மாகாண சபை முறைக்கோ கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கோ நான் ஆதரவு அளிக்கவில்லை – வரதராஜன்

0
644

Varatharajanநான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து விவகியதும் இத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியதும் சிலரால் தவறாகவே பார்க்கப்படுகின்றது. கூட்மைப்பை இவ்வளவு காலமும் விமர்சித்துவிட்டு இப்போது கூட்டமைப்பில் சேர்ந்து விட்டார் என்றும், மாகாண சபை முறையை இவ்வளவு காலமும் எதிர்த்துவிட்டு இப்போது ஏற்றுக்கொண்டவிட்டார் என்றெல்லாம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது

1987ல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை என்பன தமிழ் மக்களின் விருப்பமின்றி எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. இவற்றிற்கு எதிராக அன்றே பிரச்சாரம் செய்தேன். இந்த முடிவில் இன்றுவரை மாற்றமில்லை. எதிர்;காலத்திலும் மாறப் போவதில்லை.

இத் தேர்தலில் நான் கூட்டமைப்பை ஆதரிப்பதற்கு எடுத்த முடிவு நான் மாகாண சபைமுறையை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்றோ, கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்றோ, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்றோ பொருள் அல்ல. இவை அனைத்தையும் நான் நிராகரிக்கின்றேன். மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவது சரியா? பிழையா? இத் தேர்தலைப் பகிஸ்கரிப்பதா? என்ற விவாதங்கள் எல்லாம் முடிந்து, கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டது. இந்நிலையில் மேற்கொள்ளவேண்டிய முடிவு என்ன என்பதை மட்டுமே நான் கவனத்தில் எடுத்தேன். இத் தேர்தலில் கூட்டமைப்புத் தோற்கக் கூடாது அதிக பெரும்பான்மையோடு வெற்றிபெறவேண்டும் என்பதே என் முடிவாக இருந்தது.

இம் முடிவிற்கு பின்வருவன காரணங்களாக இருந்தன.

1. இலங்கையில் வட மாகாணம் தமிழர்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஒரேயொரு மாகாணமாகும். இம் மாகாணத்தில் வாழ்பவர்களில் 94 சதவீதத்தினர் தமிழர்களாகும். யாழ்ப்பாணம் (99 சதவீதம்), கிளிநொச்சி (99 சதவீதம்), முல்லைத்தீவு (88 சதவீதம்), வவுனியா (83 சதவீதம்), மன்னார்; (82 சதவீதம்).

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்வரையில் 53 சதவீதத்தினர் மட்டுமே தமிழர்கள். மட்டக்களப்பு (73 சதவீதம்), திருகோணமலை (31 சதவீதம்), அம்பாறை (17 சதவீதம்), எனவே கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் முடிவுகள் தமிழ் மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தமாட்டாது என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இந்தளவு அக்கறையை சர்வதேசம் காட்டவில்லை.
ele-north
ஆனால் வட மாகாண சபைத் தேர்தல் அவ்வாறனதல்ல. 94 சதவீத தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசத்தில் நடைபெறுகின்ற தேர்தலில் பெறப்படும் முடிவுகள் தமிழ் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக அனைவராலும் கருதப்படும். இந்நிலையில் இத் தேர்தலில் அரசாங்கத் தரப்பு வென்றாலோ அல்லது கூட்டமைப்புப் பெறும் ஆசனங்களுக்கு கிட்டிய ஆசனங்களைப் பெற்றாலோ அரசாங்கம் இதுவரைகாலமும் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் செய்துவந்த பொய்ப் பிரச்சாரங்களுக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் கொடுத்தது போலாகிவிடும். எனவே இத் தேர்தலில் கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதுவே கூட்டமைப்பிற்கான எனது ஆதரவிற்கு முதற் காரணம்.

2. இதுவரைகாலமும் நடைபெற்ற அனைத்து மாகாண சபைத் தேர்தல்களிலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியே வெற்றி பெற்று வந்துள்ளது. ஜனாதிபதியோடும் ஆளுநரோடும் இணைந்து போகின்ற மாகாண நிர்வாகமே பதவியில் இருந்துள்ளது. இதனால் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்குமிடையில் முரண்பாடுகள் தோன்றவில்லை. மாகாண சபைக்கு எதுவித அதிகாரமும் கிடையாது என்பதனை தமிழர் தரப்பு சட்ட வல்லுனர்கள் 13ம் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்ட சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கமளித்து வந்தனர். ஆனால் அதனை நடைமுறையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தமிழர் தரப்பிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சாதாரண மக்களுக்கு இந்த சட்ட வியாக்கியானங்கள் எதுவுமே விளங்கவில்லை.

உதாரணமாக மாகாண சபைக்கு காணி அதிகாரம் உண்டா? இல்லையா? என்பதனை சாதாரண மக்களுக்கும் விளங்;கக்கூடியவகையில் எவரும் விளக்கமளிக்கவில்லை. மாகாண சபைக்கு காணி அதிகாரம் கிடையாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மாகாண சபைக்கிருக்கும் காணி அதிகாரத்தைப் பறித்துவிட்டுத்தான் தேர்தலை நடாத்தவேண்டும் என்று ஒரு சாரார் கூறினர். காணி அதிகாரத்தை வழங்க மாட்டேன் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அவர் வழங்கத் தேவையில்லை அது ஏற்கனவே இருக்கின்றது என்று மற்றுமொரு சாரார் கூறுகின்றனர்.

அண்மையில் ஒரு நீதிமன்றம் மாகாண சபைக்கு காணி அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட அப்பீலை ஆராய்ந்த நீதிமன்றம் காணி அதிகாரம் இருக்கின்றது என்று தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட அப்பீலை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் காணி அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. இதில் எது சரி?

வடமாகாண சபையை கூட்டமைப்பு கைப்பற்றி இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தி இந்த மாகாண சபைக்கு எதுவித அதிகாரமும் இல்லை என்று ஏற்களவே கூறிவந்தததை நடைமுறையில் நிரூபித்துக்காட்டி மாகாண சபைமுறைமை எந்தவிதத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றமாட்டாது என்பதனை சர்வதேசத்திற்குக் காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிபெறவேண்டும் என ஆதரவு அளித்தேன். எனவே மாகாண சபை முறைக்கோ கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கோ நான் ஆதரவு அளிக்கவில்லை. இத் தேர்தலில் கூட்டமைப்பு தோற்கக்கூடாது – அதிக பெரும்பான்மையோடு வெற்றிபெறவேண்டும் என்பதற்கு மட்டுமே நான் ஆதரவு அளித்தேன். கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களும் இந்த உணர்வோடுதான் வாக்களித்தார்கள்.

இம்முடிவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து கொண்டு அறிவித்திருந்தால் அவர்களுக்கும் சங்கடம் எனக்கும் சங்கடம். எனவேதான் ஒதுங்கியிருந்த நான் பதவி விலகல் கடிதத்தை அவர்களிடம் வழங்கிவிட்டு அதனைப் பகிரங்கப்படுத்தவேண்டிய தேவையும் ஏற்பட்டது.

வரதராஜன் சின்னத்துரை
பொருளியல் ஆசிரியர்