மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலையின் நினைவு நாள் இன்று

0
698

kokkaddichcholaiமட்டக்களப்பு மகிழடித்தீவு இறால் பண்ணைப் படுகொலை நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணையில் 133 தமிழர்கள் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே உள்ள 6கிராமங்களை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினர் தரை மற்றும் வான்வழியாக நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி 28ஆம் திகதி ஆரம்பமான இத்தாக்குதல் மூன்று நாட்களாக நடைபெற்றது.

மண்முனைத்துறைக்கும் மகிழடித்தீவிற்கும் இடைப்பட்ட வயல்பிரதேசத்தில் அமைக்கபட்டிருந்த இறால் பண்ணையிலேயே படுகொலை ஆரம்பிக்கப்பட்டது.

அமெரிக்க கொங்கொங் நாட்டு கூட்டு நிறுவனம் ஒன்று நடத்தி வந்த இறால் பண்ணையில் வேலை செய்து வந்த உள்ளுர் மக்கள் 23பேரை சுற்றிவளைத்து கைது செய்த படையினர் அவர்களை அக்கிராம சந்தியில் வைத்து சுட்டுக்கொன்ற பின் உடல்களை பழைய ரயர்களை போட்டு அந்த இடங்களிலேயே எரித்தனர்.

அதன் பின்னர் முதலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்து கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் சுட்டுக்கொன்றனர். படகுகளில் தப்பி சென்ற பொதுமக்களையும் உலங்குவானூர்யில் வந்த வான்படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலில் 12வயதுக்கு உட்பட 7சிறுவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட போதிலும் 133பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டது. பலர் காணாமல் போயிருந்தனர். மூன்று நாட்களாக அக்கிராமங்களுக்கு யாரும் செல்ல முடியாத படி தடைகளை போட்டிருந்த விசேட படையினர் மிகக்கொடூரமான இப்படுகொலைகளை நடத்தியிருந்தனர்.

இதன் பின்னர் 1991 யூன் 12ஆம் திகதி மீண்டும் இராணுவத்தினரால் இக்கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 166பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 400க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அரிசி ஆலை ஒன்றில் பணிபுரிந்த 17 பொதுமக்களை அரசி ஆலையுடன் தீவைத்து எரித்தார்கள்.