மண்டேலாவும் பிரபாகரனும்..

0
731

praba-pottuமண்டேலாவின் மரணத்தை ஒட்டி மீண்டும் “பயங்கரவாதம்” ஒரு விவாதப்பொருளாகியிருக்கிறது. பிரபாகரன் -மண்டேலா ஒப்பீடும் நிகழ்த்தப்படுகிறது.

ஏன் இந்த நீண்டவிவாதம் என்று புரியவில்லை. மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் அது விவாதித்து கண்டறிய வேண்டிய “பொருளாக” இருக்கலாம். ஒரு போராடும் இனமான நமக்கு ஏன் இந்த தடுமாற்றம்?

மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இருந்தால் அது “பயங்கரவாதம்”. மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடினால் அது “விடுதலைப்போராட்டம்”.

mandela8
மண்டேலா “பயங்கரவாதியாக” இருந்து “போராளியான” கதை இப்படித்தான் உருவாகியது.

பிரபாகரனை ஏன் இறுதிவரை “பயங்கரவாதி” யாகவே இருந்தார் என்றால், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக உலகை ஒழுங்கையே மாற்ற முற்பட்டார். அவர் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடவில்லை.

இதைத்தான், “A fleeting moment in my country” என்ற நூலில் பெண்ணிய செயற்பாட்டாளரும் மனித உரிமையாளருமான ந. மாலதி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

“புலிகள் சர்வதேச மட்டத்தில் தனிமைப்பட்டிருந்தாலும் தம் இலக்கை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். முழு உலகையும் எதிர்த்து அதிலும் வெற்றி கொள்வார்கள் போலத் தோன்றியது. விடுதலைப்புலிகள் பற்றிய இத் தகைமையே உலகில் இன்று நிலவும் ஒழுங்கைக் குலைப்பதாக இருந்தது. அடைக்கப்பட்ட ஆட்டு மந்தைகளில் ஒன்று படலையைத் திறந்து வெளியேற அறிந்து கொண்டால் அதைச் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் ஆட்டு மந்தைகள் எல்லாம் தொடர்ந்து வெளியேற ஆரம்பித்து விடும். படலையைத் திறக்க தெரிந்த ஆடுகள்தான் விடுதலைப்புலிகள். உலகத்திற்கு அவர்களை அழிப்பதை தவிர வேறு வழியில்லை”

எனவே மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் உள் மடிந்துபோன மண்டேலாவையும் பிரபாகரனையும் ஒப்பிடுவதே தவறு.

மண்டேலா, பிடல்கஸ்ரோ, சேகுவேரா, கோசிமின், யாசீர் அரபாத் போன்ற தலைவர்கள் வரிசையில் பிரபாகரன் தனித்துவமானவர். அவர் மேற்குலக உலக ஒழுங்கை நிர்மூலம் செய்யும் “பிரபாகரனியம்” என்ற நவீன விடுதலைக்கோட்பாட்டை நிறுவியவர்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் போராடும் இனங்களுக்கு மண்டேலாவின் முன்பாதி வாழ்வுதான் எடுத்துக்காட்டே ஒழிய பின்பாதி வரலாறு அல்ல. ஆனால் “பிரபாகரனியம்” அப்படியல்ல.. போராடும் இனங்களின் ஆன்மா அது. உலக ஒழுங்கை நிர்மூலம் செய்து அது போராட என்றும் உந்துதலாகவே இருக்கும்.

எனவே பிரபாகரன் – மண்டேலா ஒப்பீடே தவறு.

அது வேறு இது வேறு. ஆனால் இரண்டும் அதனதன் தளங்களில் விடுதலைக் கோட்பாடுகளை முன்வைத்தன என்றளவிலேயே ஒன்றுபடுகின்றன.

ஈழம்ஈநியூஸ்ற்காக தாயகத்திலிருந்து ஓவியா.