மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழத்தில் ஏதிலிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுநாள் (05/09/2014 ) இன்றாகும்.

மட்டக்களப்பு – 1990 தமிழினப் படுகொலை நாட்கள் மறைந்து போய்விடுமா?

batti-vantharumoolai
கிழக்கு மண்ணில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களை கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மனதிலிருந்து என்றும் அகற்றிவிட முடியாது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இராணுவத்தினர், தமிழ் மக்கள் மீதான அழிப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். அமைதியான முறையில் கைதுகள் இடம்பெற்றன. பின்னர் அவை படுகொலைகளாக்கப்பட்டன. இவ்வாறான சம்பவங்களினாலயே விடுதலைப் புலிகள் இராணுவத்திற்கெதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டிருந்தனர் எனலாம்.

கால ஓட்டத்தில் சில சம்பவங்கள் மறக்கடிக்கப்பட்டாலும் அச்சம்பவங்களினால் மனதில் பதியப்பட்ட தாக்கங்களும் வேதனைகளும் என்றும் அகலாமல் ஆழ்மனதில் அமுங்கிக் கிடக்கும்.

இன்றைய காலகட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்பியல் சம்பவங்களை எமது மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். தாய், தகப்பன், சகோதாரம் என வயது வித்தியாசமின்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிழல்களாக பின்தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

கிழக்கு மண்ணில் செப்டம்பர் மாதம் என்றால் அவர்களின் சிந்தனைகள் எல்லாம் பின்னோக்கியதாக இருக்கும். ஏனெனில் அந்நாட்கள் முழுவதும் எம் மக்கள் சந்தித்த துன்பங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை. அவை என்றும் மறக்கமுடியாத சோக வடுக்களாகவே அனைவரின் இதயங்களிலும் தழும்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்று சொல்லலாம்.

அந்தவகையில், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, சித்தாண்டி முருகன்கோவில் அகதி முகாம் படுகொலை, வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை, சம்மாந்துறை படுகொலை என கிழக்கு மண்ணில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியல்களாகும்.

கிழக்கில் தமிழர்கள் இராணுவத்தினரால் அனுபவித்த அவலங்கள் சொல்லில் அடங்காது. இந்தியப் படையினரின் அழிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து கிழக்கு மண்ணில் படையினர் தங்களது சுயரூபத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர் என்றே கூறலாம்.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல்படையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறான நடவடிக்கைகளை மிக கச்சிதமாக மேற்கொண்டிருந்தனர்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவம் மறக்க முடியாத துயர நாட்களாகப் பதியப்பட்டுள்ளன. இப்படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, இச்சம்பவங்களை மீட்டுப் பார்க்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி, பனிச்சையடி மற்றும் வந்தாறுமூலை ஆகிய பிரதேசங்களில் படுகொலை தாண்டவமாடிய அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனில் காலச்சுவட்டில் பதியப்பட்ட தடயங்களாகும்.

செப்டம்பர் 5ஆம் திகதி 1990 – மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான் படுகொலைச் சம்பவமாகும்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற கொலைக்களத்தில் இருந்து தப்பிய பிள்ளையாரடிக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தர் பின்னாளில் அளித்த வாக்கு மூலத்திலிருந்தே இந்த உண்மைகள் வெளியாகின. இருப்பினும் அவ்வுண்மைகள் என்றும் போலவே அரசாங்கத்தால் மூடிமறைக்கப்பட்டுவிட்டன.

இன்று அரசியல் சித்தாந்தம் பேசித் திரியும் புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட பல ஓட்டுக் குழுக்களைச் சேர்ந்தோர் இப்படுகொலைகளைப் புரிந்தவர்களுக்கு வழிநடத்திக்கொண்டிருந்தார் என்பது அனேகமானோருக்குத் தெரிந்த விடயம். காலத்தால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் மக்கள் மனங்களிலிருந்து மறக்கடிக்கச் செய்யப்பட்டுவிட்டன.

செப்டம்பர் 5ஆம் திகதி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தஞ்சடமைந்திருந்த மக்களை வந்தாறுமூலைக்கு அருகிலிந்த கொம்மாதுறை படைமுகாமைச் சேர்நத இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை வரிசையில் நிற்குமாறு கூறி, முகமூடி அணிந்தவர்கள் கைகாட்டிய 158 இளைஞர்கள் இராணுவத்தினரின் பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் போனவர்கள் போனதடயமே இல்லாமல் போனது.

அடுத்து சத்துருக்கொண்டான் படுகொலை,

சத்துருக்கொண்டான் கிராமத்திற்கு அண்மையில் இருக்கும் இராணுவ முகாம் போய்ஸ்டவுன் கம். அது தற்போது மருவி போஸ்ட் டவுன் கம் என்று மக்கள் பேச்சுவழக்கில் கூறுவதுமுண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த சில இராணுவ முகாம்கள் தற்போது அகற்றப்பட்டிருந்தாலும் போய்ஸ் டவுன் கம் இன்னும் அங்கே உள்ளது. சற்று வித்தியாசம் என்னவெனின் முகாம் அமைந்துள்ள இடப்பரப்பை மட்டும் குறைத்துள்ளனர்.

இம் முகாமிலிருந்து 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மாலை போய்ஸ்டவுன் இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் இணைந்து சுற்றிவளைத்ததுடன் கிராமத்தில் இருந்த சிறுவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பாராபட்சமின்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

சத்துருக்கொண்டானில் ஆரம்பித்து பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி கிராமத்திலும் ஊடுருவி அங்கிருந்தவர்களையும் அழைத்துச் சென்றனர். எனது அம்மா அன்றைய நாட்களை நினைவு கூரும் போது பேசிய சில வார்த்தைகள் என்னை இப்போதும் பாதித்துள்ளது என்பதை மறக்க முடியாது.

ஏனெனில் நான் சின்ன வயதாக இருந்ததால் அச்சம்பவங்கள் ஞாபகம் இருக்க முடியாது. பின்னாளில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் வரும் போது கேட்டு அறிந்துள்ளேன்.

“சம்பவம் இடம்பெற முன்னர் அப்பா, அம்மா எல்லோரும் ஒரு மாதத்திற்கு முன்னரே தேவையான சாமான்களைக் எடுத்துக் கொண்டு எங்களையும் அழைத்துக் கொண்டு மட்டக்களப்பு நகரத்தில் அமைந்துள்ள ஆசிரியர் கலாசாலைக்கு (Training College) இடம்பெயர்ந்து விட்டதாக தெரிவித்தார். கொக்குவில், பனிச்சையடி, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி மற்றம் ஏனைய சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஆசிரியர் கலாசாலையிலேயே இரண்டு மாதங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்திருந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் எனது அம்மாவும் அப்பாவும் சத்துருக்கொண்டானுக்கு வந்தள்ளனர். அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த உறவினர்களையும் அவர்களோடு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு கணவர் வந்ததும் நாங்கள் பின்னேரம் வருகிறோம். நீங்கள் போங்கள் என்று சொன்னதாகவும் அடுத்தநாள் இப்படி ஆமி ஒதுக்கிக் கொண்டு போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அம்மா ஏன் இதனை என்னிடம் கூறினார்கள். என்றால் பக்கத்து வீட்டுக்காரரின் முதல் பெண் பிள்ளையுடன், நான் சேர்ந்து விளையாட அடிக்கடி அவர்கள் வீட்டுக்குத் தான் போவனாம். என்ற ஞாபகங்களை மீட்டுப் பார்ப்பார்கள். ”

ஆனால் இன்று, அக்குடும்பத்தில் அப்பெண்ணின் கணவரைத் தவிர யாருமே உயிருடன் இல்லை. பச்சிளம் குழந்தை உட்பட எல்லோருமே படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.

இன்றும் செப்டம்பர் 9ஆம் திகதி வந்தால் அக்குடும்பத்தின் உறவுகளின் கண்களில் கண்ணீர் தழும்புவதை நான் கண்டுள்ளேன்.

இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அனைவரும் போய்ஸ் டவுன் முகாமில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக கிராமத்தில் இராணுவத்தினர் வருவதை அறிந்து அச்சந்தர்ப்பங்களில் ஒளித்து உயிர் தப்பிக் கொண்டவர்கள் தெரிவிக்கையில் அறியக் கூடியதாக இருந்தது. அது போலவே எனது உறவுகளும் தெரிவித்தன.

இப்படுகொலைச் சம்பவங்களில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் சம்பந்தப்பட்டிருப்பதால் தான் அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் என்றதும் ஒரு வெறுப்புணர்ச்சியும் பயமும் தமிழர்களிடத்தில் காணப்பட்டுள்ளது.

சத்துருக்கொண்டான் படுகொலைச் சம்பவத்தின் நினைவாக, பனிச்சையடிக் கிராமத்தில் நினைவுத் தூபியும் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு தமிழர்கள் செப்டம்பர் 21ஆம்திகதி படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 23ஆம் திகதி 16 இளைஞர்களை விசாரணைக்காக இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாமல் போய்விட்டது. அனைவரும் காணாமல் போனோர் பட்டியலில்…..!

இவ்வாறு கிழக்கு மண்ணில் இராணுவத்தினராலும் ஓட்டுக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச்சம்பவங்கள் அண்மைக்கால அரசியல் மாற்றங்களால் மறக்கடிக்கப்பட்டுவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நினைவுச் சுவடுகள் மறையாமல் ஆறாத வடுக்களாக இன்னும் இருந்துகொண்டேதான் உள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களும் இப்படுகொலை நாட்களை மறந்து விடாமல் மீட்டிப்பார்ப்பது வரவேற்கத்தக்கது என நினைக்கிறேன்.

அன்புச்செல்வன்