மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு தமிழீழ அகதிகளுக்கு இந்திய அரசின் எந்தப் பிரிவிலும் இடம் இல்லை என மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இன்று அவுஸ்திரேலியாவின் தூதுவரை சந்தித்த பின்னர் அவர் முகநூலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:

leo-seeman
ஐ.நாவின் அகதிகளுக்கான அலுவலகத்தில் லியோ சீமான்பிள்ளையின் பெற்றோர்களின் பயணத்திற்கும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளின் பால் அரசாங்கங்களிடத்தில் பேசி ஏற்பாடு செய்யவேண்டுமென்று கோரிக்கை வைத்தோம்.

தாம் இம்மாதிரியான வ்ழக்கினை சந்தித்ததில்லை என்றும், முயற்சிக்கிறோம் என்றார்கள். அரசாங்க வழிமுறைகளை மீண்டும் ஒப்பிப்பதையே இங்கும் கண்டோம். அகதி என்பது சிறப்பு பிரிவின் கீழ் நடத்தப்பட வேண்டுமென்பதை உணர்ந்தவர்களாய் எவரையும் பார்க்க இயலவில்லை. சுற்றுலா பயணத்திற்குரிய வழிமுறைகளையே ஆஸ்திரேலியா தூதரகம் அனுப்பி இருந்தது.

அகதிகளுக்கான அலுவலகமும் இவ்வாறே பேசியது. கடுமையாகவே அவர்களது கடமையை நினைவுபடுத்த வேண்டி இருந்தது. தில்லியில் பேசுகிறோம் என்றார்கள். இன்று சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.

இதன்பின்னர் தமிழகத்தின் அகதிகளுக்கான துறைக்கு சென்றோம். அவர்கள் பயண ஆவணங்களை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை, மாறாக உடலை எடுத்துவர மட்டுமே உதவும் அதிகாரம் இருப்பதாகச் சொன்னார்கள். சீமான்பிள்ளையின் பெற்றோர்கள் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களும் இதே பதிலைச் சொன்னார்கள். இந்திய அரசிற்கு மட்டுமே அதிகாரம் உண்டென்றார்கள்.

கலெக்டரின் அனுமதியும், காவல்துறை அனுமதியும் வாங்குவது அவசியம் அதன்பின்னரே இந்திய அரசின் அனுமதியுடன் வெளிநாடு செல்ல இயலும் என்றார்கள்.

பின்னர் இந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றோம். அவர்கள் விளக்குவதில் விருப்பமில்லாமலும், பின் நிற்கவைத்து மட்டுமே பேச விரும்பினார்கள். இந்திய அரசு என்பதன் அதிகாரத் தோரணை குறைய சிறிது நேரம் பிடித்தது அவர்களுக்கு. பதில் சொல்லக்கடமைப்பட்ட மனிதர்கள் அவர்கள் என்று உணரவைத்த பிறகே விளக்கம் கிடைத்தது. “ எங்களுக்கு அதிகாரம் இல்லை, மத்திய உள்துறை அமைச்சகமே அனுமதி தரவேண்டுமென்றார்கள்” .
உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது எளிதல்ல என்றும் சொல்லிவைத்தார்கள்.

லியோவின் பெற்றோர்களை பேருந்தில் கணத்த மனதுடன் ஏற்றி அனுப்பினோம். இரவில் தமிழகத்தின் க்யூ பிரிவு காவல்துறை தொலைபேசியில் கடுமையாக “யாரைக்கேட்டு சென்றீர்கள், எப்படி சென்றீர்கள்” என்று கேட்டதாக அறிந்தோம்.

ஐ.நாவின் அகதிகளுக்கான பிரிவு அதிகாரியிடம் பேசும் பொழுது, “ சவுதி அரசு இம்மாதிரியான காலகட்டத்தில் ஈழ அகதிகளுக்கு அவசர பயணச்சீட்டு கொடுத்திருக்கிறார்கள்” என்று சொன்னபொழுது “ஈழ அகதிகளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா என்றார்கள்”, அம்மக்களோ நம்மிடம் பேச அச்சப்படுகிறார்கள் என்று சொன்னதற்கு, “ஏன் அச்சப்படுகிறார்கள் என்றார்?”, ”எங்களைப்போன்ற அமைப்புகளிடம்-கட்சிகளிடம் பேசினால் காவல்துறையில் இருந்து நெருக்கடி வருகிறது” என்றோம். “ அப்படியெல்லாம் வராது கேளுங்கள் என்றார்”. அந்த அறையில் ஐ.நா அதிகாரி ஒருவர் மற்றும் எங்களுடன் சேர்த்து 4 காவல்துறை அதிகாரிகள் இருந்தார்கள். எங்களைவிட அதிக எண்ணிகையில் காவல்துறையை அருகில் வைத்து பேச எந்த ஐ.நா பிரிவில் விதிமுறை இருக்கிறது எனத் தெரியவில்லை.

தமிழக அரசிற்கு எந்தப் பிரிவிலும் அதிகாரம் இல்லை என்பதை வெளிப்படையாக முதலமைச்சர் அலுவலகத்திலும்,, ஏனைய அலுவலகத்திலும் சொன்னார்கள். இதைப் பற்றி உள்துறையிடம் பேசுவதற்கோ, நடவெடிக்கை எடுப்பதற்கோ அதிகாரமில்லையெனில் தமிழ்நாட்டின் அரசு, சட்டமன்றமெல்லாம் கொலுபொம்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை தோழர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம். தமிழகமக்களிடம் இருந்து வரி வாங்கி இந்திய அரசிற்கு கொடுக்கும் காலனியாதிக்க ஜமீந்தாராகவே தமிழக அரசு இருக்க முடியும்.

லியோவின் இறுதிச்சடங்கிற்கு மட்டுமல்ல, மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு தமிழீழ அகதிகளுக்கு இந்திய அரசின் எந்தப் பிரிவிலும் இடம் இல்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடியும்.