மோடியின் வாழ்த்துக்குக் கரி பூசிய தீர்ப்பு;கொலைகார ராஜபக்சேவுக்குத் தண்டனை தொடங்குகிறது! -வைகோ

என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்’ என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான்.

ஜெனீவா நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து, உலகம் தடை செய்த குண்டுகளை வீசி, பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாதோர் என இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த குற்றவாளி ராஜபக்சே.

mahi-last
‘இலங்கைத் தீவில் தமிழர் என்ற இனம்’ என்பதே கிடையாது என்று கூறி, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரித்து, சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் அங்கு நிறுத்தி, தமிழர் தாயகத்தை இட்லரின் வதை முகாமைப் போல ஆக்கினான்.

ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் அமைத்த விசாரணைக்குழுவை, இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கொக்கரித்தான்.

குவிந்து கிடக்கும் கொடிய அதிகாரங்கள் போதாது; இலங்கையின் நிரந்தர சர்வாதிகாரியாகி விடலாம்’ என்ற மனக்கோட்டையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதிபர் தேர்தலை நடத்தினான்.

இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, இந்த இனக்கொலைகாரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடியது. மோடியின் பதவிப் பிரமாணத்திற்கு அழைத்தது; வெளியுறவுக் கொள்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளைக் காற்றில் பறக்கவிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில், இந்தியாவில் சார்பில் ஆற்றிய அதிகாரப்பூர்வ உரையில், இலங்கை அதிபராக இக்கொலை பாதகனே மீண்டும் வெல்வான் என்று வாழ்த்துக் கூறியது வெட்கக்கேடானது.

இதுவரை இந்தியாவில் எந்தப் பிரதமரும் செய்யாத தவறு.

வாழ்த்தியதோடு நிறுத்தவில்லை நரேந்திர மோடி. ராஜபக்சேயை வெற்றி பெற வைப்பதற்காக, தனது தேர்தல் பிரச்சார ஊடக உத்திகளுக்குத் தலைமை தாங்கிய அரவிந்த் சர்மா என்பவரை, இலங்கைக்கு அனுப்பி வைத்து, இராஜபக்சேவுக்கு ஆலோசகர் ஆக்கினார். இந்தி நடிகர் சல்மான்கானை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தார். திருப்பதி கோவிலில் ஏழுமலையானத் தரிசிக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார்.

‘குணதிசை காலை நீட்டி, குடதிசை தலைiயை வைத்து, தென்திசை நோக்கும் பெருமாள்’ என்று, ஆழ்வார்களால் பாடப்பட்ட ஏழுமலையான், தெற்கே தன் பார்வையைத் திருப்பி இருக்கின்றார்; திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார், தமிழ் உணர்வுள்ள வைணவ பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலில், தமிழர் தாயகத்தில், குறிப்பாக முல்லைத் தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில், ராஜபக்சே படுதோல்வி அடைந்தான்.

இதுதான் தமிழர்களின் தீர்ப்பு; நாளை தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு!

இÞலாமியப் பெருமக்கள் மக்கள் நிறைந்து வாழும் மூதூர் பகுதியில், ராஜபக்சேவுக்கு 7,000 வாக்குகளும், எதிர் வேட்பாளருக்கு 57,000 வாக்குகளையும் அளித்து உள்ளனர்.

‘அலரி அரண்மனையை விட்டு உடனே வெளியேறு’ என்று, வெற்றி பெற்ற தரப்பு ராஜபக்சேவுக்குத் தெரிவித்தவுடன், அந்த அகங்கார மாளிகையை விட்டு கதறிப் புலம்பிக்கொண்டு வெளியேறி விட்டான் ராஜபக்சே.

‘இந்தத் தேர்தல் முடிவு; பிரதமர் நரேந்திர மோடியின் மூக்கறுத்த முடிவு’ என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அந்த மாபாவிக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கச் சொன்ன கைக்கூலியை, இன்னமும் கழுத்தில் கட்டிக் கொண்டு இருக்கின்றது மோடி அரசு.

இத்தேர்தல் களத்தில் அதிபராக வெற்றி பெற்று இருக்கின்ற மைத்ரி சிறிபால சேனா, ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கி விடுவார் என்று எவரும் எதிர்பார்த்து ஏமாந்து விட வேண்டாம். ராஜபக்சேயின் அமைச்சரவையில் கடைசிவரையிலும் இடம் பெற்றவர்; அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்; சிங்கள இனவாத இரத்தத்தோடு, ஈழத்தமிழருக்குக் கேடு செய்யும் உணர்வு இவரிடம் இரண்டறக் கலந்தே இருக்கின்றது.

அதனால்தான், ‘தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை, போலீசை வெளியேற்ற மாட்டேன்’ என்று தேர்தலுக்கு முன்பே அறிவித்து விட்டார்; எனவே, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தந்து விடுவார் என்றும் எதிர்பார்க்க வேண்டாம். இவரது தமிழர் விரோத மனப்பான்மை மாறி விடும் என்றும் நம்புவதற்கு இல்லை.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவால் ஒரு நன்மை விளைந்து இருக்கின்றது.

‘ஈழத்தமிழர்கள் கொதித்து எழுந்து எதிர்ப்பைக் காட்டினர்; இனக்கொலை நடத்தியவன் தூக்கி எறியப்பட்டு விட்டான்’ என்பது உலகத்திற்கு வெட்டவெளிச்சம் ஆகி விட்டது.

புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா, மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து ஜனநாயக நாடுகளும் வலியுறுத்த வேண்டும். சிறைகளில் வாடும் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும்; உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும், அனைத்துலகச் செய்தியாளர்களும் சுதந்திரமாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல புதிய அதிபர் அனுமதிக்க வேண்டும்; இதை எல்லாம் செய்கிறாரா என்பதைப் பொறுத்து இருந்து கவனிப்போம்.

இனக்கொலை செய்த ராஜபக்சே அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுவே, உலகத் தமிழர்களின் இலக்கு ஆகும்.

சிங்களர்களோடு ஈழத்தமிழர்கள் ஒருநாளும் சேர்ந்து வாழ முடியாது. சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் தீர்வு.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே புதிய அதிபருக்கு வாழ்த்துச் சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது அரசின் வஞ்சகமான துரோகப் போக்கை இத்துடனாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்க்குலத்திற்குக் கேடு செய்யும் எவ்ருக்கும் கேடு தானாக வரும் என்பதுதான் நடந்த தேர்தல் முடிவு தரும் பாடம் ஆகும்!

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
09.01.2015 மறுமலர்ச்சி தி.மு.க

தோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல… பிரதமர் மோடியும்தான்! – செந்தமிழன் சீமான்!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் த

குதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது. அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச் சொல்லி இனவெறிக் கொடூரனாக எந்த அதிபர் மாளிகையில் இருந்து ராஜபக்சே கொக்கரித்துச் சிரித்தாரோ… அந்த அதிபர் மாளிகையில் இருந்து அவர் இப்போது அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்.

தன் தேசத்து மக்களுக்கு உண்மையாக இல்லாத எந்தத் தலைவனும் நீடித்த அரசியலில் நிலைக்க முடியாது என்பதற்கு ராஜபக்சேயின் வீழ்ச்சி சரியான முன்னுதாரணம். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் சொந்த நாட்டு மக்களின் மீதே ராணுவத் தாக்குதல் நடத்திய கொடுங்கோலனுக்கு காலம் மிகச் சரியான தண்டனையைக் கொடுத்திருக்கிறது.

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றும், வதை முகாம்களின் அடைத்தும், மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியும் தன்னை ஓர் அரக்கனாகக் காட்டிக்கொண்ட ராஜபக்சேயுடன் பிரதமர் மோடி தொடங்கி சுப்ரமணிய சுவாமி வரையிலான பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தொடர்ந்து நட்பு பாராட்டினார்கள்.

தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் விதமாக ராஜபக்சேயின் வெற்றிக்குப் பகிரங்க வாழ்த்து தெரிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. ஊடகங்களின் பேட்டிகளிலும் பிரதமர் மோடியின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொண்ட ராஜபக்சேதான் இப்போது படுதோல்வி அடைந்திருக்கிறார்.

இதை ராஜபக்சேயின் தோல்வியாக மட்டும் கருத முடியாது. ஒருமித்த தமிழர்களின் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு அவரைப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தும், சிகப்பு கம்பளம் விரித்தும், அவருடைய வழிபாட்டுக்கு பாதுகாப்பு வழங்கியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் நட்பு பாராட்டிய இந்திய அரசும் தோற்றுப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை.

சுப்ரமணியன் சுவாமி மாதிரியான ஊதுகுழல்களை வைத்துக்கொண்டு ராஜபக்சேவுக்கு லாலி பாடிய பிரதமர் மோடியும் தனது அரசியல் அணுகுமுறையில் தோற்றுப் போயிருக்கிறார். ராஜபக்சேயை அடிக்கடி சந்தித்து அவருக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்த அய்யா சுப்ரமணியன்சுவாமி அவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது நாம் தமிழர் கட்சி.

இனவெறி அரசியலால் எதையும் சாதித்துவிடலாம் என நினைத்த ராஜபக்சேயின் வீழ்ச்சியை புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராஜபக்சேயின் தோல்வியை ரசிக்கவோ, புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் வெற்றியைப் பாராட்டவோ தமிழர்களாகிய நாங்கள் நினைக்கவில்லை.

தமிழர்களின் சுதந்திரத்துக்கான எவ்வித அணுகுமுறையும் புதிய அதிபரிடம் தெரியாவிட்டாலும், தமிழர்களை நசுக்கிய ஒரு கொடூரனின் வீழ்ச்சியை காலத்தின் தக்க பதிலடியாகவே தமிழுலகம் பார்க்கிறது. இனவெறி இல்லாத, ராணுவக் கொடூரங்கள் இல்லாத, பாகுபாடு பாராத நல்லாட்சியைத்தான் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இதனைச் செயல்படுத்தும் அதிபராக மைத்ரிபால சிறிசேனா தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ராஜபக்சே அனுமதிக்காத பன்னாட்டு விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்வர வேண்டும். நில உரிமை தொடங்கி தனக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும் எத்தகைய உரிமைகளும் அற்றுப்போனவர்களாக தமிழர்கள் இலங்கையில் தத்தளிக்கிறார்கள்.

அவர்களின் வாக்குகளும் ராஜபக்சேயை வீழ்த்த முக்கியக் காரணம். தமிழர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதாகச் சொன்ன ராஜபக்சேயின் அத்தனை வார்த்தைகளும் பொய் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. தாங்கொணா வேதனைகளில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் மீட்சிக்கான செயல்பாடுகளில் புதிய அரசு உண்மையாகச் செயல்பட வேண்டும். இதுகாலம் வரை ராஜபக்சேயை தாங்கிப் பிடித்த உலக நாடுகள் இனியாவது அவரை இனவெறிக் கொடூரனாக அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும்.

அதற்கான பன்னாட்டு விசாரணைகளுக்கும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வைக் கொடுக்கும் பொது வாக்கெடுப்புக்கும் புதிய அரசு வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார் சீமான்.

மக்களால் தண்டிக்கப்பட்ட மகிந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ராமதாஸ்

அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மக்களால் தண்டிக்கப்பட்ட மகிந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவுநர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கையின் ஏழாவது ஜேனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்ச இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதைக் காட்டிலும் மன நிறைவளிக்கும் மற்றொரு விஷயம் இந்த தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தது தமிழர்கள் என்பது தான்.

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோற்ற போதிலும் சிங்களவர்கள் அதிகம் வாழும் பெரும்பாலான மாவட்டங்களில் ராஜபக்ச தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார். இதனால் ராஜபக்ச பெற்ற முன்னிலையைக் கடந்து மைத்திரி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகான தமிழர்களின் வாக்குகள் தான் என்பதை மறுக்க முடியாது.

2005 ம் ஆண்டு தேர்தலில் மகிந்த வெற்றி பெறுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் தமிழர்கள் தான். அத்தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததால் தான் ரணில் விக்கிரமசிங்கவை 1.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜபக்ச ஜனாதிபதியாக முடிந்தது. மகிந்த ஜனாதிபதியாக வருவதற்கு காரணமாக இருந்த தமிழர்களே இப்போது அவரை தண்டித்திருப்பது இனிமையான பழிவாங்கல் தான்.

தை உணர்ந்து ஈழத் தமிழர்கள் பிரச்னையில் எச்சரிக்கையுடனும், நன்றியுடனும் மைத்திரிபால சிறிசேன நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் இலங்கையின் புதிய நிர்வாகம் நிறைவேற்றுவதை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ராஜபக்சேவை தோற்கடித்த தமிழ் மக்களுக்கு நன்றி: திருமாவளவன்


விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இலங்கை அதிபருக்கான தேர்தலில் இனப்படுகொலை குற்றவாளியான கொடுங்கோலன் ராஜபக்சேவை தண்டித்த இலங்கை மக்களை குறிப்பாக, தமிழ் மக்களை விடுதலைச்சிறுத்தைகள் பாராட்டுகிறது.

தமிழ் மக்களிடையே மட்டுமின்றி சிங்கள மக்களிடையேயும் ராஜபக்சே தம்முடைய நடவடிக்கைகளால் வெறுப்பை சம்பாதித்துள்ளார் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து நிரூபணமாகியுள்ளது.

இனவெறியை வைத்து அரசியல் நடத்த முனையும் எல்லோருக்கும் இதுவொரு பாடமாகும். தற்போது மைத்ரிபால சிறீசேனா அதிபராக வெற்றி பெற்றிருப்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதோ, நம்பிக்கை அளிக்கக்கூடியதோ அல்ல. எனினும் முதல் கட்டமாக ஜனநாயக வழியில் ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்னும் ஆறுதல் கிடைத்துள்ளது.

இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை ஆதரிக்கவேண்டாம் என தமிழ் மக்கள் மன்றாடிய போதும் அதை அலட்சியப்படுத்திவிட்டு வெளிப்படையாகவே ராஜபக்சேவை நரேந்திரமோடி தலைமையிலான இந்திய ஆட்சியாளர்கள் ஆதரித்தனர்.

இனியாவது இந்திய நலன்களையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியானது என்பது நிரூபணமாகியுள்ளது. புதிய அதிபர் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற அதேவேளையில் தமிழர்களுக்கான அதிகார பகிர்வை செய்வதற்கு முன்வரவேண்டும்.

அத்துடன் முள்வேலி முகாம்களில் இன்னும் சிறைப்படுத்தப்பட்டு இருப்பவர்களையும் சந்தேகத்தின் பெயரில் சிறைப்படுத்தப்பட்டு இருப்பவர்களையும் நல்லெண்ணத்துடன் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மேலும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைக்காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரம் பெறுவது மட்டுமே தமிழர்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்துவிடாது. தமிழர்களிடையே மீண்டும் நிலவும் சாதிய பிரச்சனைகளையும் களைந்து அனைவரும் தமிழர்தான் என்ற உணர்வை ஏற்படுத்தும் பெரும் பொறுப்பு வடக்கு மாகாண அரசுக்கும் தமிழர் அமைப்புகளுக்கும் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தேயிலைத்தோட்டங்களில் அல்லலுறும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும், இப்போதும் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பஞ்சமத்தமிழர்களுக்கும் காணி உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வடக்கு மாகாண அரசும் இலங்கையின் புதிய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என்று கூறியுள்ளார்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டு இலங்கை தேர்தல் முடிவு: விஜயகாந்த்

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தல் சம்மந்தமாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை:

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திரு.மைத்ரி பால் சிறிசேனா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தி, ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றி, அப்பாவி தமிழின மக்களையும், கொன்றுகுவித்து அநீதி இழைத்த ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வாக்குகள் மூலமாக நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த உலகத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை அடைந்து தான் ஆகவேண்டும். “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்ற நம்தமிழ் பழமொழிக்கு மிகசிறந்த எடுத்துகாட்டாக, இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. புதியதாக அமையப்போகும் மைத்ரி பால் சிறிசேனா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று, அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளையும், தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே குடியமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” ஆகும்.

-நக்கீரன்-

இலங்கை அரச தலைவர் தேர்தலில் வீழ்த்தப்பட்டான் இனப்படுகொலையாளன் ராஜபக்சே!- பண்ருட்டி தி. வேல்முருகன்

ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை போராடுவோம்! தமிழர் வாக்குகளால் வென்ற மைத்ரிபால சிறிசேனா பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்!

இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் சொந்தங்களைப் படுகொலை செய்த 21-ம் நூற்றாண்டின் மிகப் பயங்கர கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான்.

ராஜபக்சேவின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்களது வாக்குகளை செலுத்தி சர்வதேச சமூகத்துக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாடு இதுவே என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய அரச தலைவராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்க இருக்கிறார். அரச தலைவர் தேர்தலில் வென்றுவிட்டாலும் ராஜபக்சேவுக்கும் மைத்ரிபாலவுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லைதான். இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான்..

இருப்பினும் ஈழத் தமிழர் வாக்குகளால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சே வழியில் செல்லாமல் தமிழரின் நியாயமான அரசியல் விருப்பங்களை மதித்து நடக்க வேண்டும்.

ஈழத் தமிழினத்துக்கான சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்கள் விரும்புகிற அரசியல் தீர்வை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் அவை மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மைத்ரிபால சிறிசேன மேற்கொள்வதுதான் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் செய்யப் போகிற முதன்மையான நன்றிக் கடனாக இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினம் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்தும் மதித்தும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவத்தினரை விலக்க வேண்டும்; தமிழீழத் தலைவர்களான பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன், யோகி மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர் நிலை என்ன என்பது குறித்து புதிய இலங்கை அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும்.

தமிழினப் படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணைக் குழுவை அனுமதித்து தமக்கு வாக்களித்த தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு மைத்ரிபால சிறிசேன முன்வர வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் இலங்கை அரச தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டான் ராஜபக்சே என்பதோடு நமது பணி முடிந்துவிடவில்லை. இத்தனை கொடூரங்களை அரங்கேற்றிய ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி போர்க்குற்றங்களுக்கான உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தரும் வரை உலகத் தமிழ்ச் சமூகத்தின் பணி ஓய்ந்துவிடாது. இதுவரை அரச தலைவர் என்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டு சர்வதேச சமூகத்துக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த ராஜபக்சேவுக்கு போர்க்குற்றங்களுக்கான தண்டனை பெற்றுத் தருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் உலகத் தமிழ்ச் சமூகம் ஒருங்கிணைந்து விரைவுபடுத்துவோம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி