் வல்லுநர்கள் கூறி வந்தனர். இது தவறு என அந்த நேரத்தில் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைத்துறைத் தலைமையகங்களுக்கு சென்ற வேளைகளில் நான் வாதிட்டதுண்டு.

 

ஆனால், எனது வாதங்களை விடவும், எனது ஆயிரம் போரியல் ஆய்வுக் கட்டுரைகளை விடவும் புலோப்பளைச் சண்டையின் அக்காட்சி அவர்களுடைய எண்ணத்தை மாற்றியிருக்கும். இதை நான் நிச்சயமாகக் கூற முடியும். ஏனெனில், ஆனையிறவுச் சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில் எனக்குப் பழக்கமான ஒரு மேலைத் தேய படையதிகாரிக்கு புலோப்பளைச் சண்டைக் காட்சியைப் போட்டுக்காட்டினேன். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் ஆனையிறவுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்து அது ஒரு அசைக்க முடியாத கோட்டை என என்னிடம் கூறியிருந்தார்.

 

இத்தாவிலில் நிலை கொண்டிருந்த பால்ராஜின் படையோடு 53 டிவிசனின் சிறப்புப் படைகளைத் திரும்பத் திரும்ப மோதவிட்டு அவற்றின் ஆள்வலுவை ஸ்ரீலங்கா படைத்தளபதிகள் கண்மூடித்தனமாகச் சிதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். (அச்சிறப்புப் படைகளை வளர்த்தெடுக்க அவரது நாடு கணிசமான முதலீடு செய்திருந்தது) இந்தப் பின்னணியில்தான் பால்ராஜின் சண்டைத் திறனைக்காட்டக் கூடிய புலோப்பளைச் சண்டை ஒளிப்பேழையை அவருக்குக் காட்ட வேண்டியதாயிற்று. பார்த்தார். “பிழையான குதிரையின் வாலில் பணத்தைக் கட்டிவிட்டோம் போலிருக்கிறது” என அந்த ஒளிப்பேழை ஓடி முடியக் கூறினார். அவர் ஸ்ரீலங்காவுக்கு வந்த இரண்டாண்டுகளில் எனது உரையாடல்களோ, கட்டுரைகளோ ஏற்படுத்தாத தாக்கத்தை அந்தப் புலோப்பளைச் சண்டைக் காட்சி ஏற்படுத்திற்று.

 

ஆயிரம் சொற்களைவிட ஒரு படம் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என்பர். ஆனால், பத்தாயிரம் சொற்களைவிட உடனடியாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி பிம்பத்தொகுதியொன்று உண்டாக்கும் விளைவு மிகப் பெரிது என நாம் கூறலாம். இதுவே ‘சி. என். என். விளைவு’ எனப்படுகிறது.
ஒரு போரைக் கொண்டு நடத்துவதற்கு மிக மிக அடித்தளமாகத் தேவைப்படுவது அதன் பின் நிற்கின்ற மக்களின் கூட்டு உள வலுவாகும். (Morale)அந்தப் போரை முன்னெடுப்பதற்கான அரசியல் ஒருமைப்பாடு, ஆள்வலு என்பன இக்கூட்டு உளவலுவிலிருந்தே பெறப்படுகின்றன.

 

ஒரு போரின் வெற்றியை ஆயுதங்கள் தீர்மானிப்பதில்லை. இந்தக் கூட்டு உளவலுவே தீர்மானிக்கிறது. சோவியத் ய10னியன் மீது ஹிட்லர் படையெடுத்த போது சமூக விடுதலைக் கருத்தியலின் அடித்தளத்தில் எழுந்த ரஷ்யத் தேசியம் உருவாக்கிய கூட்டு உள வலுவே வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ‘சி. என். என். விளைவு’ இந்தக் கூட்டு உளவலுவை சாதகமாகவோ பாதகமாகவோ அசைக்கக் கூடியது. இதனாலேயே, இன்றைய படைத் துறைத் திட்டமிடலாளர்கள் தாம் வழி நடத்தப் போகும் ஒரு போர் அல்லது சண்டை 24/7 தொலைக்காட்சிகளில் எங்ஙனம் காட்டப்படலாம் என்பதைப் பற்றி நிறையவே எண்ணுகின்றனர்.

 

சோமாலியாவில் அமெரிக்காவின் தலையீட்டை எடுத்துக் கொள்வோம். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த செங்கடலும் இந்துமா கடலும் சந்திக்குமிடமான ஆபிரிக்காவின் கொம்பு (Horn of Africa) அமைந்துள்ள சோமாலியா முன்னர் சோவியத் யனியனின் செல்வாக்குக்குட்பட்ட நாடாகவிருந்தது. சோவியத் யனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதை தன் கையகப்படுத்த எண்ணியது அமெரிக்கா. உதவிக்குக் கிடைத்தது சி.என்.என். தொலைக்காட்சி.

 

சோமாலியாவில் கடும் பஞ்சமும் கட்டுக்கடங்கா அராஜகமும் நிலவுவது போன்ற பிம்பங்கள் தொடர்ச்சியாக சி.என். என். இல் ஒளிபரப்பாயின. “சோமாலியாப் பஞ்சத்தில் அடிபட்டவன் போல” என நாம் கூறுமளவிற்கு சி.என்.என். பிம்பங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. யாராவது சோமாலியாவில் தலையிடா விட்டால் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அழியப் போகின்றனர் என்ற மாயையை சி. என்.என். ஏற்படுத்திற்று.
இதே காலப் பகுதியில் சோமாலியாவை விடப் பெரும் அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த அங்கோலா, கொங்கோ போன்ற வேறு ஆபிரிக்க நாடுகளை சி.என்.என். கண்டு கொள்ளவில்லை.

 

சோமாலியாவைப் பற்றி சி.என்.என். மற்றும் பல்வேறு அமெரிக்க சார்பு 24ஃ7 தொலைக்காட்சிகள் ஏற்படுத்திய சர்வதேசச் சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா அங்கே தன் படைகளை அனுப்பி வைத்தது. நிரந்தரமாக அங்கு தளம் அமைக்கவும் முயற்சிகள் தொடங்கின. இதற்கெதிராகச் சில இயக்கங்கள் சண்டையில் இறங்கின. இதைப் பொருட்படுத்தாது அமெரிக்கா தான் விரும்பிய காலம் வரை சோமாலியாவில் இருந்திருக்கலாம். ஆனால், எந்த சி.என்.என். விளைவு அமெரிக்கப்படைகள் அங்கு செல்ல வழிவகுத்ததோ அதுவே அவை அங்கிருந்து வெளியேறவும் காரணமாயிற்று.

 

1993 இல் சி.என்.என். இலும் வேறு சர்வதேசத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலும் ஒரு காட்சி வெளியாகியது.
சோமாலியப் போராளிக் குழுக்களின் ஒட்டு மொத்த ஆயுதபலம் எத்தனை ஆண்டு சென்றும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை அந்த ஒரு காட்சி ஏற்படுத்திற்று. சோமாலியாவின் மொகடிஷ{ நகரில் நடந்த சண்டையொன்றில் கொல்லப்பட்ட ஒரு அமெரிக்கப் படையாளின் சடலத்தை அங்குள்ள போராளிகள் கட்டியிழுத்துத் திரிந்ததையும் அதைக் கண்டு அந்நகர மக்கள் வெற்றியாரவாரம் செய்ததையும் அமெரிக்க தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

 

சோமாலியாவிற்கு தமது படைகள் மனிதாபிமானப் பணிக்குப் போயிருந்தால் அவற்றின் மீது அங்கு இப்படியான வெறுப்பு ஏற்பட்டிருக்காது என்ற உண்மை ஒரு புறமாகவும் அந்தக் காட்சி ஏற்படுத்திய பயங்கரம் ஒரு புறமாகவும் அமெரிக்க மக்களை அந்த ஒளிபரப்பு தாக்கிற்று. செய்தித் தாளில் எத்தனை நு}று கட்டுரை எழுதியிருந்தாலும் இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.

 

அமெரிக்க மக்களிடம் இக்காட்சி ஏற்படுத்திய உணர்வலைகளுக்குத் தலைவணங்கி அப்போது ஜனாதிபதியாக இருந்த கிளின்டன் சோமாலியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியெடுக்க முடிவு செய்ய வேண்டியதாயிற்று. இதன் காரணமாக இப்போது ஈராக்கில் சி.என்.என்.விளைவு பற்றி அமெரிக்கப் படைகள் மிகக் கவனமாக நடந்து கொள்கின்றன. ஈராக் போராளிகளுடன் தற்போது நடைபெறும் போரில் தமக்குப் பாதகமான காட்சிகள் வெளிவந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கத் தளபதிகள் மிக அவதானமாக நடந்து கொள்கின்றனர்.

 

இது மட்டுமின்றி மேலைத்தேய படைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களில் சி.என்.என். விளைவு பற்றிய படிப்பும் நடைமுறையும் இன்றியமையாத அங்கமாகவுள்ளன. (இப்படியான அதிகாரிகள் பயிற்சியொன்றை பிரித்தானியாவின் தலைமைப் படைத்துறைக் கல்லு}ரியில் நேரடியாக அவதானிக்கும் வாய்ப்பு 1997 இல் கிடைத்தது) அமெரிக்காவின் போர்களில் சி.என்.என். விளைவு பற்றி இன்னும் அடுக்கிச் செல்லலாம். விரிவஞ்சி விடுகிறேன்.

 

புலிகள் இப்போது ஒரு செய்மதி தொலைக்காட்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். இது ஒரு சராசரி அரச தொலைக்காட்சி சேவையை போல் முடங்கிவிடப்போகிறதா அல்லது துடிப்புள்ள ஓர் ஊடகமாக புதிய தடம் பதிக்கப்போகின்றதா என்பது தமிழ்த் தேசியப் போராட்டத்தின் எதிர்காலப் பரிமாணத்தை தீர்மானிக்கும்.
17.04.2005 சிவராம்