மீளிணக்கம் முக்கியம் வஞ்சத்தீர்வு அல்ல. நாங்கள் இந்தத் தவறுகளை எல்லாம் செய்தோம் என நாங்கள் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் மருத்துவமணைகளின் மீது குண்டுவீசினோம், பொதுமக்களைக் கொன்றோம் என நாங்கள் சொல்லிக் கொண்டு அலையப்போவதில்லை. ஏனென்றால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. இதே மாதித்தான் இந்திய அமைதிப்படை பெருமளவிலான மக்களைக் கொன்றது என்றும் பாலியல் வல்லுறவு புரிந்தது என்றும் பழிசுமத்திக் கொண்டிருந்தார்கள் என்பதனை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எமது ஜனாதிபதி தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். சில அரசு சாரா அமைப்புக்கள் இது வெறும் வேஷம் என்று சொல்லுகின்றன. சொல்லுங்கள் எந்த சிங்களத் தலைவராவது இதுவரையிலும் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார்களா? தமிழர்களின் மீது உண்மையான அக்கறை இப்போது அரசிடம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எமது மக்கள்.

பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
Deccan Chronicle, 31 Auguest 2011

பேராசிரியர் விஜேசிங்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்ற ஆங்கில மொழிப் பேராசிரியர். புனைவிலக்கியவாதி. ஆங்கில மொழி இலக்கணம் குறித்து நூற்கள் எழுதி இருப்பதுடன் அவரது புனைவுகள் இத்தாலி மொழி உள்பட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘ஜார்னல் ஆப் காமன்வெல்த் லிட்டரேச்சர்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருப்பவர். இந்தியாவில் புகழ்மிக்க அரசுசார் பதிப்பகமான ‘நேஷனல் புக் டிரஸ்டின்’ வழி இலங்கை எழுத்துக்களைத் தொகுத்து, சிங்கள மற்றும் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றினை (Bridging Connections : NBT: 2007 : 277 Pages : Rs.125.00) பதிப்பித்திருக்கிறார். இதுதான் 2007 ஆம் ஆண்டு வரையிலான அவர் குறித்து வெளியுலகு அறிந்த கல்வித்துறை மற்றும் இலக்கிய முகம்.

jamuna
மகிந்த ராஜபக்சே அரசுடன் விஜேசிங்கவின் தேனிலவு துவங்கியவுடன் அவரது இலக்கிய முகம் பிறிதொரு வடிவம் எடுக்கிறது. இந்த வடிவம் ‘லங்கா கார்டியன்’ புகழ் மார்க்சியர் தாயன் ஜயதிலக, ‘பயங்கரவாத எக்ஸ்பர்ட்’ ரொஹான் குணரத்ண போன்ற அறிவுஜீவி முகவடிவங்களை ஒத்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஜீவ விஜேசிங்கவைத் தமது அரசாங்கத்தில் செயல்படுவெதற்கெனக் கொண்டு வருகிறார். சமாதானச் செயல்பாடுகளை இணைக்கும் செயலகத்தின் செயலர் நாயகமாக விஜேசிங்க பதவி பெறுகிறார். இந்தப் பொறுப்போடு 2008 ஆம் ஆண்டு அனர்த்த முகாமை மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சரவைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு சமாதானச் செயலகம் மூடப்பட்டதனையடுத்து, அவர் அரசுப் பதவியிருந்தும் பல்கலைக் கழகப் பணியிலிருந்தும் ராஜினமா செய்துவிட்டு 2010 ஆம் ஆண்டு ‘சுதந்திர மக்கள் முன்னணி’ வேட்பாளராக ‘தேசியப் பட்டியல்’ மூலம் பாராளுமன்ற உறுப்பினராக ஆகிறார்.

முழு நேர அரசியல்வாதி ஆனதன் பின்னால் ரஜீவ விஜேசிங்க பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னணிப் படைவீரராகச் செயல்படத் துவங்குகிறார். 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் தாயன் ஜயதிலகாவுடன் இணைந்து வெற்றிகரமான போர்வீரனாக வெளியாகிறார். அன்று முதல் இன்று வரை இலங்கை அரசினதும் இலங்கைப் படையினரதும் பாதுகாவலராக ‘டப்ளின் தீர்ப்பாயம்’ சேனல் நான்கின் ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் ‘ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை’ என அனைத்தையும் முறியடிப்பதற்கான மகிந்த ராஜபக்சேவின் ஆலோசகராக, முன்னணிப் படைவீரராக முழுநேரச் சிங்கள அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார்.

ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் இலக்கியவாதியின் முகம் மறைந்து முழுமையான ஒரு சிங்கள இனவாதியின் முகம் இப்போது ரஜீவ விஜேசிங்காவிற்கு வந்து பொருந்துகிறது.

ரஜீவ விஜேசிங்கவின் இந்தச் செயல்பாட்டிலிருக்கும் சில தார்மீக அம்சங்களைப் பார்ப்பது இங்கு பொறுத்தமானதாக இருக்கும். இந்திய அரசு சார்பு நிறுவனமான ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ அமைப்பை நாம் முழுக்கவும் அரசியல் ரீதியில் பார்க்க முடியாது என்பதனை அதனது நூற்பட்டியலைப் பார்க்கிற எவரும் அறிய முடியும். இந்திய அமைதிப்படையின் செயல்பாடுகளையும் இந்திய ‘நேஷனல் புக் டிரஸ்டி’ன் செய்பாடுகளையும் இணைத்துப் பார்ப்பதனை விடவும் வேறு அபத்தம் இருக்க முடியாது. இந்திய மொழிகளின் இலக்கியம் மட்டுமல்லாது தெற்காசிய மொழிகளின் இலக்கியங்களையும் உலக இலக்கியங்களiயும் தனது நூற்பட்டியலில் கொண்டிருக்கிறது ‘நேஷனல் புக் டிரஸ்ட்’.

கடுமையான இந்திய அரசு எதிர்ப்பாளரும் நக்சலைட்டுகளின் ஆதரவாளருமான மஹாஸ்வேதா தேவியின் படைப்புகள் உள்பட இந்திய மொழிகளின் முக்கியமான இலக்கியப் படைப்பக்களை நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பித்திருக்கிறது. இந்த வகையில் ரஜீவ விஜேசிங்க தொகுக்கும் கவிதைப் புத்தகத்தை நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பிப்பது என்பது எவரதும் ஆட்சேபனையாக இருக்க முடியாது.

இலக்கித்திற்கு அடிப்படையானது பசப்பு மொழி இல்லை. இலக்கியம் சில தார்மீகங்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. மனித அவலங்களின் மீதான அக்கறை சித்திரவதைகளுக்கு எதிரான சீற்றம் வாழ்வின் அழகிய தருணங்களை அகழ்தல் என இவைதான் இலக்கியத்தின் அடிப்படையான பண்புகள். இட்லர் ஆரம்ப நாட்களில் ஓவியனாக இருந்தான் என்பதற்காக எவரும் இட்லரைக் கலைஞனாகக் கொண்டாடுவது இல்லை. பில் கிளின்டன் பாப்லோ நெருதாவின் காதல் கவிதைகளின்; தொகுப்பைத் தனது மனைவி ஹிலாரிக்கு அன்பளித்தார் என்பதற்காக அவரது விமானங்கள் உலக நாடுகளின் மக்களைக் குண்டு போட்டுக் கொன்றதனை எவரும் ஆதரிப்பதும் இல்லை. யூத-ஜெர்மானியக் கலைஞர்களது இலக்கியத் தொகுதியை இட்லரும் அமெரிக்க-ஆப்கானிய மக்களது இலக்கியத் தொகுதியை பில் கிளின்டனும் தொகுப்பது போன்றதுதான் மகிந்த ராஜபக்சேவின் மனித உரிமை ஆலோசகரான ரஜீவ விஜேசிங்க சிங்களத் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொகுக்கும் செயல்பாடு.

இதனை அவர் வெறுமனே சிங்களவராக இருக்கிறார் எனும் அடையாளத்தை முன்னிறுத்திச் சொல்லவில்லை. அவரது வெளிப்படையான முற்றுமுழுதான தமிழர் விரோத அரசியல் செயல்பாட்டை முன்னிறுத்திச் சொல்லப்படுவதாகும். அவரது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை சொற்பொழிவைக் கேளுங்கள். இந்தியாவின் ‘என்டிடிவி’ ஆவணப்படத்திற்காக அவர் கொடுத்த நேர்முகத்தைச் செவிமடுத்துப் பாருங்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக இலங்கைப் படையினருக்கு ஆதரவாக அவர் உலகின் ஆங்கில ஊடகங்களில் எழுதிக் குவித்திருக்கும் கட்டுரைகளை ஒரு சிலதையாவது படியுங்கள். இந்தியாவிலிருந்து வரும் ‘டெக்கான் குரொனிக்கல்’ இதழுக்காக பகவான் சிங்குக்கு அவர் கொடுத்திருக்கும் நேர்முகத்தில் அவர் சொல்வதுதான் அவரது ஈழத்தமிழர் குறித்த ஐந்தாண்டு கால அரசியல் செயல்பாட்டின் சாராம்சம்.

ஈழவிடுதலைப் போராட்டத்தை விடுதலைப் புலிகள் கொண்டு செலுத்திய முறை குறித்து கடுமையான விமர்சனங்கள் கொண்டவர்கள் கூட ‘பல்கலைக் கழக ஆசிரியர்களின் அறிக்கைகள்’ உள்பட இந்திய அமைதிப்படை ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகனையும் பாலியல் வல்லுறவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். விஜேசிங்க இந்தியா ஊடகவியலாளரிடம் ‘இது இந்திய அரசின் மீது ஈழத்தமிழர் சுமத்திய பழிச்சொல்‘ என்கிறார். ‘இலங்கைப் படையினர் மருத்துவமனைகள் குண்டுவீசித் தாக்கப்படவில்லை. தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை. தமது படையினர் போரக்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. இவையெல்லாம் ஈழத்தமிழர்கள் இலங்கை அரசின் மீது சுமத்தும் பழிச்சொற்கள்’ என்கிறார் விஜேசிங்க.

இலங்கை குறித்த சர்வதேச சமூகத்தின் விமர்சனங்கள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார் :

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நியதிகளுக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடுகள் அடிப்படையிலான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச அழுத்தங்கள் அதிகளவில் பிரயோகிக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் ஒரு சிலரின் நடவடிக்கைகளும் ஏதுவாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக சர்வதேச விவகாரத்திற்கு பொறுப்பான செயற்பட்டு வருவோர் உரிய முறையில் தங்களது கடமையை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் முதன் முதலில் சுமத்தப்பட்ட போது அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் தமது ஆலோசனைகளுக்கு செவிமடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக்கும் மேலாக அவர் சொல்கிறார் :

இந்தப் பிரச்சினையை உலக அளவில் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் மனித உரிமை அமைப்புக்களும் அரசு சாரா அமைப்புக்களும் ‘சேனல் நான்கு’ தொலைக் காட்சியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்கிறார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டுவதன் மூலம் இலங்கை அரசின் அனைத்துக் கொலைகளையும் அவர் மறைத்துவிட முயல்கிறார். மகிந்த ராஜபக்சேவின் ஆலோசகராகப் பதவியேற்ற அதே 2007 ஆம் ஆண்டு அவர் ஈழத்தமிழ்-சிங்களப் படைப்பாளிகளுக்கு இடையிலான பாலத்துக்கான இணைப்பை சிறுகதைத் தொகுப்பின் மூலம் போடுகிறார். தற்போது அதனது தொடர்ச்சியாக ‘கவிதைப் பாலம்’ போடுகிற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். ஈழத் தமிழ் மக்களின் புதைகுழிகளை நிரவி இவர் இலக்கியப் பாலம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது மிகமிகத் தெளிவாகவே புரிகிறது.

ரஜீவ விஜேசிங்க சார்பாக ஈழத் தமிழ் படைப்பாளிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுற்று நிருபமொன்றில் கவிதைகளின் தொகுப்பாளராக ரஜீவ விஜேசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார்:

என்னிடம் பூர்வாங்கமாக காண்பிக்கப்பட்ட படைப்புக்களில் சிலவற்றைப் பொறுத்து லேசான, தொகுப்பிற்குகந்த மாற்றங்கள் செய்யப்படும், எழுத்தாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இது ஒப்பத்தக்கதாயிருக்கும் என நினைக்கிறேன். என்ன அச்சிடப்படுகிறதோ அதில் அசல் மொழிபெயர்ப்பாளர்தான் படைப்பினை உருவாக்கியவர் மற்றும் உரிமையாளர் என்பது இந்தப் புத்தகத்தில் பதியப்படும். இதற்கு படைப்பாளிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோருகிறார் ரஜீவ விஜேசிங்க.

rajiva-wija
கவிதையில் அதனது ஒருங்கமைவில் சொற்கள் மேற்கொள்ளும் அர்த்த முக்கியத்துவத்தினை எந்தக் கவிஞனும் உணரமுடியும். அதனைத் தீர்மானிக்கிற உரிமையைக் கூட ரஜீவ விஜேசிங்க தன்னிடம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்.

இந்தியாவின் ‘நேஷனல் புக் டிரஸ்டி’ன் மூலம் 2007 ஆம் ஆண்டு சிங்களத்-தமிழ் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்த ரஜீவ விஜேசிங்க அதனது தொடர்ச்சியாக சிங்களத் தமிழ்க் கவிஞர்களின் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பிற்காக ஈழத் தமிழ்க் கவிஞர்களிடம் கவிதை வேட்டையாடி அந்தத் தொகுப்பு ‘கண்ணாடிப் பிம்பங்கள்’ எனும் பெயரில் (Mirrored Images : An Anthology of Sri Lankan Poetry : NBT India : 2013 : 400 Pages : Rs. 150.00) இப்போது ‘நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா’ வெளியீடாக வெளியாகியும் விட்டது.

எண்பதுகளில் தமிழகத்தைக் குலுக்கிய ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பில் கவிதை எழுதிய 99 சதவீதமான ஈழக்கவிஞர்கள் ரஜீவ விஜேசிங்காவின் தொகுப்பிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். மரணமுற்ற வில்வரத்னம், சண்முகம் சிவலிங்கம், செல்வி,.சிவரமணி உள்பட ஈழத்தின் இன்றைய முக்கியமான கவிகளான சேரன், ஜெயபாலன், நுஹ்மான், கி.பி.அரவிந்தன் வரையிலுமானவர்களது கவிதைகள் இருக்கிற இத்தொகுப்பில், தொகுப்பிற்குக் கவிதைகள் கொடுக்க மறுத்தவர்கள் தவிர, முள்ளிவாய்க்காலின் பின் உருவான முக்கியமான ஈழக்கவிகளான தீபச்செல்வன் மற்றும் தமிழ்நதி போன்றவர்களின் கவிதைகள் இல்லை. இத்தொகுப்பில் இலங்கை ராணுவத்தினால் காணாமல் போக்கப்பட்ட புதுவை இரத்தினதுரையினது கவிதைகள் இடம்பெறவில்லை. இலங்கை அரசின் வேட்டைக்குத் தப்பி ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை ஆதரிக்கும் சிங்களக் கவிஞனான மஞ்சுள வெடிவர்த்தனவின் கவிதைகள் ஒன்று கூட இத்தொகுப்பில் இல்லை என்பது இத்தொகுப்பின் அரசியலைச் சுட்டப் போதுமானதாகிறது.

இத்தொகுப்பின் வெளியீட்டு விழா இலங்கை கனடிய தூதரக ஏற்பாட்டில் கனடாவில் நடைபெற்றது. பிற்பாடு யாழ்ப்பாண இந்திய தூதரகத்திலும் புதுதில்லியிலும் கொழும்பிலும் வெளியீடுகள் நடைபெற்றன. இது குறித்து தனது வலைத்தளத்தில் கட்டுரையெழுதிய ரஜீவ விஜேசிங்க ‘இந்தத் தொகுப்பின் மூலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தான் ஒரு பிரச்சார ஆயுதத்தை வழங்கியிருக்கிறேன்’ என எழுதுகிறார். ‘இலங்கையில் இன நல்லிணக்கம் ஓங்கியிருக்கிறது என்பதை இதனை வைத்து இலங்கை தூதரகங்கள் உலகெங்கிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் ஆனால் செய்யவில்லை’ என்கிற தனது ஆதங்கத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். மட்டுமன்று, இலங்கையில் இனக்கொலை நடைபெறவில்லை அங்கு இனநல்லிணக்கம் கொழிக்கிறது என ஐரோப்பியரொருவரால் எடுக்கப்பட்ட ஆவணப் படத்தை பாதுகாப்பு அமைச்சரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தான் திரையிட்டதாகவும் பூரிப்புடன் அறிவிக்கிறார் இலக்கியவாதி ரஜீவ விஜேசிங்க.

புத்தகத்தில் இடம்பெறும் பதிப்புரை, தொகுப்புரை, சமகால ஈழத்தமிழ் மற்றும் சிங்களக் கவிதைகள் குறித்த இரு மதிப்பீட்டுரைகள் மிகுந்த இனப்பாரபட்சம் கொண்ட கட்டுரைகளாக இருக்கின்றன. சிங்களக் கவிதை பற்றிய வரலாற்று ரீதீயான கட்டுரை முள்ளிவாய்க்கால் சம்பவமுடிவு வரை எடுத்துக்கொள்கிறது. அரசியல் மொழியில் எழுதப்பட்ட அக்கட்டுரை முள்ளிவாவாய்க்கால் பேரழிவின் பின் சிங்களவர்களால் எழுதப்பட்ட மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பினையும் கொண்டிருக்கிறது. தமிழ் தற்கொலைப் போராளிப் பெண் ஒருவர் குறித்த மிகக் கொச்சையான கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பும் இதில் இருக்கிறது. தமிழ்க்கவிதை பற்றிய கட்டுரை முற்றிலும் அரசியல் நீக்கப்பட்ட மொழியில் எழுதப்பட்டு தொண்ணூறுகளோடு ஈழத்தமிழ்க் கவிதையை மூடிக்கட்டிவிடுகிறது.

முள்ளிவாய்க்கால் எனும் சொற்றொடரே தமிழ் கவிதைத் தரப்பு சார்ந்து இத்தொகுப்பில் பதிவு செய்யப்படவேயில்லை. இதற்கான பொறுப்பை ரஜீவ விஜேசிங்க ஈழத்தமிழ் கவிதைத் தேர்வுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது சாதுரியமாகச் சுமத்திவிடுகிறார். ‘தொகுப்பின் தமிழ்க் கவிதைகளில் இனப்பகைமை என்பதே இல்லை’ என்கிறார் விஜேசிங்க. ‘ஒன்றுபட்ட இலங்கையர் எனும் உணர்வே தொகுப்பின் அடிநாதம்’ எனவும் அவர் முத்தாய்ப்பாகக் கோரிக்கொள்கிறார்.

‘எமது ஜனாதிபதி தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். சில அரசு சாரா அமைப்புக்கள் இது வெறும் வேஷம் என்று சொல்லுகின்றன. சொல்லுங்கள் எந்த சிங்களத் தலைவராவது இதுவரையிலும் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார்களா? தமிழர்களின் மீது உண்மையான அக்கறை இப்போது அரசிடம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எமது மக்கள்’ என்கிறார் விஜேசிங்க.

யாம் உமது மக்கள் என ஈழத்தமிழ் மக்கள் இலங்கை அரசிடமும், மகிந்தவின் ஆலோசகரான ரஜீவ விஜேசிங்காவிடம் சொல்வது வேறு ரஜீவ விஜேசிங்க ஈழத் தமிழ் மக்களைப் பார்த்து நீங்கள் எமது மக்கள் என்று சொல்வது வேறு. கொலைக் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் நிராதரவான மனிதனைப் பார்த்து ‘நீ எனது கட்டுப்பாட்டிலிருக்கும் மனிதன், உன்னை நான் கவனித்துக் கொள்வேன்’ என்று சொல்வது போன்றது மகிந்த ராஜபக்சேவின் ஆலோசகரான ரஜீவ விஜேசிங்கவின் வார்த்தைகள்.

‘எனது பாலஸ்தீன தேசத்தை நான் எனது மொழிக்குள் காவித் திரிகிறேன்’ என்பான் அமரனான பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்வீஸ். ஒடுக்கப்பட்டு நாடு நாடாக அலைந்து திரியும் ஈழப் படைப்பாளிகளின் மொழியைக் கூட தன்வசம் எடுத்துக் கொள்ள முனைகிறார் ரஜீவ விஜேசிங்க.

எண்பதுகளில் ‘மரணத்துள் வாழ்வோம்’ என எழுந்த ஈழத் தமிழ்க் கவிஞர்களின் தலைமுறையை முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்பான இன்றைய இலங்கையின் பரஸ்பர சிங்களத் தமிழ்க் ‘கண்ணாடிப் பிம்பங்களாக’ ஆக்கிக் காட்டியிருக்கிறார் ரஜீவ விஜேசிங்க. ‘சமகால இலங்கைக் கவிதை’ எனும் தொகுப்பின் வழி அவரது தமிழர் எதிர்ப்பு அரசியலை அவர் சந்தேகமில்லாமல் மிகச் சாதுரியமாகச் சாதித்துத்தான் இருக்கிறார்.

யமுனா ராஜேந்திரன்.