புரிந்துணர்வு உடன்படிக்கை காலப்பகுதியில் தேசியத் தலைவர் பிரபாகரன் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முகமாக தமிழகம், மலேசியா, தென்னாபிரிக்கா மற்றும் மொரிசியஸ் உட்பட அனைத்து தமிழர் பகுதிகளையும் சேர்ந்த தலைவர்களை -அமைப்புகளை வன்னிக்கு அழைத்து சந்தித்து ஒரு பொதுவான நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டுவந்தார்.

அந்த வகையில்தான் காலம்காலமாக சிங்களத்தால் சுரண்டப்பட்டுவரும் மலையகத் தமிழர்களை தமிழர் தேசத்துடன் கருத்தியல்ரீதியாக இணைக்கும் முயற்சியாக முரண்பட்டு நின்ற மலையகத் தலைவர்களை – அமைப்புக்களை ஒன்றிணைக்கும் தனது பணியை சிறப்பாக செய்து முடித்தார்.

“பொங்குதமிழ்” என்ற குறியீட்டு பெயருடன் நடத்தப்பட்ட மக்கள் எழுச்சிபோராட்டங்களில் மலையக மக்களும் மலையக தலைவர்களும் இணைந்து கொண்டது இதன் குறியீட்டுரீதியான செய்தியை உலகிற்கு எடுத்தியம்பியது.

சிங்களத்திற்கு குறிப்பாக இந்திய அரசிற்கு அச்சமூட்டும் செய்தியாகவும் அது இருந்தது.

மேற்குலக பிராந்திய சதிகளினூடாக புரிந்துணர்வு உடன்படிக்கை குழப்பப்படாது ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருக்குமாயின் மலையக தமிழர்களின் வாழ்வாதராம் புலிகளினூடாக இதன்வழி மேம்படுத்தப்பட்டிருக்கும்.

thonda-Ltte
ஆனால் இன்று முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு பிறகு தமிழர்களைக் காக்கவோ அவர்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்கவோ எந்த தலைவர்களும் இல்லை. அதற்கான வேலைத்திட்டங்களும் இல்லை.

இனஅழிப்பு அரசால் தொடர்ந்து சுரண்டப்பட்டு வந்த மலையக தமிழர்களை இன்று இனஅழிப்பு அரசு இயற்கை அனர்த்தத்திற்குப் பலியாக்கியிருக்கிறது.

இது இயற்கை அழிவு அல்ல. மலையக தமிழர்களின் இரத்தத்தையும் உழைப்பையும் சுரண்டி தின்னுவதையே குறியாகக் கொண்ட, அவர்கள் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் கலைப்படாத – அதற்கான கட்டுமானங்களைக் கட்டியெழுப்பாத இனஅழிப்பு அரசின் திட்டமிட்ட அழித்தொழிப்பு இது.

இன்று மீட்பு பணியைக்கூட சரிவர செய்யாமல் அதற்கான துரித அனைத்துலக உதவியைக் கோராமல் மவுனம் சாதிப்பதிலேயே இனஅழிப்பு அரசின் சதியைப் புரிந்து கொள்ளலாம்.

புரிந்துணர்வு உடன்படிக்கை காலப்பகுதியில்தான் தமிழர் தேசம் ஆழிப்பேரலை அனர்த்தத்தை சந்தித்தது. புலிகள் மிக துரிதமாகக் களமிறங்கி அன்று செய்த மீட்பு பணிகளை அனைத்துலக ஊடகங்களும் தொண்டு நிறுனங்களும் புகழ்ந்து எழுதின.

ஆயுதம் தரித்த இராணுவக்கட்டமைப்பு என்ற பிம்பத்தை புலிகளின் மீட்பு பணிகள் தகர்த்து எறிந்தன.

நடைறை அரசு – நிகர் அரசு ( de facto state ) என்று பல அனைத்துலக ஊடகங்கள் குறிப்பிடும் அளவிற்கு புலிகளின் மீட்பு பணிகள் அமைந்திருந்தன.

இந்த புகழாரங்களும் சிங்களத்தையும் இந்திய அரசையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

ஆனால் இன்று அனர்த்தத்திற்குள் சிக்கியுள்ள மலையக மக்களை இன்னும் மீட்க முடியாமல் இனஅழிப்பு அரசின் படைகள் திண்டாடுகின்றன.

தமிழர்கள் என்ற அசமந்த போக்கு பாதி மீ;ட்பு பணி குறித்த போதிய அறிவின்மை மீதி என்று இனஅழிப்பு அரசால் மலையக தமிழர்கள் அவர்கள் வீழந்து போன அதல பாதாளத்திலேயே விடப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களுக்கென்று ஒரு பேரம் பேசும் சக்தி உருவாகும் வரை மலையகத்தில் மட்டுமல்ல தமிழீழத்தில், தமிழகத்தில், மலேசியாவில், மொரிசீயசில், தென்னாபிரிக்காவில் தமிழர்கள் பாதாளத்தை நோக்கி வீழ்த்தப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள்.

தேசம் கடந்து எல்லைகள் கடந்து தமிழர்கள் ஒன்றிணைந்து சிந்திக்கவேண்டிய தருணம் இது.

ஈழம்ஈநியூஸ்.