சிறீலங்கா அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடம் என்பது ஒரு அழிவு நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதை அதன் தலைவர்களும், ஆதரவாளர்களும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளனர்.

 
எனவே தமது கட்சியையும், அதன் மூலம் சிறீலங்கா அரசிடம் இருந்து பெறும் சலுகைகளையும் அனுபவிப்பதற்கான தப்பிப்பிழைக்கும் போராட்டம் ஒன்றை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

 
அதனை அவர்கள் இரண்டு பிரிவாக முன்நகர்த்துகின்றனர், ஒன்று புலிநீக்க அரசியல் (அதாவது விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல்) இரண்டாவது தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் பொறிமுறை.

 
ஓவ்வொரு பொங்கலுக்கும், தீபாவளிக்கும் தீர்வைக் பெற்றுத்தருவதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தெரிவித்துவரும் நிலையில், தற்போது “ஏக்கய ராஜ்ய” என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்த சிங்களச் சொல்லானது ஒருமித்த நாடு என அர்த்தப்படுத்துவதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

 
எனினும் அதற்கான அர்த்தம் ஒற்றை ஆட்சி என்பதே ஓருமித்த நாடு அல்ல என ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல அதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார், அவரின் கருத்தை ரணில் விக்கிரமசிங்கா நிராகரிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

 
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஏமாற்றும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு இவ்வாறானதொரு தவறான தகவலைப் பரப்புவதற்கான காரணம் என்ன?

 
தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஐக்கிய தேசியக் கட்சி வழங்கும் தேர்தல் நிதி உதவிகளை பெறுவதற்காகவும் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் சிறீலங்காவின் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை தமிழ் மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தாது, சிங்கள மக்களுக்கு அனுகூலமான ஒரு தீர்வை எட்டுவதற்கு பயன்படுத்தியிருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

 
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகள் அற்ற இந்த நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது. மகிந்தா அரசு தங்களுக்கு தலா 30 கோடி ரூபாய்களை தர முன்வந்ததாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார் ஆனால் ரணிலிடம் இருந்து எவ்வளவு வர்ங்கினார்கள் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டதாகவே தமிழ் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

 
தமிழ் மக்களிடம் தோன்றியுள்ள இந்த எதிர்ப்பலைகளை தணிக்கும் முயற்சியாகவே ரணிலின் கருத்துக்கு புதிய வடிவம் கொடுக்க முனைந்துள்ளார் சுமந்திரன். ஆனால் சிங்கள அரசு ஆனது தனது ஒற்றை ஆட்சி கொள்கையில் இருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்பதை உலகம் நன்கு அறியும். அது மட்டுமல்லாது சிறீலங்கா அரசு தான் வழங்கும் உறுதிமொழிகளையும் ஒருபோதும் நிலைவேற்றுவதும் இல்லை.

 
1960 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளில் இருந்து தனது இனத்தை பாதுகாப்பதற்காக சிங்கள அரசு தமிழர் தரப்பின் உதவியை நாடியிருந்தது. அன்று தமிழர் கட்சியாக இருந்து செல்வநாயகம் தலைமையிலான சமஸ்டிக் கட்சி சில நிபந்தனகைளின் அடிப்படையில் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கான ஆதரவை வழங்கியிருந்தது. ஆனால் சிங்கள அரசு தான் வழங்கிய உறுதிமொழிகளை வழமைபோல நிறைவேற்ற தவறியது, தமிழர் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.

 
ஆனால் தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தம்மைக் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினர் சிறீலங்கா அரசுக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்காது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வியூத்தை வகுத்தே செயற்பட்டுவருகின்றனர். தற்போது தமக்கு பாதகமாக ஏற்பட்டுள்ள நிலையை சமாளிப்பதற்காக கூறப்படும் பொய்களை எதிர்காலத்தில் எவ்வாறு சமாளிப்பது என்பதும் அவர்களுக்கு தெரியும்.

 
அதற்கு உதாரணமாக தற்போது சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை இங்கு குறிப்பிட முடியும். அதாவது தனது பொங்கல் மற்றும் தீபாவளிக் கணக்குகள் தவறாகிப்போதற்கு அரசியல் சூழ்ச்சியே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் யார் செய்த சூழ்ச்சி என்பதை அவர் கூறவில்லை.

 
அதனைப்போலவே தற்போது தமது இருப்பைத் தக்கவைப்பது பின்னர் காலம் வரும்போது ஓற்றை ஆட்சியும் ஒருமித்த நாடும் ஒன்று தான் என்று கூறுவதுடன், அதற்கான காரணம் அரசியல் சூழ்ச்சி என்றும் சமாளித்துவிடலாம் என்பது சுமந்திரனின் கணிப்பாக இருக்கலாம்.

 
பொய்களை கூறுவதில் சுமந்திரன் ஒன்றும் சளைத்தவர் அல்ல, பௌத்த மதத்திற்கே சிறீலங்காவில் முன்னுரிமை என சில மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்திருந்தார் அதனை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி ஊடகம் வெளிக்கொண்டுவந்தபோது, தனக்கு சார்பான புலம்பெயர் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது அது தொடர்பில் அரசியல் அமைப்புக் குழுவில் கலந்துரையாடப்படவில்லை என தெரிவித்திருந்தார், ஆனால் தற்போது பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.

 
அதாவது ஏமாறுபவர்கள் இருக்கும்போது ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சம் இருக்கப்போவதில்லை. சிறீலங்கா அரசைப் பொறுத்த வரையில் தனது அரசியல் யாப்புக்களில் மாற்றங்கள் அல்லது திருத்தங்களைக் கொண்டுவரும்போது எல்லாம் தமிழ் கட்சிகளை பயன்படுத்திவருவதுண்டு.

 
19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தபோது, நல்லாட்சி என்ற கோசத்துடன் களமிறங்கின தமிழ்க்கட்சிகள், 1995 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் தீர்வுப்பொதியை அவர்கள் சுமந்து சென்றதும் வரலாறு.

 
சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றால் மத்திய அரசுக்கு அதிகாரங்களை அதிகளவு கொடுத்து நிற்கும் பிரிக்கப்படாத நாடு என்பதே பொருள். ஒரு நாடு ஒரு கொடி ஒற்றை ஆட்சி என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் நடைபெற்ற சட்டவாளர் மாநாட்டிலும், பல தடவைகள் சிறீலங்கா நாடாளுமன்றத்திலும் ரணில் முன்னர் தெரிவித்திருந்தார்.

 
இதனிடையே கடந்த வருடங்களில் சிறீலங்காவில் யாப்பு திருத்தங்களை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தமது யாப்பு திருத்தத்தில் சமஸ்ட்டி ஆட்சி முறைகாகான திருத்தங்கள் எதுவும் இல்லை எனவும், ஒற்றை ஆட்சிக்குள் (ரnவையசல ளவயவரள) தான் அதிகாரங்கள் பகிரப்படும் எனவும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.

 
சிலவேளை இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என சுமந்திரன் எண்ணியிருக்ககூடும்.

 
அது மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக எம். எல். எம். ஹிஸ்புல்லாவை சிறீலங்காவின்அரச தலைவர் மைத்திரி நியமித்துள்ளார். நல்லாட்சியை கொண்டுவந்ததாக வெளி உலகிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டவரே மைத்திரி.

 
ஆனால் மைத்திரியால் கிழக்கின் ஆளுனராக கொண்டுவரப்பட்டவர் மிகப்பெரும் இனவாத மற்றும் மதவாத முஸ்லீம் தலைவராவார். புதிய அரசியல் யாப்பின் வரைவில் வடக்கும் – கிழக்கும் இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என கடந்த 2017 ஆம் ஆண்டு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விட்டிருந்த ஹிஸ்புல்லா ஒட்டமாவடியில் இருந்த தமிழர்கள் வழிபடும் ஆலயத்தை இடித்து அதில் மீன் சந்தையும் கட்டியிருந்தார்.
அதாவது எந்தவித நிபந்தனையுமின்றி கூட்டமைப்பினால் காப்பாற்றப்பட்ட சிங்கள அரசு தனது தமிழ் இனவிரோத நடவடிக்கையை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலியான நாடகங்களால் ஒரு இனம் மீண்டும் தனது அழிவை நோக்கிச் செல்கின்றது.

 
இவ்வாறு மக்களை ஏமாற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அடுத்த பொதுத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது?

 
அதற்கும் அவர்களிடம் திட்டமுள்ளது, தாயகத்திலும், புலத்திலும் தமக்கும் சிறீலங்கா அரசக்கும் ஆதரவான ஊடகங்கள் அவர்களிடம் உண்டு. அது மட்டுமல்லாது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை புறம்தள்ளி அபிவிருத்தி என்ற போர்வையில் கையில் பணத்துடன் களமிறங்கப்போகின்றது கூட்டமைப்பு.

 
அதற்கு வசதியாக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களின் தொகுதிக்கான அபிவிருத்தி நிதியாக (இதனை மறுவளமாக கூறினால் சிறீலங்கா அரசைப் பலப்படுத்தும் தேர்தல் தயாரிப்பு நிதி) 300 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு ரணில் ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன், 100 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டும் உள்ளது.

 
அதாவது சிறீலங்கா படையினரும், தமிழத் தேசியக் கூட்டமைப்பும் அபிவிருத்தியை மேற்கொண்டு விடுதலைப்போரின் தடங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்போகின்றனர். ஆம் ஏற்கனவே பிளவு பட்டு சின்னா பின்னமாகியுள்ள புலும்பெயர் அமைப்புக்கள் இதற்கு எதிராக எதனையும் மேற்கொள்ளமுடியாது என்பதை சிறீலங்கா அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நன்கு அறியும்.

 
அதன் முதல்படியாகவே தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் என்பது விடுதலைப்புலிகளுடன் மேற்கொண்ட ஒரு ஒப்பந்தம் எனவும், ஜனநாயகத் தலைவர்களை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தனர் எனவும் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

 
அதாவது வரலாற்றை திரித்து மீண்டும் பொய்யை உரைத்துள்ளது கூட்டமைப்பு.
1977 ஆம் ஆண்டு திருமலைத் தொகுதியில் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பந்தர் அவர்கள் அதன் பின்னர் 1989 மறறும் 1994 ஆம் ஆண்டுகளில் தொடர் தோல்விகளையே கண்டு வந்தார்.

 
சிறீலங்காவின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்குவதற்கு வசதியாக ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முயற்சியால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக் கூட்டமைப்பு.

 
அதன் மூலம் விடுதலைப்புலிகளின் சாயத்தை பூசியதால் தான் 2001 ஆம் ஆண்டு 40,000 இற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று சம்பந்தர் வெற்றிபெற்றார்.
ஜனநாயகத் தலைவர்களுக்கு விடுதலைப்புலிகள் தண்டனைகளை வழங்கவில்லை, எதிரியுடன் இணைந்து செயற்பட்டவர்கள், தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள், தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்றியவர்களுக்கே தண்டனைகள் வழங்கப்பட்டன.

 
துரையப்பாவின் துரோகத்தை விடுதலைப்புலிகளுக்கு எடுத்துக் கூறி தண்டனைக்கு ஊக்கம் அளித்தது அமிர்தலிங்கம் தான். அதன் பின்னர் நல்லூர் வீரமகாகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவுக்கு வாழை வெட்டுவதற்காக வைத்திருந்த வாளை எடுத்து சுழற்றிய அமிர்தலிங்கம் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் வரும் என தனது தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை ஏமாற்றியிருந்தார்.

 
எங்கே தமிழீழம் என போராளிகள் கேட்டனர், அதன் பின்னர் அமிர்தலிங்கம் கொழும்பில் இருந்து சிங்கள அரசுடன் இணைந்து அரசியல் செய்தார். எனினும் மக்களை ஏமாற்றியதற்கான தண்டனையில் இருந்து அவர் தப்பவில்லை.
தண்டனை வழங்குவதற்காக மேஜர் விசு தலைமையிலான விடுதலைப்புலிகளின் அணி கொழும்பில் உள்ள அவரது மாடி வீட்டின் படிகளில் ஏறியபோது கீழ்த்தளத்தில் இருந்து அமைதியாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் மாவை சேனாதிராஜா என கூறுகின்றது கொழும்பு ஊடகம். 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஏறத்தாள 2,800 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்த மாவை சேனாதிராஜாவுக்கு அதிஸ்டம் கைகூடியது. ஆம் அமிர்தலிங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் அவருக்கு வழங்கப்பட்டது.

 
அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வத்தின் மரணத்தின் பின்னர் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்கப்பட்டிருந்தது.

 
அதாவது அமிர்தலிங்கத்தின் கொலையை மாவை முன்னரே அறிவார் என்பது கொழும்பு ஊடகச் செய்தியின் பொருள். இதனைப் போல தமிழரசுக் கட்சியின்; உள்வீட்டு படுகொலைகள் பல.

 
ஆனால் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தற்போது உள்வாங்கி வளர்த்துவரும் அதன் உறுப்பினர்கள் இந்த வரலாறுகளையோ அல்லது தமிழ் மக்களின் அரசியலையோ தெரிந்து கொள்வதில் ஆர்வம் காண்பிப்பதில்லை, ஏனெனில் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு வரலாறும், அரசியலும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை.

 
நன்றி: இலக்கு வாரஏடு (06-01-2019)