நவம்பர் 26ஆம் நாள், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது 60ஆம் ஆண்டு பிறந்தநாள் வருகின்றது. உலகத் தமிழர்கள் அதனை மகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர்.

thambi
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கொள்கை இதழாக வெளிவந்து கொண்டுள்ள ‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்’ இதழில், அமைப்பின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், ‘மாமணிக்கு மணிவிழா ஆண்டு!” என்ற தலைப்பில் தலையங்கக் கட்டுரை எழுதியுள்ளார். அது வருமாறு:

“எங்கள் குல நாயகன்; எம் இனத்துத் தலைவன்; எங்களுக்குத் தம்பி; எங்களுக்கு அண்ணன்; வாராது வந்த மாமணி; எல்லாமாகி நிற்கின்ற தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனுக்கு மணிவிழா ஆண்டு! வாழ்க எம் விடுதலை வேந்தே!

அறத்தினால் வீழ்ந்தாய்; ஆரியத்தின் சூழ்ச்சியால் வீழ்ந்தாய்! ஆயினும் ஐந்து கண்டங்களில் வாழும் தமிழர் நெஞ்சமெல்லாம் எழுந்து நிற்கிறாய்!

அறத்திற்கு மட்டுமன்று, அநீதியை ஒழிக்கும் மறத்திற்கும் அன்பே துணை என்றான் நம் பாட்டன் வள்ளுவன். அதற்குத் தானே நீ ஆயுதம் எடுத்தாய்!

மக்கள் மீது மாறாத அன்பு உனக்கு; அந்த மக்களின் விடுதலைக்காக; நீ பெற்ற மக்களைக் களப்பலி கொடுத்தாய்! குடும்ப ஆதாய அரசியல் கோலோச்சும் தமிழகம், உன் குடும்பத்தைப் பார்த்தல்லவா திருந்த வேண்டும்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாநில முதலமைச்சர் பதவி உன்னைத் தேடி இருமுறை வந்தது. அற்பச் சலுகைகளைத் தந்து இலட்சிய வீரர்களை மடக்கும் ஆதிக்கசக்திகளின் தந்திரத்தை நானறிவேன் என்றாய்! எனக்கொரு பதவிக்காக போராடவில்லை, எம்மின விடுதலைக்காக போராடுகிறேன், ஒரு முதலமைச்சர் பதவிக்காக என் இனத்தை விற்கமாட்டேன் என்றாய்!

“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ!” என்றான் பாரதி. பேரம் பேசுவதற்காக விடுதலை முழங்கியோர் பிச்சைப் பதவிகளை ஏற்றார்.

இலட்சியத்தை விட்டுவிட்டால் – இயக்கத்தைத் தடை செய்யவில்லை என்றார்கள். இலட்சியமில்லாவிட்டால் இயக்கம் எதற்கு என்றாய்!

உன்னை அண்ணன் என்றும் தம்பி என்றும் ஒரு கையால் தழுவிக்கொண்டே, பிச்சைப் பதவிகளுக்கு இன்னொருகையை நீட்டுகிறார்கள் நெருப்பின் செல்வனே!

சொல்லுக்கேற்ற செயல், செயலுக்கேற்ற சொல் என்று ஆக்கிக் கொண்ட செம்மலே, உன் இயக்கத்தை முள்ளிவாய்க்காலோடு முடித்து விட்டதாக பகைவர்கள் பறைசாற்றித் திரிகிறார்கள். எந்தப் பக்கமிருந்து உன் படை வருமோ என்று உள்மனத்தில் பதைபதைத்துக் கிடக்கிறார்கள்.

உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் காற்றாய் மாறிவிட்டது முன்னவனே!

இன்றிருப்பதைவிட எதிர்காலத்தில் இன்னும் பல மடங்கு உனது புகழ் பரவும் பார்வதி மைந்தனே, உன் செல்வாக்கு பல மடங்கு வேர்விடும் வேலுப்பிள்ளைப் பிரபாகரனே!

தமிழ்த் தேசியப் பேரியக்கம் உனக்கு 60ஆம் ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் தொடந்து துணை நிற்பதென்ற உறுதியில் மேலும் உரமேற்றிக் கொள்கிறது”

(நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 15-30 இதழ்)

==========================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.