இலங்கையின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை உயரவும் கல்வி மேம்படையவும் இவர் ஆற்றிய தொண்டுகள் எண்ணில் அடங்காதவை.

pop
தூய. பெட்டிரிக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசப் 1995 ஆம் ஆண்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் யாழ்பாணத்திலிருந்து வன்னிக்கு குடிபெயர்ந்த பொழுது அவர்களுக்கு துணையாக வன்னி பகுதிக்கு சேவை செய்ய வந்தவர்.

2002 ஆம் ஆண்டு தமிழீழ கல்வி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் தனது ஆங்கில புலமையினாலும் கல்வித்துறையின் தனது நீண்ட அனுபவத்தினாலும் தமிழீழ கல்வி மேம்பாட்டு குழுவில் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார்.

2004’ம் ஆண்டு தமிழீழ விடுதலைபுலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட காலக்கட்டத்திற்கு பிறகு அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் தமிழீழ மாணவர்களுக்கு ஆங்கில அறிவினை போதிப்பதில் ஆர்வம் காட்டினார்.

2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் அவர் துவங்கிய கல்லூரியின் மூலம் பல்லாயிரம் தமிழ் இளையோர் பயனடைந்தனர்.

கல்வி, சமூகசேவையுடன் தனது கிறிஸ்துவ மத கடமைகளையும் கிளிநொச்சியில் இருந்து கொண்டு செவ்வனே செய்தார். தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சைக்காக வேறு ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்த பொழுது கூட வன்னி பகுதியை விட்டு வெளியேறாமல் வன்னி மக்களுடனே வாழ்ந்து வந்தவர்.

கத்தோலிக்க திருச்சபை அவரை யாழ்பாணத்திற்கு கிறித்துவ மத பணிகளை செய்ய அழைத்த பொழுது கூட தான் வன்னியில் இருக்கவே விரும்புகிறேன் என உறுதியுடன் நின்றவர்.

2009 ஆம் ஆண்டின் போரின் இறுதிகட்டத்தில் மக்களுடன் ஒவ்வொரு பதுங்குகுழியாக ஓடிகொண்டிருந்த அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்களை பாதுகாப்பான இடத்திருக்கு செல்லுமாறு போராளிகள் கேட்டு கொண்ட பொழுதிலும் வர மறுத்து தனது தள்ளாடும் 75 வயதிலும் மக்களுடன் பதுங்குகுழியில் நின்றவர்.

2009ஆம் ஆண்டு , மே 18 ‘ம் தேதி பிரான்சிஸ் ஜோசப் அவர்களையும், முன்னால் போராளிகளையும், பொது மக்களையும் இலங்கை இராணுவம் சுற்றி வளைத்த போது.

சரணடைவதாக முடிவெடுத்த மக்களுடன் ஆங்கில புலமைபெற்ற தானும் உடனிருந்தால் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கருதிய பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் சிங்கள இராணுவத்திடம் தமிழீழ மக்களை அழைத்து சென்று சரணடைந்தார்.

இலங்கை இராணுவத்தின் வாகனத்தில் பிரான்சிஸ் ஜோசப் அவர்களுடன், முன்னாள் போராளிகளையும் ,ஒரு ஆஸ்திரேலிய நாட்டவரையும் இலங்கை இராணுவம் கொண்டு சென்றதை நேரில் கண்டதாக பல்லாயிரம் மக்கள் சாட்சி சொல்கிறார்கள்.

ஏறத்தாழ 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசப்பிற்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை.

தனது வாழ்கையில் ஒவ்வொரு நொடியையும் மக்களுகாகவே வாழ்ந்த ஒரு மாமனிதர் இப்பொழுது இனப்படுகொலை போரில் காணாமல்போனோர் பட்டியலில் இருக்கிறார்.

இதற்கு புனித கிறிஸ்துவ திருச்சபை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது ?

இனப்படுகொலை நாட்டிற்கு நேரில் சென்று கைகுலுக்க இருக்கும் மரியாதைக்குரிய போப்பரசர் அவர்களே இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.?

நன்றி மறவா இந்த தமிழ்ச் சமூகம் உங்கள் முன் வைக்கும் கேள்வி. எங்கள் அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசப் எங்கே???

தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு.