றுவாண்டாவில் நான்கு மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டதாகவும், அவை 1994 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற போரில் படுகொலை செய்யப்பட்டவர்களினுடையது எனவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி ஊடகம் கடந்த வருடத்தின் முற்பகுதியி; செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

 

A Judicial Medical Officer and the staff dig up skeletons at the site of a former war zone in Mannar, Sri Lanka November 27, 2018. Picture taken November 27, 2018. REUTERS/Stringer NO RESALES. NO ARCHIVES

தலைநகர் கிகாலியின் புறநகர் மாவட்டமான கசாபோ பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டறியப்பட்டதாகவும், ஏறத்தாள 200 சடலங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் இவை அனைத்தும் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் எனவும் பி.பி.சி மேலும் தெரிவித்துள்ளது.

 
அதே சமயம் கடந்த ஆண்டின் மார்ச் மாதமளவில் சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து 276 இற்கு மேற்ப்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 
இந்த எலும்புக் கூடுகளில் 20 இற்கு மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம். ஏனையவர்களின் விபரங்களை அறிவதற்கு அல்லது வெளியிடுவதற்கு சிறீலங்கா அரசு அதிக அக்கறைகள் காண்பிக்கவில்லை.

 
இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கும், உதவிகளை வழங்குவதற்கும் பல அமைப்புக்களும், அனைத்துலக நாடுகளும் முன்வந்தபோதும், அதனை சிறீலங்கா அரசு நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மனிதப்புதைகுழிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் அமெரிக்காவும், கனடாவும் முன்வந்தபோதும் சிறீலங்கா அரசு அதனை நிராகரித்து விட்டது.

 
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மனிதப் புதைகுழி விவகாரத்தை வெளியுலகத்திற்கு மறைப்பததில் சிறீலங்கா அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அதாவது எந்த ஒரு சிங்களச் சிப்பாயையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை என்ற அதன் கொள்கையில் சிங்கள அரசு தற்போதும் உறுதியாகவே உள்ளது.

 
எனவே தான் இந்த அகழ்;வை மேற்கொள்ளும் பொறுப்பை நீதித்துறையின் மருத்துவ அதிகாரி ராஜபக்சா என்ற சிங்கள அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளது. ஓரு ஆண் தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் இரண்டு உதவியாளர்களுடன் ராஜபக்சா சிறீலங்கா அரசின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகின்றது.

 
இந்த மனிதப் புதைகுழியானது, மன்னார் மாவட்டத்தின் நுளைவாயிலில் உள்ளது. அதற்கு அருகில் ஒரு வாணிக வளாகமும், அதற்கு முன்பாக சிறீலங்கா படைத்தளமும் உள்ளது. கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக குழி தோண்டிய பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இந்த புதைகுழி கண்டறியப்பட்டது.

 
அதன் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அகழும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறீலங்கா அரச அதிகாரியான ராஜபக்சா தலைமையிலான குழுவினர் முதலில் அகழ்ந்த இடத்தில் அதிகளவான எலும்புக்கூடுகள் காணப்பட்டபோதும், அது மயானம் என்று தாமாகவே முடிவை மேற்கொண்டு அதற்கு அருகில் உள்ள இடத்தில் அவர்கள் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 
ஆனால் இடத்தை மாற்றுவதற்கு அவர்கள் கூறிய காரணம் ஏற்புடையது அல்ல என அவர்களின் பணியை பார்வையிடச் சென்ற டாக்கடர் சேவியர் செல்வ சுரேஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் முடிவுற்ற பின்னர் உண்மை நிலையை கண்டறிய அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவில் சுரேசும் ஒருவர்.

 
முறையாக நீதிமன்ற அனுமதியுடன் சென்ற அவர்களை 15 நிமிடங்களே பார்வையிட ராஜபக்சா அனுமதித்ததாகவும், குழியினுள் இறங்ககூட அனுமதிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
மண்ணில் புதைந்துள்ள பெருமளவான எலும்புக்கூடுகள் இன்னும் தோண்டி எடுக்கப்படவில்லை என்பதுடன், குழியினுள் பிணங்கள் ஒன்றின் மேல் ஒன்று தூக்கி எறியப்பட்டு மண்போட்டு மூடப்பட்டதையே எலும்புக் குவியல்களின்; சீரற்ற தன்மை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
கண்டெடுக்கப்பட்ட பிணங்களின் பாலினம் மற்றும் வயதுகளைக் கூட அறிவதில் சிறீலங்காவின் குழுவினர் அக்கறை காண்பிக்கவில்லை. சாதாரண உருவ இயலை வைத்து கணிக்கும் இந்த தகவல்களைக் கூட காபன் டேட்டிங் (கால அளவை முறை) கொண்டு கணித்தபின்னர் தான் கூற முடியும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 
சாதாரணமாக நான்கு பேர் கொண்ட அணியை அமைத்துள்ள சிறீலங்கா அரசு வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரைக் கொண்டே அகழ்வை மேற்கொண்டு வருகின்றது. அதாவது இந்த விடயத்தை முக்கியத்துவமற்றதாக மாற்ற அது முனைகின்றது.

 
பிணங்களுக்கு சொந்தமான சில பொருட்கள் கண்டறியப்பட்டபோதும், உடைகள் கண்டறியப்படவில்லை. அதாவது துன்புறுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டு உடைகள் இன்றி பிணக்குவியல்களாக புதைக்கப்பட்டுள்ளார்கள்.

 
எலும்புக் கூடுகளின் கால்களில் காணப்படும் வளைந்த இரும்புகள் அவர்கள் துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
1990 களின் முற்பகுதியில் தனது 18 வயது மகனை இதே இடத்தில் வைத்தே சிறீலங்கா படையினர் கடத்திச் சென்றதாகவும், தனது மகனின் சடலமும் இந்த புதைகுழியில் இருக்கலாம் என மன்னார் பகுதியை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானியவைத் தளமகக் கொண்ட த இன்டிப்பென்டன்ற் ஊடகம் தெரிவித்துள்ளது.

 
தனது மகன் வருவார் என தான் 27 வருடங்கள் காத்திருந்ததாகவும், ஆனால் அந்த நம்பிக்கை தற்போது உடைந்துவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். அதாவது தனது மகனும் கொல்லப்பட்டு இந்த புதைகுழியில் தான் புதைக்கப்பட்டு இருப்பார் என்பது அவரது கருத்து.

 
இங்கு நாம் கருதவேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், சிறீலங்கா இராணுவம் கைது செய்த இடத்தில் தான் புதைகுழி காணப்படுகின்றது என்பதால், அப்போது அது படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 
இதனிடையே சீனாவினால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட இந்த வீதிக்கு அடியிலும், அதற்கு எதிரில் உள்ள சிறீலங்கா படை முகாமின் கீழ் உள்ள நிலப்பகுதியிலும் பெருமளவான சடலங்கள் இருக்கலாம் என கருதப்படுகின்றது.

 
ஆனால் மிகவும் முக்கியமான இந்த விடயத்தில் சிறீலங்கா அரசோ அல்லது தமிழர்களின் அரசியல் அமைப்புக்களோ அதிக கவனம் செலுத்தவில்லை என்பதே இங்கு கவலையான விடயம்.

 
இறுதியாக இடம்பெற்ற போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், ஏறத்தாள 30,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் நாடு முழுவதும் காணாமல் போயிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

 
றுவாண்டாவில் 200 சடலங்களைக் கொண்ட முதலாவது மனிதப்புதைகுழியை கண்டறிந்தவுடன், அங்கு காணாமல்போன 3,000 பேரின் சடலங்களாக அவை இருக்கலாம் எனவும் அதனை இனப்படுகொலை எனவும் அழுத்தமாகத் தெரிவித்த அனைத்துலக சமூகம். ஏறத்தாள 30,000 பேர் காணாமல் போனதுடன், 276 இற்கும் மேற்பட்ட சடலங்களைக் கொண்ட புதைகுழி கண்டறியப்பட்டபோதும் அதனை இனப்படுகொலை என தெரிவிக்க பின்னிற்கின்றன.

 
இது எமது விடுதலைப்போருக்கு அனைத்துலகத்தில் கிடைத்த மாபெரும் தோல்வி என்றால் அது தான் உண்மை.

 
சிங்கள அரசு தனது இனத்தை பாதுகாப்பதையும், தமிழ் இனத்தை அழிப்பதையும் தனது முழு வளங்களையும் பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றது.

 
தென்னிலங்கையில் சிங்களவர்களுக்கு இடையில் ஏற்பட்ட நெருக்கடிகளை தமிழர் தரப்பைக் கொண்டே தீர்த்துக் கொண்டது. அதற்கு கூலியும் கொடுக்கவில்லை. அதன் பின் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளின் ஊடாக அரசியல் திருத்தங்களில் ஏற்படுத்தப்படும் சிறு மாற்றங்களைக் கூட தடுக்க முனைகின்றது.

 
பெரும்பான்மைச் சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாக சிறீலங்கா அரசு செயற்பட முடியாது என அவர்கள் அணமையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிங்கள அரசின் அடுத்த காய்நகர்த்தல்களை தெளிவுபடுத்தியுள்ளது.

 
அது மட்டுமல்லாது தனக்கு சார்பான தமிழின விரோதிகளைக் கொண்டே மன்னார் புதைகுழி விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் சிறீலங்கா அரசு முனைந்து வருகின்றது.

 
அதனை தான் சிங்கள அரசுக்கு ஆதரவாக இயங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் என தன்னைக் கூறிக்கொள்ளும் பாக்கியசோதி சரவணமுத்து செய்துள்ளார்.

 
அதாவது மன்னார் புதைகுழியில் கிடக்கும் சடலங்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என தான் உறுதியாக நம்புவதாக பிரித்தானியா ஊடகம் ஒன்றிற்கு அவர் தெரிவித்துள்ளார்.

 
தமது இனத்தின் நன்மைக்காகவும், பாதுகாப்புக்காகவும் சிங்கள மக்கள் குரல் கொடுக்கின்றனர், பௌத்த துறவிகள் குரல் கொடுக்கின்றனர். தமது அரசியல்வாதிகளுக்கும் அரசுக்கும் அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

 
சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது. அவர்களுடன் ராஜதந்திரப் பேரம்பேசல்களைச் செய்கின்றது.

 
ஆனால் நாமும் அனைத்துலகத்தில் இயங்குகின்றோம். பல பிரிவாக மற்றும் பல அமைப்புக்களாக ஆனால் எமது அமைப்புக்களால் எந்த ஒரு அழுத்தத்தையும் அனைத்துலக சமூகத்தில் ஏற்படுத்த முடியவில்லை.

 
கையில் ஏராளமான ஆதாரங்கள் இருந்தும் எமது செயற்திறனற்ற தன்மையால் அனைத்தும் வீணடிக்கப்படுவது ஒருபுறமிருக்க அவற்றை எமக்கு எதிராக திருப்புவதில் சிங்கள தேசம் வெற்றி கண்டு வருகின்றது.

 
இந்த மனிதப்புதைகுழியையும் விடுதலைப்புலிகள் தான் மேற்கொண்டார்கள் என அனைத்துலக சமூகத்தை நம்பவைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு அதிக காலம் எடுக்கப்போவதில்லை. அதற்கு ஆதரவான அறிக்கைகளை விடுவதற்கும், அனைத்துலகத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும் பல தமிழர்கள் தற்போதும் தயாராகவே உள்ளனர். அதில் ஒருவர் தான் சரவணமுத்துவும்.

 
நன்றி: இலக்கு மின்னிதழ் (20-01-2019)