Gajendrakumar_pressஎவர் அழைப்பு விடுத்தாலும் வடக்கு மாகாணசபை தேர்தலை புறக்கணிப்பதென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முடிவினில் எந்தவொரு மாற்றமும் இல்லையென அதன் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தினில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் கலந்து கொண்டு கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபை தேர்தலிற்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் தெரிவில் அதிருப்தியுற்றுள்ள அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுயேட்சைக்குழுவொன்றை போட்டிக்கு முன்னிறுத்த முற்பட்டுள்ளார்.இதற்கேதுவாக தனது பத்திரிகை ஆசிரிய பீடமூடாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையுடன் பேச்சுக்களை நடத்தியுமுள்ளார்.இதன் பிரகாரம் வேட்பாளர்களை இரு தரப்பும் சம அளிவினில் களமிறக்க சரவணபவன் தரப்பிடமிருந்து சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுமுள்ளது.

எனினும் தமது தேர்தல் புறக்கணிப்பு முடிவினில் எவ்வித மாற்றமும் இல்லையென தெரிவித்துள்ள  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவு படுத்த இன்று அவசர பத்திரிகையாளர் மாநாட்டை இன்று கூட்டியிருந்தது.

அங்கு இவ்விடயம்  தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த  பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எவர் அழைத்தாலும் தமது முடிவினில் மாற்றமில்லையென தெரிவித்தார்.13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாண முறைமையை ஏற்றுக்கொள்வதென்பது எமது மக்களிற்கு நாமே வெட்டிக்கொள்ளும் சவக்கிடங்கு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கூட்டமைப்பு போட்டியிடாது சுயேட்சைக்குழுவொன்றை இறக்கினால் அது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தீர்களே என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் தற்போது கூட்டமைப்பு பகிரங்கமாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையினில் அது பொருத்தமற்றதென தெரிவித்தார்.

தற்போதுள்ள ஒற்றை ஆட்சிக்குள்  தீர்வு என்பது எவ்வகையிலும் சரிவரப்போவதில்லையென தெரிவித்த அவர் எந்தவிதமான பிரயோசனமும் அற்று 25 வருடங்களிற்கு மேலாக நிராகரிக்கப்பட்டிருந்த மாகாண சபை முறைமையை தற்போது தூக்கிப்பிடிப்பது கேலிக்குரியதெனவும் தெரிவித்தார்.

முன்னதாக சரவணபவனின் மைத்துனரான வித்தியாதரனை முன்னிறுத்தி சுயேட்சைக்குழுவொன்றை களமிறக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது