மாமனிதர் தராகி சிவராம் இனஅழிப்பு அரசின் கொலைக்குழுவால் கடத்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நாளை.

சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலரும் நம்பினோம்.

sivaram
இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் இன அழிப்பு அரசு திட்டமிட்ட தூர நோக்கில் அந்தப் படுகொலையை நிகழ்த்தியதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

தமிழ்த்தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை.

அவர் படுகொலை செய்யப்பட்ட காலத்திற்கும் தற்போது இருக்கும் காலத்திற்கும் இடையில் வரலாறே தலைகீழாக மாறி நிற்கிறது. ஆனால் இப்போதும் அவரது ஆய்வு சமகால வரலாற்றுக்கு அமைவாக எழுதப்பட்டிருப்பதை நாம் பிரமிப்புடன் பார்க்க கூடியதாக இருக்கிறது.

எத்தனை ஆய்வாளர்களின், அறிஞர்களின், புலமையாளர்களின் ஆய்வுகள் பொய்த்துப்போனதும் நேரத்திற்கு ஏற்றமாதிரி தமது தாளலயங்களை மாற்றிக்கொள்ளும் கபடத்தனத்தையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்கிறோம்.

சிவராம் இவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாக அன்றுமட்டுமல்ல இன்றும் நிற்கிறார்.

தமிழ்த்தேசியத்தின் சொத்து சிவராம்என்றால் அது மிகையல்ல.

இனஅழிப்பு நோக்கங்கங்களுடன் சிங்கள அரசு மட்டுமல்ல எமக்குள்ளிருந்துகூட வரலாற்றை மறைக்கவும் திரிக்கவும் பலர் களமிறங்கியிருக்கிற சூழலில் சிவராமின் இன்மை முன்பைவிட தற்போதுதான் எம்மை நிலைகுலையச் செய்கிறது.

இனஅழிப்பு அரசு தூர நோக்கில் அவரை இலக்கு வைத்ததன் காரணத்தை இப்போதுதான் நாம் முழுமையாக உணர முடிகிறது.

நேற்று தந்தை செல்வாவின் நினைவுநாள் நிகழ்வில் பேசிய சம்பந்தர் மீண்டும் தமிழீழ விடுதலைப்போராட்டம் குறித்தும் புலிகள் குறித்தும் நிறைய உளறிக் கொட்டியிருக்கிறார்.

அரச பயங்கரவாதத்திற்கெதிரான விடுதலைப்போராட்டம்,புரட்சிகர வன்முறை, மக்கள் போராட்டம் குறித்த எந்த வித புரிதலுமின்றி ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட இனங்களின் போராட்டங்களை பயங்கரவாத அரசுகள் சர்வதேச உறவுகள், பிராந்திய பூகோள நலன்கள் என்ற வகைமைக்குள் பொருத்தி எப்படி அழித்தொழித்து வருகின்றன என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் தமிழர்களின் போராட்ட சக்திகளான புலிகளின் அழிப்பை நியாயப்படுத்தி முடித்திருக்கிறார் சம்பந்தர்.

இத்தகைய புரிதல் உள்ள ஒருவர் எப்படி நமது பிரச்சினையை கையாள முடியும் என்ற தர்க்கம் இன்னும் எமக்கு புரியவேயில்லை.

அத்தோடு அந்த நினைவில் நினைவுப்பேருரையை நிகழ்த்திய ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவும் தன் பங்கிற்கு புலிகள் மீது குற்றத்தை சுமத்தி வரலாற்றை திரித்து விட்டு சென்றிருக்கிறார்.

மே 18 இற்கு பிறகு சில விதிவிலக்குகள் தவிர்த்து புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி ஒருவித தமிழர் விரோத உளவியலுக்குள் சிங்கள இனம் சிக்கிவிட்டது. அதை நாம் தினமும் அனுபவித்து வருகிறோம். கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன அதன் தொடர்ச்சிகளில் ஒன்றுதான்..இதில் நாம் நோக ஒன்றுமேயில்லை.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் அரசியல் செய்பவர்களே வரலாற்றை திரித்து தமிழர் விரோத அரசியல் செய்யும்போது சிங்கள அறிஞர்களிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்!

இப்போது அதுவும் அவரது நினைவு நாளில் நாம் சிவராமை நினைத்துப் பார்க்கிறோம்.

நேற்று நடந்த நிகழ்வில் பேசிய சம்பந்தருக்கு மட்டுமல்ல கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன விற்கும் தமிழர் அரசியலின் பால் நின்று தமிழ்த்தேசிய தளத்தில் தெளிவாக வரலாற்று ஆதாரங்களுடன் பதில் எழுதுவது மட்டுமல்ல அதை ஒரு ஆவணமாகவும் சேமித்திருப்பார் சிவராம்.

இதன் வழி நாம் உணர்வது நாம் இழந்தது சிவராம் என்ற மனிதனை அல்ல தமிழர்களின் வரலாற்றை _ ஒரு ஆவணக் கருவூலத்தை.

எனவே எமது இளைய தலைமுறை சிவராம் போன்றவர்கள் எடுத்து செல்ல முற்பட்டபணியை தொடர்ந்து காவ முன்வரவேண்டும்.

தேசிய சிந்தனைகளை வளர்த்து தீர்க்கமான தேடலுடன் தமிழர் வரலாற்றை கள ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் அவசரமும் அவசியமானதுமான பணியாக இதுவே இருக்கிறது.

இதுவே மாமனிதர் தராகி சிவராமிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலி மட்டுமல்ல எமது அடுத்தகட்ட போராட்டத்திற்கான உறுதியான அடித்தளமும் கூட.

ஈழம்ஈநியூஸ்.