மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம்

0
673

vaikoஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,வணக்கம்.

சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற,தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை,உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி பிள்ளை ஆகியோருடன், மகா. தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார்.

அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று,புனித அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 அன்று பகல் 1.30 மணி அளவில், இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். மூவரையும் கைது செய்த ராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனையும், பசுபதி பிள்ளை அவர்களையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர்.

செய்தியாளர்கள், உலகம் முழுமையும் பயணிப்பதற்கும்,மக்களோடு கலந்து உரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள்.ஆனால் இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும்,செய்தியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை; உயிர் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும்.

சண்டே டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கே,அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்;மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவர்கள்,இக்கூற்றை உறுதிப்படுத்தி உள்ளார். எனவே,மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறையில் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன்.

தாங்கள் உடனடியாக நமது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

செய்தியாளரை உடனடியாக விடுவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

இதனிடையே, “இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த செய்தியாளரை உடனடியாக விடுவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பா.à®®.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை வடக்கு மாநிலம் கிளிநொச்சி பகுதியில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் என்ற இளம் பத்திரிகையாளர் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ள அவரிடம் கடுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சுற்றுலா விசாவில் இலங்கை சென்ற தமிழ் பிரபாகரன் வடக்கு மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை படம் பிடித்ததாகவும், அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிங்கள அரசு கூறியிருக்கிறது. இலங்கையில் போர் முடிவடைந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்னும் மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. ராணுவ முற்றுகைக்கு நடுவே அஞ்சி, அஞ்சி தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. வடக்கு மாநிலத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்றும்படி உலக நாடுகள் விடுத்த அறிவுரைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்ட ராஜபக்சே, தமிழர்கள் வாழும் பகுதிகளை ராணுவ மற்றும் சிங்கள மயமாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஒரு நாட்டின் மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசே அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் நிலையில், அது குறித்த உண்மைகளை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை ஆகும். இதற்காக அவர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாளுவது வழக்கம். அந்த வகையில் இலங்கை நிலைமை குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பிரபாகரனும் ஈடுபட்டிருக்கக் கூடும். ஆனால், உண்மைகள் வெளியாகிவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டிவரும் இலங்கை அரசு மக்களின் வாழ்க்கை நிலையை கண்டறிவதற்காகச் சென்ற ஓர் ஊடகவியாளரை பொய்யான குற்றச்சாற்றில் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள இதழாளர் இதற்கு முன்பும் இலங்கை சென்று தமிழர்களின் அவல நிலை பற்றி தொடர் கட்டுரை எழுதியுள்ளார். அது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அதேபோல், இப்போதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவரை சிங்களப்படையினர் கைது செய்திருப்பதாகத் தோன்றுகிறது. காரணமின்றி, கைது செய்யப்பட்டுள்ள இதழாளரை உடனடியாக விடுவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இதை இந்த ஒரு பத்திரிகையாளர் சம்பந்தப்பட்ட பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவர முயலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இதே நிலை தான். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இலங்கை அரசால் அச்சுறுத்தப்பட்டு வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்ற பத்திரிக்கையாளர்கள் பலர். கடந்த அக்டோபர் மாதத்தில் கூட இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக்கி பார்க், ஜேன் வொர்த்திங்டன் ஆகிய இரு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஐ.நா. விதிகளின்படி இவை கடுமையான மனித உரிமை மீறல் என்பது மட்டுமின்றி, உலகிற்கு தெரியக் கூடாத அளவுக்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடைபெறுகின்றன என்பதும் தெளிவாகிறது.

இலங்கை அரசுக்கு எதிரான இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாற்றுகளை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது தான் தெரியவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அடுத்தக் கூட்டம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இதை இந்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.