மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் சுயநிர்ணய உரிமை, அனைத்துலக விசாரணை, அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறை, மக்கள் வாக்கெடுப்பு, இராணுவ வெளியேற்றம் ஆகிய நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் முன்வைத்து இடையறாது போராடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Rudra6
இந் நிலைப்பாடுகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு அனைத்துலக சமூகம் தயங்குகின்ற போதும் இவற்றின் நியாயப்பாடுகளை அவர்களால் நிராகரித்து விட முடியாது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல், இந்து சமூத்திர அரசியல், தமிழ்பேசும் முஸ்லீம் சகோதரர்களுடனான உறவு, மலையகத் தமிழர்களுடனான உறவு என தமிழீழ விடுதலையினை மையப்படுத்திய பல்வேறு விடயங்கள் பற்றி பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கை முன்வைத்துள்ளது.

அவ்வறிக்கையின் முழுவடிவம் :

இன்று மாவீரர் நாள்!

தாயக விடுதலைக்காய் களமாடி வீழ்ந்து விதையாகிப் போன நமது நாயகர்களின் பெருநாள்.
தமது வீரத்தின்; மூலமும் ஈகத்தின் மூலமும் சின்னம் சிறிய தமிழீழ தேசத்துக்கு அரசியற் பலத்தை வழங்கி அனைத்துலகின் கவனத்தை ஈர்க்கச் செய்தவர்களின் திருநாள்

தாம் கடப்பது நெருப்பாறு என்பதனை நன்கு தெரிந்திருந்தும், தமது பயணத்தின் முடிவு வீரச்சாவு என்பதனை நன்கு உணர்ந்திருந்தும்;, மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காய் அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட மகத்தானவர்களின் நினைவு நாள்.

தமிழீழ மக்கள் மகிழ்வாக, சமத்துவமாக, சிங்களத்தின் இனஅழிப்;புக்கு உட்படாது பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, சமூகநீதி கொண்ட தமிழீழ தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக உழைத்த உத்தமர்களின் உன்னத நாள்.

தமிழர் வீரத்தின் அடையாளமாகிப் போனவர்கள் நமது மாவீரர்கள்;. வரலாற்றை முன்னோக்கி நகர்த்தியவர்கள் நமது மாவீரர்கள்.

மாவீரர்கள்

அச்சம் அறியாதவர். ஆன்மபலம் மிக்கவர்;. இளகிய நெஞ்சம் கொண்டவர். ஈகத்துக்குப் பொருள் தந்தவர். உறுதி கொண்ட நெஞ்சினர். ஊர்க்காவல் புரிந்தவர் எல்லைகள் காத்தவர் ஏற்றம் தந்தவர் ஐயம் களைந்தவர.; ஒன்றுபட்டு நின்றவர் ஓர்மம் படைத்தவர்.

மொத்தத்தில் எமக்கு எல்லாமுமாகி நின்றர்கள் நமது மாவீரர்கள்.

இத்தனை சிறப்பு மிக்க எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இன்றைய புனித நாளில் உலகத் தமிழ் மக்களுடன் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மாவீரர்களுக்குத் தனது வீரவணக்கத்தைத் தலை சாய்த்து செலுத்திக் கொள்கிறது.

அன்பான மக்களே!

தொன்மையான ஆனால் இளமைத் துடிப்போங்கும் வளம் மிக்க செம்மொழியான தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் நாம்.

மொழி வளத்துடன் கூடவே பண்பாட்டுச் செழுமையையும், மெருகான இலக்கியங்களையும் முன்னோடியான வாழ்க்கை முறையையும், கடும் உழைப்பையும் கொண்ட வளர்ச்சியடைந்த ஒரு தேசிய இனத்தவர்கள் நாம்.

இத்தகைய தமிழீழ தேசிய இனத்தை அழித்தொழிப்பதற்கான செயலில் சிங்கள அரசு நீண்ட நெடுங்காலமாய் ஈடுபட்டுவருகிறது. அத்தகைய அழிப்பைத் தடுத்து தமிழீழ தேசியத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக நாம் போராட வேண்டியுள்ளது.

நாம் பிரிவினைவாதிகள் அல்ல, ஏனைய இனங்களுடன் கூடி வாழ விரும்பாதவர்களும் அல்ல. சிங்கள அரசின் இன அழிப்பிலிருந்து தற்காப்பதற்காக விடுதலை வேண்டி நிற்கும் மக்களாகவே நாங்கள் உள்ளோம்.

நாம் தற்காப்பதற்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் எமது செழுமையான தேசிய இனத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்காகவும் போராட வேண்டிய, விடுதலை அடையவேண்டிய தவிர்க்க முடியாத வரலாற்றுக் கட்டாயத்தில் இன்று உள்ளோம்.

இந்த உலக நாகரீகமானது பல்லினப் பண்பாட்டு தன்மையை ஏற்றும் போற்றியும் செயற்பட்டுவரும் யுகத்தில் சிங்கள அரசு தனது சிங்கள பௌத்த ஓரினத்தன்மையை இறுதி இலட்சியமாகக் கொண்டு தமிழின அழிப்பை இடையறாது மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய இன அழிப்பிலிருந்து தற்பாதுகாப்புப் பெறுவதற்கு இன அழிப்பைப் புரிந்து வரும் இனத்திடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசு ஒன்றை அமைப்பதைத் தவிர வேறு வழி எதனையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.

ஓன்றுபட்ட இலங்கைக்குள் ஐக்கியமாக வாழவே ஈழத்தமிழர்கள் எப்போதும் விரும்பினர். இலங்கைத் தீவுக்கு முழுச்சுதந்திரம் வேண்டி முதலாவது சுதந்திர அமைப்பை 1919ஆம் ஆண்டு உருவாக்கியது ஈழத்தமிழ் தலைவரான சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆவார். பௌத்தர்களின் புனித தினமான ‘வெசாக்’ தினத்தை பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் போராடி விடுமுறை தினமாக்கியவர் அவரது சகோதரர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆவார்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்குப் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று 1944ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருந்த போதிலும் ஈழத்தமிழர்கள் பிரிந்து செல்வது பற்றி அந்நேரம் சிந்திக்கவில்லை.

சிங்கள அரசின் தொடர்ச்சியான இனஅழிப்பு நடவடிக்கைகளின் விளைவாக தவிர்க்க முடியாத நிலையில் 1976ஆம் ஆண்டுதான் பிரிந்து செல்வது என்ற முடிவுக்கு தமிழ்த்தலைவர்கள் வந்து 1976ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் பிரிந்து செல்வதற்கான ஆணையாகப் பயன்படுத்தி அதில் பெருவெற்றியீட்டி அதற்குத் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டனர். ஆதலால் ஒடுக்குமுறையின் அளவும் நிர்ப்பந்தமுமே நாம் விடுதலை பெற வேண்டும் என்பதற்கான அவசியத்தை எமக்குத் தந்தன.

அன்பானவர்களே!

இனஅழிப்பு யுத்தம் முடிந்து ஐந்தரை ஆண்டுகள் கழிந்த பின்பும் இதுவரை தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி சிங்கள அரசு ஓர் அங்குலம் கூட நகரவில்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு மேல் சென்று (1310) அரசியல் தீர்வு காணப்படும் என சர்வதேச நாடுகளுக்கு இராஜபக்ச உறுதியளித்து சர்வதேச அரசியல் இராணுவ உதவிகளுடன் இனப்படுகொலை யுத்தத்தை அரங்கேற்றினார்.

ஆனால் அந்த யுத்தத்தில் இராஜபக்சவுக்கு ஆயுத, தளவாட மற்றும் இராணுவ உதவிகளையும், அரசியல் நகர்வுகளையும் மேற்கொண்ட சர்வதேச நாடுகளினால் தமிழ்மக்களது உரிமைக்கான ஓர் அடியைத்தானும் இதுவரை முன்னெடுக்கச் செய்ய முடியவில்லை.

அரசியல் சட்ட ஏற்பாடுகள் வாயிலாகவும் மற்றும் சட்ட ஏற்பாடுகள் வாயிலாகவும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணலாம் என்று வாதிடுவதும் நம்புவதும் தவறானவை என்பதை இவை உணர்த்துகின்றன. சிங்கள மக்களிடமும், சிங்களத் தலைவர்களிடமும் காணப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான ஆழ்மனத்தில் உள்ள மனப்போக்குதான் இதற்குக் காரணம்.

புவியியல் அமைவிடமே இனப்பிரச்சனைக்கான முக்கிய அடிப்படையாய் காணப்படுகிறது.

இந்தியாவுடன் ஒட்டினாhற்போல் ஈழத்தமிழரின் புவியியல் அமைவிடம் அமைந்துள்ளது. இலங்கைத் தீவின் மீது ‘இந்திய ஆதிக்கப் படர்ச்சி’ என்று கூறி இந்தியாவின் மீது தமக்கு இருக்கும் வரலாற்று ரீதியான அச்சத்தின் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தமது யுத்தத்தை சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீது புரிந்து வருகிறது.

ஈழத்தமிழரை இந்தியாவுடன் இணைத்துப்பார்;த்து ஈழத்தமிழர் வாயிலாக இலங்கையில் இந்தியா காலூன்றும் என அச்சம் காட்டி அதன்படி ஈழத்தமிழரை அழித்தொழித்து விட்டால் இலங்கையில் இந்தியா காலூன்ற வழியிருக்காது என்ற கற்பிதத்தில் ஈழத்தமிழரை சிங்கள அரசு பல வழிகளிலும் அழித்தொழித்து வருகிறது.

ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியாவுடன் சார்புபடுத்தி வெளி அரசுகளும் பார்க்கின்றன. அதாவது இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ இருப்பது என்ற நிலையில் நின்றுதான் வெளியரசுகள் ஈழத்தமிழர் பிரச்சனையை அணுகுகின்றன. இதுவே அரசியல் யதார்த்தமாகும்.

வெளியரசுகளும் வல்லரசுகளும் இலங்கை அரசுடனோ அல்லது இந்திய அரசுடனோ தொடர்புள்ள தத்தம் எதிரும் புதிருமான நலன்களின் நிமித்தம் இப்பிரச்சனையில் சார்பு நிலையை எடுப்பதினால் இது பல்பரிமாணம் கொண்டு சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ளது.

21ஆம் நூற்றாண்டு அரசியலில் இந்து சமுத்திரம் அதன் முதுகெலும்பாய் விளங்கும் என்று அரசியல்
பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

வளர்ந்துவரும் சீனா தனது வளர்ச்சிக்கு ஏதுவாக இந்துசமுத்திரத்தின் மீதான தனது ஆதிக்கத்தை இலக்கு வைத்துள்ளது. இந்து சமுத்திரத்தில் உள்ள 43 நாடுகளினிடையே பெரிய முக்கிய நாடான இந்தியாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது நலனை ஈட்டலாம் எனச் சீனா முனைகிறது.

இதனால் இந்தியாவை நோக்கி சீனா மூவகை உபாயங்களை வகுத்துள்ளதாகச் சர்வதேச உறவுகள் சார்ந்த அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவைச் சுற்றிவளைத்து முடக்க சீனா முனைகிறது. இவ் உபாயத்தினை நுnஉசைஉடநஅநவெஇ நுnஎநடழிஅநவெஇ நுவெயபெடநஅநவெ அல்லது வட்டம் கீறுதல்;, சுற்றிவளைத்தல்;, சிக்கவைத்தல் என அழைக்கின்றனர். இத்தகைய மூவகை உபாயத்திற்கான மையப்புள்ளியாய் இலங்கைத் தீவை சீனா கருதுகிறது.

இந்த வகையில் சீனா இந்தியாவை முடக்கும் முயற்சியில் இலங்கைத் தீவு இராணுவ கேந்திரம் என்ற வகையிலும்;, கடல்வழி போக்குவரத்து ரீதியான வர்த்தகம் என்ற வகையிலும்; இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கவல்லது என்ற அரசியல் அர்த்தத்திலும் சீனாவுக்கு பயன்படவல்ல கருவியாயுள்ளது.

இந்தியாவை முடக்குவதற்கு மட்டுமன்றி பரந்த கடல்வழி ரீதியான போக்குவரத்திற்கும் சீனா இலங்கையைக் குறிவைத்துள்ளது. இதனால் தான் சீன அரசானது சிங்கள அரசின் இனப்படுகொலை அரசியலுக்கு நிபந்தனையற்ற ஆதரவையும் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதரவுகளையும், அணுசரணைகளையும் உறுதிபட பலமாக வழங்கிவருகிறது.

சீனாவின் பிடியில் சிக்கியிருக்கும் இலங்கைத்தீவில் இந்திய மக்களது நலன்கள் படிப்படியாகப் புறக்கணிக்கப்படும் என்பதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழ தேசத்துடன் உறுதியாகக் கைகோர்ப்பதே இந்திய மக்களதும் தமிழீழ மக்களதும் நலன்களை உறுதி செய்யும் என்ற கருத்தை இந்திய அரசு ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என நாம் கோருகிறோம். இந்திய மக்களுடன் இவை குறித்து விரிவாகப் பேசுவதற்குத் துணைசெய்யும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தின் பணிமனைகளை விரைவில் சென்னையிலும் புதுடில்லியிலும் திறப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலையைச் சிங்கள அரசு தான் வகுத்துக்கொண்ட ஒரு சர்வதேச வியூகத்துக்குள்தான் அரங்கேற்றியது என்பதை நாம் நன்கு புரிந்துகொண்டு எமது விடுதலைக்கான ஒரு சர்வதேச வியூகத்தை நிதானத்துடனும், பொறுப்புடனும் வகுக்கவேண்டியுள்ளது.

இவ் அரசியல் நகர்வுகளில் ஒரு பிரதான எதிரியையும், முனையையும் அடையாளம் கண்டு குறைந்த பட்ச உடன்பாடுகளின் அடிப்படையில் பரந்த நட்பு நாடுகளின் உறவைத் தேட வேண்டும்.

அவ்வாறு இயங்குவதன் மூலம் மாவீரர்களின் கனவை நனவாக்குவதுடன் மக்களுக்கான விடிவையும் நாம் தேடவேண்டும். இதில் பொறுப்புடனும், அறிவார்ந்த பார்வையுடனும், அதிகபட்ச ஐக்கியத்துடனும் ஈழத்தமிழராகிய நாம் இன்று செயற்படவேண்டியுள்ளது.

இனஅழிப்பு முயற்சியில் யுத்தம் ஒரு கட்டம் மட்டுமே. யுத்தத்தின் வெற்றி அல்லது முடிவு இன அழிப்பைத் தொடர்வதற்கான ஒரு வழிவகையாகும். இராஜபக்ச அரசு யுத்;தத்தை இனப்படுகொலை மூலம் முடிவுகட்டியமையானது இனப்படுகொலையைத் தொடர்வதற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கியதாகவே தென்படுகிறது. எனவே யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு பெரிதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலானது இராஜபக்ச வெற்றி பெறுவதற்காக நடாத்தப்படும் ஒரு தேர்தலாகும். வெற்றி பெறுதற்காகத்தான் இரண்டாண்டுகள் முன்கூட்டியே அவர் தேர்தலை நடத்துகிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இதுபற்றி ஒரு சரியான கணிப்பீட்டை மேற்கொள்வது அவசியம். இராஜபக்ச வெற்றிவாய்ப்பைக் கணக்கில் எடுத்து இத்தேர்தலை நடத்துகிறார் என்பது உண்மை. குறைந்த பட்சம் ஒரு பொதுவேட்பாளரை பலம்பொருந்திய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து முன்னிறுத்த முடியவில்லை என்பதும் இராஜபக்சவின் கட்சியினுள் அவரது அமைச்சராகச் செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறீசேன என்பவரைத்தான் பொது வேட்பாளராக நிறுத்த முடிந்ததைப் பார்க்கும்போது எதிர்தரப்பில் உள்ள இயலாமை தெளிவாகத் தெரிகிறது.

நடைபெறப் போகும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ச வெற்றி பெற்றால் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவர் பதவியில் நீடிக்கமுடியும். அதேவேளை இத்தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தாலும் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார்.

இராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றால் அது தனது இனஅழிப்பு நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டு மேலும் தனது இனஅழிப்பு நடவடிக்கையை மேற்கொள்வார்.

தோல்வியடைந்தால் எஞ்சியிருக்கும் 2 ஆண்டு பதவிக்காலத்திலும் மேலும் தீவிரமாக இனவாதத்தை முன்னெடுப்பதன் மூலம் தன்னைப் பலப்படுத்தவும் அதிகாரத்தில் நீடிக்கவும் வாய்ப்புண்டு. ஆதலால் வெற்றியோ தோல்வியோ இருவழிகளிலும் இன அழிப்பு முதன்மை பெறப்போகிறது என்பது தெளிவாக உள்ளது. இதனை முன்னுணர்ந்து நாம் எமது அரசியல் முன்னகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இனஅழிப்பு சம்பந்தமான நீதிவிசாரணை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியம். முதலில் எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இதனை முதன்மைப்படுத்தி தமிழ் தரப்புக்கள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.

தமிழீழ விடுதலைக்கான அடிப்படை ஏற்பாடுகளை ஜனநாயக வழிமுறையின் கீழ் நாம் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய சர்வதேச அரங்கில் அதிகபட்ச நண்பர்களைத் தேடவும் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தக்கூடிய நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புக்களுக்கும் நாம் தயாராக வேண்டும். தற்போது எமக்கு ஓரளவு வாய்ப்பான சர்வதேச சூழல் காணப்படுகிறது. இதனை நாம் உயர்ந்த பட்சம் பயன்படுத்தவும் வேண்டும்.

அன்பான மக்களே!

இன்றைய மாவீரர் நாள் 25வது மாவீரர் நாளாகும். முதன் முதலில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான 25 வருட காலத்தில் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலைக்கான போராட்டம் எத்;தனையோ ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்து வந்துள்ளது.

போராட்டத்தில் பின்னடைவுகள் ஏற்பட்ட போதெல்லாம் அதனை முன்நோக்கி நகர்த்துவதில் மாவீரர்கள் தீர்க்கமான பங்கினை ஆற்றியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்கான பிரதிநிதிகளாக இருந்து தமது உயிரை ஆகுதியாக்கியதன் மூலம் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் போராட்டம் சந்திக்கும் சவால்களைக் கடந்து அதனை முன்நோக்கி நகர்த்தும் பொறுப்பினை மாவீரர்கள் தமிழ் மக்களாகிய எம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதற்காக நாம் அரசியல் இராஜதந்திர வழியில் எமது போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்து, ஜனநாயக வழியில் செயற்பட்டு வருகிறோம்.

இந்த வழிமுறை உடனடிப் பெறுபேறுகளை இலகுவில் தந்து விடுவதில்லை. இந்த வழிமுறை மூலம் மாற்றங்களை விரைவாக ஏற்படுத்த முடிவதுமில்லை. ஆனால் இந்த வழிமுறை தார்மீக அடிப்படையிலான வலுவைக் கொண்டது. எவராலும் இலகுவில் நிராகரிக்கப்பட முடியாதது. இந்த வழிமுறையினை வலுவாக்க அனைத்துலகத்தால் நிராகரிக்கப்படமுடியாத நிலைப்பாடுகளைக் கருத்தளவில் நாம் ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும். அதனை நோக்கிச் செயற்படவேண்டும்.

கருத்தளவில் வலுப்படும் இந் நிலைப்பாடுகள் உரிய அரசியல் மாற்றங்களை உருவாக்கும் சக்தி கொண்டவை. உருவாகும் மாற்றங்களை கெட்டியாகப் பிடித்து முன்னோக்கிச் செல்லக் கூடியவை.

இந்த வகையில் பின்வரும் நிலைப்பாடுகளை நாம் அனைத்துலக அரங்கில் உறுதியாக முன்வைத்து செயற்படுதல் அவசியமானதாகும்.

1. தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

2. ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வுமுறை குறித்து தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் மக்கள் வாக்கெடுப்பொன்று அனைத்துலக சமூகத்தின் பங்கு பற்றலோடு நடாத்தப்பட வேண்டும்.

3. தமிழீழ மக்கள் மீது சிங்களத்தால் நடாத்தப்பட்ட, நடாத்தப்படுகின்ற இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

4. போர் முடிவடைந்த பின்னரும் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடியதான அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

5. தமிழீழத் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

இந் நிலைப்பாடுகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு அனைத்துலக சமூகம் தயங்குகின்ற போதும் இவற்றின் நியாயப்பாடுகளை அவர்களால் நிராகரித்து விட முடியாது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் இறுக்கமாகச் சிக்குண்டு போயிருக்கும் சிங்கள சிறிலங்கா அரசாலோ அல்லது அதனது எந்தத் தலைவர்களாலுமோ தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வேதும் கண்டுவிட முடியாது. இந்த யதார்த்தம் எமது நியாயமான நிலைப்பாடுகளுக்கு உரிய அங்கீகாரத்தைத் தேடித் தரும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.

தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லீம் மக்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு அல்லற்பட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் சிங்களப் பேரினவாதம் முஸ்லீம் மக்களைக் குறிவைத்து வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது. இதனால் தமிழ் மக்களுடன் இணைந்த வகையில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கெதிரான போராட்டத்தை நடாத்துவதே இன்று முஸ்லீம் மக்கள் முன்னால் உள்ள சிறந்த தெரிவாகும். இதுவே இரண்டு சமூகங்களுக்கும் நன்மை தரக் கூடியது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டு நாம் தோழமையுணர்வுடன் செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.

நாம் விடுதலை பற்றிச் சிந்திக்கும் போது நமது சோதரர்களான மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் அக்கறை கொண்டவர்களாக உள்ளோம். இம் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படுவற்கு என்றும் நாம் உறுதுணையாக இருப்போம்.

தமிழீழத்தின் கதவுகள் மலையகத் தமிழ் மக்களுக்காக என்றும் திறந்திருக்கும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரது நிலைப்பாடு தமிழீழத்தின் கொள்கை நிலைப்பாடாகவே அமையும்.
அன்புக்குரியவர்களே!

மாவீரர்களின் கனவுகள் தமிழீழம் என்ற சுதந்திரத் தனியரசின் உதயத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இம் மாவீரர்களின் ஈகங்கள் என்றும் வீண் போகாது. இம் மாவீரர்களை எமக்களித்து இன்று அவர்களுக்கான வணக்கத்தையும் செய்ய முடியாத நிலையில் தாயகத்தில் வேதனையுறும் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவுகளின் கரங்களை நாம் ஆதரவுடன் பற்றிக் கொள்கிறோம். உங்கள் பிள்ளைகளின் கனவு மெய்ப்படும்.

தமிழீழ தேசத்தின் விடுதலைப் புதல்வர்களின் நினைவுகளை எம்முள் உயிர்ப்புடன் உள்வாங்கி மாவீரர் கனவை நனவாக்கும் பெரும்பணியில் நாம் அயராது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்,

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.