2009 இல் இறுதி இனஅழிப்பு நடந்து முடிந்து அழிக்கப்பட்டவர்கள் போக மீதிப்பேர் இனஅழிப்பு வதை முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்க யாழ் புகையிரத நிலையத்தில் ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்களை கொண்டுவந்து இறக்கியது இனஅழிப்பு அரசு.

“போரினால் இடம் பெயர்ந்தவர்களாம், அவர்கள் மீள குடியேற வந்திருக்கிறார்களாம்” என்ற வியாக்கியானம் சொல்லப்பட்டது.

சம்பூர் தொடக்கம் வலிகாமம் வரை வருடக்கணக்காக தமிழ் மக்களை மீளக்குடியேற விடாமல் தமிழர் நிலத்தை கபளீகரம் செய்துள்ள இனஅழிப்பு அரசு சிங்களவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிலத்தை தேடியது.

land-crab
முடிவாக நாவற்குழியில் அவர்களை குடியேற்றியது.

தமிழ் அரசியல்வாதிகளாலோ, மெத்த படித்த தமிழ் மேதவிகளாலோ இது கண்டுகொள்ளப்படவும் இல்லை, இதை தடுக்கவும் முடியவில்லை.

இது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மிக மோசமான ஒரு பகுதி என்று உணர்ந்த எம்மைப் போன்ற சிலர் கூட ஒரு 15 அல்லது 20 வருடங்களில் இவர்கள் யாழ்ப்பாணத்தின் நிரந்தர குடிகளாகி மாறி தமிழ் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றே கணித்திருந்தோம்.

ஆனால் எமது கணிப்பை தலைகீழாக்கியிருக்கிறது. அங்கிருந்து வந்த ஒரு செய்தி.

அதாவது தமிழ் நிலத்தை ஆக்கிரமித்த சிங்களவர்களில் ஒரு சிங்களப் பெண்மணி சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்.

நான்கு வருடங்களில் நிலத்தை பிடித்து விகாரையை கட்டி, சிங்களப் பாடசாலையை உருவாக்கி நிலத்திற்காள காணி உறுதிகளை பெற்று, வாக்காளர் அட்டையையும் பெற்று தற்போது அவர்களுக்குள்ளிருந்து ஒரு சமாதான நீதவானும் “உருவாக்க”ப்பட்டுள்ளார்.

மிக வேகமான “கட்டமைக்கப்பட்ட” இனஅழிப்புக்கு இதைவிட சிறந்த உதாரணம் உலகில் இருக்க முடியாது.

“எமது நிலத்தை எமக்குத் தா, எமது காணியைத் தா, எமது வீட்டைத்தா” என்று தமிழர்கள் சம்பூர் தொடக்கம் வலிகாமம்ரை வீதியில் நின்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க சத்தமில்லாமல் நாவற்குழியில் இனஅழிப்பு அரசு இதை சாத்தியமாக்கியிருக்கிறது.

தென்தமிழீழம் கிட்டத்தட்ட குடியேற்றங்களால் பறிபோய்விட்டது. வன்னியின் எல்லையோரக் கிராமங்களும் மெதுமெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இவை எல்லையோரங்களை அண்டியுள்ளதால் நம்மால் அதை தடுப்பது கடினம் என்ற ஒரு வாதத்தை தமிழ் அரசியல்வாதிகள் வைக்கலாம். ஆனால் முழுமையான தமிழர் பகுதியில், அதுவும் யாழ் குடா மத்தியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதை எப்படி இவர்களால் தடுக்க முடியாமல் போனது?

வலி வடக்கு, வலி கிழக்கு, தென்மராட்சி, வடமராட்சி என்ற நான்கு வலயங்களாக உள்ள யாழ் குடாவை துண்டாடி புதிதாக ஒரு வலயத்தை உருவாக்கும் திட்டம் இனஅழிப்பு அரசிற்கு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி வருகிறது.

இது நாவற்குழிப்பகுதி மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியோடு வன்னியை இணைக்கும் சில நிலங்களையும் சேர்த்து பிரிக்கப்படும் என்றே நம்பப்படுகிறது.

ஏனென்றால் அங்குதான் அரச காணி என்ற பெயரில் இன்னும் மேலதிக சிங்களவர்களை குடியேற்றக்கூடிய வாய்ப்புள்ள நிலப்பகுதி இருக்கிறது.

நாம் இவர்கள் யாழ் புகையிரத நிலையத்தில் வந்து இறங்கிய போதே இவை அனைத்தும் ஊகித்த விடயம் என்றாலும் இவ்வளவு வேகமாக இவை நடந்தேறும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.

தமிழ் இனப்பரம்பலை தளம்பச் செய்து இனவிகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட இனஅழிப்பின் அதியுச்ச நிகழ்வு இது.

எல்லைகளை பாதுகாப்பதிலும், இனவிகிதாசாரத்தை பேணுவதிலும் நாம் கோட்டைவிட்டு விட்டு போராடுவதாக, அரசியல் செய்வதாக பிதற்றுவது எமது மக்களையே நாம் ஏமாற்றும் நயவஞ்சக நாடகமாகும்.

எதிர்வரும் காலத்தில் தமிழீழத்தின் வடக்கு கிழக்கில் ஒரு வாக்கெடுப்பு நிகழும்போது அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்களும் வாக்களிக்கத் தகுதியானவர்களே என சிறீலங்கா அரசு கூறுமானால் வாக்கெடுப்பின் வெற்றி என்பது கேள்விக்குறியானதே.

தமிழ் அரசியல்வாதிகளும் கோட்சூட் போட்டபடி குளிருட்டப்பட்ட அறைகளில் கருத்தரங்குகள் என்ற போர்வையில் மக்களுக்கு புரியாத மொழியில் கூட்டம்போட்டு பொழிப்புரை, சிறப்புரை ஆற்றும்; படித்த கனவான்களும் மக்களுக்கு இனியாவது உண்மையை சொல்ல வேண்டும்.

உங்களால் எந்த ஆணியும் புடுங்கேலாது என்பதை பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்து மக்களை போராடச்சொல்லி இனியாவது சொல்ல வேண்டும்.

சொல்வார்களா.?

அல்லது தமது பிழைப்பை பார்த்துக் கொண்டு தமது பதவி கதிரைகளை தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்து தமது பிழைப்புவாதத்தை தொடரத்தான் போகிறார்களா?

ஈழம்ஈநியூஸ்.