மன்மோகன்சிங் வருகையை எதிர்த்துக் கருப்புக் கொடி; ஆகஸ்டு 02, திருச்சியில் அறப்போர் – வைகோ அழைப்பு

0
680
vaikoஇலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட, தமிழ்க் குலத்தை ஈவு இரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இனவாத இராஜபக்சே அரசுக்கு, முப்படைத் தளவாடங்களைத் தந்தும், தமிழர் இன அழிப்புப் போரில் அனைத்து உதவிகளைச் செய்தும், தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளியான காங்கிரÞ தலைமை தாங்கும் இந்திய அரசு, தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகமும் துரோகமும் செய்து வருகிறது.
 
சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கைக்கு உலக அரங்கில் ஆதரவு உருவாகும் சூழலைப் பாழ்படுத்தும் நோக்கோடு, 13 ஆம் சட்ட த்திருத்தம் என்ற மாய்மால வேலையில் இந்திய அரசு ஈடுபடுகிறது. 
 
இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசை அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற குரல் தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் மான உணர்வு உள்ள தமிழர்கள், மனித உரிமை காப்பாளர்கள் நெஞ்சில் ஓங்கி ஒலிக்கும் நிலையை மாற்றுவதற்காகவே, காமன்வெல்த் மாநாட்டை நவம்பர் 17, 18 தேதிகளில் கொடியவன் ராஜபக்சே தலைமையில் நடத்துவதற்கு இந்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
 
அதன்மூலம், கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற வேண்டிய கொலைபாதகன் ராஜபக்சே, இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்புக்கே தலைவர் ஆகி விடுவான். நீதியை புதைகுழிக்கு அனுப்பவே இந்திய அரசும், சிங்கள அரசும் வஞ்சகமாகச் செயல்படுகின்றன. 
 
தமிழர்களின் புதைகுழியின் மீது, காமன்வெல்த் மாநாடா? தமிழ்க் குலத்தின் மரண ஓலம் ஒலித்த இடத்தில் மாநாடா? என்று, துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டவர்களின் இரத்தத் துளிகள் ஆவேசக் குரல் எழுப்புகின்றன. மரண நெருப்புக்குத் தங்கள் உயிர்களைப் பலியிட்ட முத்துக்குமார் உள்ளிட்ட தியாக மாமணிகள் கொதிக்கும் குமுறலோடு கேட்கின்றனர்.
 
நமது தொப்புள்கொடி உறவுகளை, நமது குருதிச் சொந்தங்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்துக்கு இன்னும் இந்தியாவில் பயிற்சி கொடுக்கின்றார்கள். 
 
தென்தமிழ் நாட்டுக்கு எமனாக அணுஉலையும் அமைத்துவிட்டு, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கடல் வழியில் சிங்களவனுக்குக் கொடுக்கவும் வேலை நடக்கிறது.
 
தாய்த் தமிழகத்து மீனவர்களை சிங்களக் கடற்படை நாள்தோறும் பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடலிலும் தாக்குவதும், சுட்டுக்கொல்வதும், நம் மீனவர்களைக் கைது செய்து சித்ரவதை செய்வதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.
 
ஈழத்தமிழர்களுக்கும், தாய்த் தமிழகத்துக்கும் மன்னிக்க முடியாத துரோகம் இழைக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங், ஆகÞடு 02 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரப்போகிறார். 
 
கொழும்பில் காமன்வெல்த் மாநட்டை நடத்துவதற்கு முனைப்பாக செயல்படும் இந்திய அரசின் தமிழ் இன துரோகத்தைக் கண்டித்தும், சிங்களக் கடற்படைத் தாக்குதலைத் தடுத்து, தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய கடமை ஆற்றாத துரோகத்தைக் கண்டித்தும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குக் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதத்தில், ஜனநாயக அறவழியில் திருச்சி விமான நிலையத்திற்கு எதிரே ஆகÞடு 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என்னுடைய தலைமையில்,  அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் மலர்மன்னன், ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., முன்னிலையில்  கருப்புக்கொடி அறப்போராட்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 
கழகக் கண்மணிகளும், மாணவத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பெருமளவில் பங்கு ஏற்றிட அன்புடன் வேண்டுகிறேன்.
 
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
30.07.2013 மறுமலர்ச்சி தி.மு.க.