Tamils-election“வெற்றி தோல்வி முக்கியமில்லை. அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டு செல்ல வேண்டும்.” தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்

 

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ததேமமு படுதோல்வி அடைந்ததை பலரும் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஆனால் அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை யாரும் உணாந்ததாகத் தெரியவில்லை.

 

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ததேமமு தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிந்த மறுகணமே ததேமமு யினரையும் அவர்களது அனுதாபிகளையும் தொடர்பு கொண்டு. ‘பிராந்திய – மேற்குலக சதி வலையமைப்பின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இனஅழிப்புக்கு வெள்ளையடித்து. ஐநா விசாரணைகளை நீர்த்துபோக செய்து தமிழர்களுக்கான நீதியை குழி தோண்டிப் புதைக்கவே இந்த தேர்தல் வழி கோலப்போகிறது. எனவே இந்த தேர்தலை புறக்கணிப்பது மட்டுமல்ல கட்சியையும் கலைத்து விட்டு மக்கள் – மாணவர்கள் இணைந்த அரசியல் இயக்கத்தை வளர்த்து எடுங்கள். அதுதான் இந்த பிராந்திய – மேற்குலக சதிவலையை அறுத்தெறிய ஒரே வழி’ என்று கேட்டோம் என்பதைவிட கெஞ்சினோம் என்பதே சரியானதாகும்.

 

ஆனால் ஆனால் கெடுகுடி சொல் கேளாது என்பதற்கு ததேமமு நல்ல உதாரணம்.

 

ததேமமு தமது அரசியல் வங்குரோத்துதனத்தின் காரணமாகப் புதிய அவதாரம் எடுத்தததன் விளைவு இது. பதவி கதிரைகளுக்காக தடம்மாறி “புலீ நீக்கம்” செய்யும் அரசியல் வரை சென்ற ததேமமு  எமது கருத்துக்களை கேட்கவா போகிறது?

 

தேர்தலில் பங்கெடுத்து ததேமமு கணிசமான இடங்களை கைப்பற்றினால் ஒரு சாத்தியமான அரசியலை எழுத முடியும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது துளியளவும் சாத்தியமில்லை என்பதை மறந்து கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

 

நாங்கள் வெறுத்துப்போய் ஒரு சவாலாகவே எமது கருத்தை முன்வைத்தோம். ‘ததேமமு ஒரு இடத்தைட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைவதுடன் கட்டுப்பணத்தையும் இழப்பார்கள் என்பது மட்டுமல்ல கூடவே தமிழ்த்தேசிய வாக்குகளை சிதைத்து குறிப்பாக யாழில் டகளசுக்கும் விஜயகலா அல்லது அங்கஜனுக்கு சீட் கிடைக்க வழி கோலுவார்கள்’ என்று..

 

இதில் ஒரு விடயம் கூட நடக்காவிட்டாலும் எமது ஊடகத்தை முடிவிட்டு வனவாசம் சென்று விடுகிறோம்’ என்றும் அழுத்தமாக எழுத்துபூர்வாக அனுப்பி வைத்தோம். ததேமமு அல்லாத பல ஊடகவியலாளர்கள் அரசியற் செயற்பாட்டாளர்களிடம் கூட இதை ஆணித்தரமாக முன்வைத்திருந்தோம்.

 

அப்போது இதை நம்ப மறுத்து கேலி பேசிய ததேமமு அனுதாபிகள் தற்போது தமது கைத்தொலைபேசிகளை அணைத்துவிட்டு எமக்கு பதிலாக அவர்கள் வனவாசம் போய் விட்டார்கள்.

 

நாம் இவ்வளவு துணிச்சலாக சொல்லும்போதே ததேமமு யினர் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் பட்டுத்தான் தெளிவோம் என்று அடம் பிடித்தார்கள். மக்கள் தெளிவாக படிப்பித்து அனுப்பியிருக்கிறார்கள்.

 

இதைக் கணிப்பதற்கு ஒன்றும் பெரிய அறிவோ மூக்கு சாத்திரமோ  தேவையில்லை. 3 தசாப்த காலமாக தமிழீழம் என்ற நடைமுறை அரசை கட்டியெழுப்பி ஆண்ட புலிகளின் சிந்தனையின் வழி நின்று மே 18 இற்கு முன்பும் பின்புமான மக்களின் உளவியலை மெல்ல அணுகினாலே போதும் கூட்டமைப்பு தவிர்ந்த யாரையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பது மட்டுமல்ல அதை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

 

அதற்காக கூட்டமைப்பினர் யோக்கியர்கள் என்று அர்த்தம் அல்ல.. கூட்டமைப்பு தொடர்பாக அது முரண்பாடான  அமைப்பாக இருந்த போதும் மக்கள் அதற்கு வேறு ஒரு கணிதத்தையே பிரயோகிக்க விரும்புகிறார்கள்.

 

அது என்ன என்பதை பல தடவை எழுதி எமக்கே சலித்துவிட்டது. எமது முன்னைய பதிவுகளில் அதை வாசித்து அறிந்து கொள்ளலாம்.

 

புலிகள் தாங்கள் பங்கெடுக்கவிட்டாலும் புறச்சூழலின் நெருக்கடிகளையும் அதன் விளைவுகளையும் முன்னுணர்ந்து தேர்தல் அரசியலுக்கு வழிவிட்டு சில சமயங்களில் ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். அதன் விளைவாக பிறந்ததுதான் ‘தமிழத் தேசிய கூட்டமைப்பு’

 

மக்கள் மே 18 இற்கு பிறகு தமக்கான ஒரு மக்கள் – போராளித் தலைமையை மீள அடையாளம் காணும்வரை ஒரு தற்காலிக பாத்திரமாக தமிழ் அரசியல்வாதிகளை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது நிரந்தரமான பதவி இல்லை என்பதை தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

மக்கள் தமிழரசுக்கட்சிக்கோ அல்லது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு எந்த கட்சிகளுக்கோ தனித்த எந்த அங்கீகாரத்தையும் வழங்கிவிடவில்லை – இனியும் வரலாற்றில் அதை வழங்கப்போவதும் இல்லை.

 

 

கள யதார்த்தத்தை உணர்ந்து ஒரு தற்காலிக பாத்திரமாக ஒரு அரசியல் அமைப்பின் அவசியம் கருதி ஒரு ‘கூட்டு’ அமைப்பிற்கே தமது அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். தமிழத்தேசிய கூட்டமைப்பு இன்றளவும் நின்று பிடிக்கும் மர்மம் இதுதான்.  தனித்தீவாக ஏகப்பட்ட கொள்கை முரண்பாடுகளுடன் தேர்தலில் போட்டியிட்ட ததேமமு கட்டுப்பணம் இழந்த கதையின் பின்புலமும் இதுதான்.

 

ததேமமு மீது எமக்கு எந்த  தனிப்பட்ட பிரச்சினையுமில்லை. அது புலிநீக்க அரசியல் செய்ய புகுந்த போதும் சரி தற்போது தேர்தலில் கூட்டமைப்பை எதிர்த்து களம் புகுந்து அவமானகரமாக தோல்வியுற்று ஒருதமிழ்த்தேசிய இயக்கத்தின் மீது கறைபடிந்து அது மக்களிடமிருந்து அன்னியப்ட்டுபோவதை நாம் விரும்பாததே எமது அனைத்து முயற்சிகளுக்கும் காரணம். ஆனால் விதி வலியது.

 

தற்போது தமது தோல்விகளுக்கு மக்களை நோகத்தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் உங்களுக்கு இப்படித்தான் தீர்ப்பை வழங்குவார்கள் என்று நாம் முன்னறிவித்ததை மறந்து பிதற்றுவது ஏன்?

 

கூட்டமைப்பை அதன் முரண்பாடுகளுடன்தான் மக்கள் ஏற்றுள்ளார்கள். தேர்தல் அரசியல்வாதிகளிடம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பது மக்களுக்கு தெரியும். எனவே அந்த இடத்தை மேவ இன்னொருத்தர் வருவதை மக்களால் இரசிக்க முடியாது.

 

தமிழீழ நடைமுறை அரசில் புலிகள் துணை இராணுவக்குழுக்களாக செயற்பட்ட இயக்கங்களை கூட்டமைப்பிற்குள் உள்வாங்கியபோது தாயகத்திலும் புலத்திலும் ஒரு அதிருப்தி அலை உருவானபோது அரசியற்துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் அதற்கு ஒரு தெளிவை தந்திருந்தார்.

 

‘ அவர்களை ஒரு தற்காலிக பாத்திரமாக முரண்பாடுகளுடன்தான் அனுமதித்து இருக்கிறோம். அவர்களால் ஒரு எல்லைக்கு மேல் எதனையும் செய்ய முடியாது. ஆனால் களச்சூழல் கருதி அவர்களை அங்கீகரிக்க வேண்டியிருக்கிறது. எனவே நீங்களும் அதை கடைப்பிடியுங்கள்’ என்றார். மக்கள் இன்றளவும் அதை தொடர்வதாகவே தெரிகிறது.

 

எனவே மக்களை படிக்காமல் தேர்தலில் குதித்து விட்டு மக்களின் மீது பழியை திருப்பிவிடுவது அரசியல் வறுமையாகவே கருத வேண்டியுள்ளது.

 

போதாதற்கு ததேமமு தொடர்பாக ‘கூட்டமைப்பை உடைக்கும் துரோகிகள்’  என்ற மனப்பிம்பம் 2010 இல் ஆழமாக மக்கள் மனதில் ஊன்றப்பட்டுவிட்டது.  ஆனால் உண்மை அதுவல்ல. அந்த பிம்பம் திட்டமிடப்பட்ட ஒரு சதியின் விளைவாக பின்னப்பட்டது என்பது வேறு கதை. ஆனால் மக்கள் மனதில் அது பதிந்து போனது ஒரு துயரநிலைதான்.

 

இது போதாது என்று ததேமமு கடந்த சில மாதங்களாக நுட்பமான முறையில் தமிழீழ நடைமுறை அரசை நிர்முலம் செய்து புலிநீக்க அரசியலை காவும் கும்பல்களை தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டது. இதுவும் ததேமமு இன் வாக்கு வங்கியில் குறிப்பான ஒரு சரிவை உண்டாக்கியது.

 

குறிப்பாக ‘புலிகளை உலகின் மன்னிக்க முடியாத போர்க்குற்றவாளிகள்’ என்று புலம்பித்திரியும் நிலாந்தன் வகையறாக்களுடன் கைகோர்த்தது தீவிர புலி விசுவாசிகளிடமிருந்து அன்னியப்பட வைத்தது.

 

எமது இணையததில் இது குறித்து ததேமமு ஐ கண்டித்து நாம் எழுதிய பத்தியை  தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வடமராட்சி பகுதியில் குறிப்பாக வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் இளைஞர்கள் விநியோகித்ததாக அறிந்தோம். கஜேந்திரகுமார் புலிகளின் கோட்டையான வடமராட்சியில் பெரியளவு வாக்கை குவிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ‘புலிகளை திட்டுபவனை மேடையேற்றாதீர்கள’ என்று நாம் எச்சரித்ததை காது கொடுக்காததன் விளைவை இன்னு அறுவடை செய்திருக்கிறது ததேமமு. இது தேவையா?

 

போதாததற்கு தமக்கு ஆதரவளிக்காதவர்கள் மீது இணையம் மற்றும் ஊடகங்கள். வாயிலாக ததேமமு ஆதரவாளர்கள்  சேறு பூசியதும் மக்களுக்கு ஒரு அதிருப்தியை தந்ததென்றே சொல்ல வேண்டும். உடக அறம் எல்லாம் காற்றில் பறந்து கும்மாளமிட்டது. குறிப்பாக அனந்தி எழிலன் தமக்கு ஆதரவு தராததால் சிங்களத்துக்கு விலை போய்விட்டதாக கதை அளந்தார்கள். வெறுத்து போன  அனந்தி ஒரு கட்டத்தில் ‘ கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்’ என்று பகிரங்கமாக பேசியதும் ததேமமு இன் வாக்கு சரிவில் தாக்கத்தை உண்டு பண்ணியது.

 

இதை விட பெரிய ஒரு கொமடியும் நடந்தது. சுமந்திரன் ஒரு தமிழ்த்தேசிய விரோதி என்பது குழந்தைகளுக்கும் தெரியும். அதை தனியாக பட்டியலிடத் தேவையில்லை. ஆனால் ததேமமு யினர் அதற்கும் அப்பால் சுமந்திரன் செய்யாத கூத்துக்களையும் செய்ததாக இணையங்களில் பொங்கியபோது வெறுத்துப்போன பலர் சுமந்திரனுக்கு சார்பாக பேச தலைப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன பலர் குறிப்பாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் போன்றவர்கள் சுமந்திரனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் நிலை உருவானது. தூக்கியெறியப்பட வேண்டிய சுமந்திரன் கணிசமான வாக்குகளை குவித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

 

கடந்த வடமாகாணசபை தேர்தலின்போது எல்லோரையும் வெற்றியடைய வைத்துவிட்டு மக்கள் மிக நுட்பமாக அனந்தசங்கரியை தோற்கடித்தார்கள். மக்களுக்கு அவ்வளவு தெளிவு. அது போல் சுமந்திரனையும் இந்த தேர்தலில் தோற்கடித்திருப்பார்கள். ஆனால் ததேமமு தேர்தலில் போட்டியிட்டு – அவதூறுகளை பரப்பியதனூடாக ஒரு அனுதாப அலையை சுமந்திரன் மீது திருப்பி அவரை வெற்றி பெற வைத்துவிட்டார்கள்.

 

தேசியப்பட்டியலில் வந்தே சுமந்திரன் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது மக்களின் ஆணையில் வென்றிருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை.. நினைத்துப் பார்க்கவே கண்ணைக் கட்டுது.

 

இது அனைத்தையும் விட பெரிய கூத்து. ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற போர்வையில் நடந்த கூத்துத்தான்.. எது மாற்றம்? அவர்களுக்கே தெளிவில்லை. கஜேந்திரகுமார் என்ற ஒரு மனிதரை சிங்கள நாடாளுமன்றம் அனுப்புவது மாற்றம் என்று அவர்கள் வரையறுத்துக்கொண்டது அரசியல் வறுமையின் – வங்குரோத்துதனத்தின் உச்சம்.

 

கணினியின் முன்னிருந்து கொண்டு விசைப்பலகையை முடுக்கி தாயக மக்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டிருந்தது ஒரு கும்பல். தாயக மக்கள் இதை இரசிக்கவிலலை என்பது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் கடும் சினத்திற்கும் ஆளானார்கள். தமது வாக்குகள் முலம் அந்த சினத்தை தீர்த்து கொண்டார்கள்.

 

கவிஞரும் பேராசிரியருமான சேரன் அவர்கள் இதை ‘ரிமோட் கொன்ட்ரோல் அரசியல்’ என்று விமர்சித்திருந்தது இதை உணர போதுமானது. ஆலோசனைகள் சொல்லலாமேயொழிய தாயக மக்களை புலத்திலிருந்து யாரும் கட்டுப்படுத்த முடியாது.

 

மக்கள் தெளிவாக இருந்தார்கள் – இருக்கிறார்கள். ததேமமு இன் படுதோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. ஏனைய தேர்தல்களை புறக்கணித்ததுதான் அது.

 

ஒரு ஆசிரியர் மிக எளிமையாக சொன்னார். மக்கள் அனைத்து தேர்தல்களிலும் வாக்குகளை பயன்படுத்துவதென்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே இந்த ஒரு தேர்தலுக்கு ததேமமு ஏனைய தேர்தல்களுக்கு கூட்டமைப்பு என்று கிறுக்குத்தனமான முடிவை எடுக்க மக்கள் தயாராக இல்லை. சரியோ பிழையோ ஒரு கட்சி.. மிக எளிமையான கொள்கை.

 

அடுத்து வெல்ல வேணும் என்பதற்காக ததேமமு யினரும் அவர்களது பினாமிகளும் புலியெதிர்ப்பாளர்கள். தமிழ்த்தேச விரோதிகள் என்று வேறுபாடில்லாமல் அவர்களது கருத்துக்களை காவத் தலைப்பட்டார்கள். இதன் உச்சமாக 2010 ததேமமு ஐ உடைத்து அதன் தோல்வியில் பெருமளவு பங்காற்றிய – குறிப்பாக ததேமமு இன் முன்னாள் தலைவரும் அதன் முதன்மை வேட்பாளராகவுமிருந்த ஆசிரியர் வரதராசனை ததேமமு இல் இருந்து வெளியேற்றிய சூத்திரதாரியான வழுதி என்கிற பரந்தாமன் என்கிற நபரின் கருத்தையும் காவித்திரிந்தார்கள். ததேமமு மீதான கடைசி நம்பிக்கையும் தகர்ந்த  தருணம் இது. வாக்குகளுக்காக யாருடனும் கூட்டு சேருவோம் என்பதை அடித்து நிருபித்த நிகழ்வு இது. கடைசி நேரத்தில் ஓரளவு அரசியல் புரிந்தவர்கள் ததேமமு க்கு எதிராக வாக்களிக்க இதுவும் ஒரு காரணம்.

 

இப்படி தேடித்தேடிப்போய் ஆப்பில் குந்தியது ததேமமு. மக்கள் சேர்த்து வைத்து இறுக்கி விட்டார்கள். இதற்கு மக்களை நொந்து என்ன பயன்?

 

அடுத்து ததேமமு தோற்றுவிட்டது என்பதற்காக வென்ற கூட்டமைப்பு ஒன்றும் யோக்கியர்கள் கிடையாது. சும்மாவே இணக்க அரசியல் என்ற போர்வையில் இனத்தை விற்றவர்கள். இனி மக்கள் ஆணை என்ற பெயரில் கூவி கூவி விற்கப்போகிறார்கள்.

 

போதாததற்கு ரணில் வேறு பிரதமராகிறார்.. சொல்லி வேலையிலலை. உள்ளக விசாரணையைக் கொடுத்துவிட்டு ஐநா ஒதுங்கிவிடும். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடரும். தமிழனின் கடைசி கோமணமும் காற்றில் பறக்கும்.

 

என்ன செய்ய போகிறோம்?

 

நமது கவலையெல்லாம் எம் போன்றவர்கள் சொன்னதை கேட்டு ததேமமு தேர்தலை புறக்கணித்து ஒரு அரசியல் இயக்கமாக செயற்பட்டிருந்தால் கூட்டமைப்புக்கு ஒரு கடிவாளத்தை போட்டிருக்கலாம். மேற்குலக – பிராந்திய சதியையும்  மக்கள் – மாணவர் போராட்டங்களினூடாக எதிர்கொண்டிருக்கலாம்.

 

தற்போது மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மக்களின் ஆணையை மீறி எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள் என்று கூட்டமைப்பினர் புறம் தள்ளப்போகிறார்கள்.

 

நடந்ததை பேசி பயன் இல்லை.. தோல்விகளிலிருந்து பாடத்தை படிப்போம். அடுத்த தலைமுறைக்கு தேர்தல் அரசியலை தாண்டி தலைமை தாங்கும் பண்பும் தகுதியும் ததேமமு க்கு இருப்பதாக நாம் இன்னும் அழுத்தமாக நம்புகிறோம்.

 

எனவே தேர்தல் அரசியலுக்கு அப்பால் தாயகத்தில் மக்களையும் மாணவர்களையும் ஒன்றிணைத்து ஒரு அரசியல் இயக்கமொன்றை கடடியெழுப்ப ஒன்றிணையுமாறு ததேமமு க்கு அறைகூவல் விடுக்கிறோம்.

 

 

“வெற்றி தோல்வி முக்கியமில்லை. அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டு செல்ல வேண்டும்.” என்றார் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்

 

எனவே அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றை சொல்வோம்.. விடுதலையை வென்றெடுப்போம்.

 

ஈழம்ஈநியூஸ்.

election1