may17-0தமிழின அழிப்பின் எட்டாவதுஆண்டை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல நாம் தொடர்ந்து இ;னஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சிங்களம் மட்டுமல்ல பிராந்திய – மேற்குலக சக்திகளுடன் எமது அரசியல்வாதிகள் மற்றும் பல அரசியற் செயற்பாட்டாளர்களும் காரணம் என்பதை இன்றைய நாளில் வரலாறு அழுத்தமாகப் பதிவு செயதுகொள்கிறது.

 

மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அன்றிலிருந்துதான் ஐக்கிய இலங்கை, நல்லிணக்கம் என்ற பதங்களை எதிரிகள் மட்டுமல்ல அனைத்துலக சமூகமும் மிகத்தீவிரமாக உச்சரிக்க தொடங்கியிருக்கிறது.

 

இதன் ஒரு பகுதியாகவே இனஅழிப்பு அரசு ‘நினைவு அழிப்பு’ அரசியலை மிகத்தீவிரமாக முன்னெடுக்கிறது. இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் அது அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நினைவு அழிப்பினூடாக நடந்த இனஅழிப்பை மறைத்து தமிழர்களுக்கான நீதியை கொடுக்க மறுப்பதுதான் இதன் பின்னுள்ள அபாயகரமான அரசியல்.

 

இதற்காக நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற கோசங்களை உரத்து பேசுகிறது. இதன் குருரமான பின்னணியை புரிந்தவர்களாக நாம் இதற்குள் சிக்குபடாமல் நடந்த இனஅழிப்பிற்கான நீதியை நோக்கி அனைத்து மட்டங்களிலும் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

 

ஆனால் எமக்குள்ளிருந்தும் இனஅழிப்பு அரசு மற்றும் பிராந்திய – மேற்குலக சதியின் ஒரு பகுதியாக இந்த ‘நினைவு அழிப்பு’ அரசியல் நிகழ்ச்சி நிரலை காவ – அல்லது அதன் பொறிமுறையாக இயங்கும் ஒரு தொகுதியினராக பல தமிழ் அரசியல்வாதிகளும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களும் உருவாகியிருக்கிறார்கள்.

 

விளைவாக போராட்டம் மடைமாற்றப்பட்டு ஒரு முட்டுச்சந்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

 

எது ‘நினைவு அழிப்பு’ அரசியல்?

 

மிக எளிமையாக விளக்கினால் தமிழீழம் என்ற  De facto state இன் மூன்று தசாப்த வாழ்வை மக்களின் மன அடுக்கிலிருந்து உருவுதல். அதாவது முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.

 

அவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனது ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் 2009 காலப்பகுதியில் ஒட்டு மொத்த இனத்தையும் அதிர்வுக்குள்ளாக்கியது. இதைத்தான் ‘கூட்டு மன அதிர்வு’ என்ற உளவியல் சிக்கலாகக் அப்போது கண்டடைந்தோம்.

 

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்த்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்ட ஒன்று. திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிக மோசமான வன்முறையுமாகும்.

 

புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்தவரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.

 

நிலைமை அப்படி இருக்கும்போது எமக்குள்ளேயேயிருந்து ஒரு கும்பல் கிளம்பினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.?  புலிகளின் இல்லாமையை மீண்டும் மீண்டும் நிறுவும் ‘நினைவு அழிப்பு’ அரசியலினூடாக மேற்படி கருத்துருவாக்கங்கள்தான் சிதைக்கப்படுகின்றன. இதுதான் இந்த “நினைவு அழிப்பு” அரசியலின் அபாயமான பின்புலமாகும்.

 

அதாவது “புலி நீக்கம் ” என்பதனூடாக தமிழத்தேச கருத்தியல்தான் அழிக்கப்படுகிறதோயொழிய “புலி” என்ற அமைப்பியல் அல்ல.

 

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையான இனம், மொழி, பண்பாடு,  நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பேசப்படுகிற  ஒரு விடயமாக  இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது.

 

தற்போது எமக்கான நீதியை முற்றாக குழி தோண்டிப் புதைக்க ‘புலிகள’; என்ற கருத்தியலும் அவர்களின் சித்தாந்தமும் ‘நினைவு அழிப்பு’ அரசியலினூடாக தமிழ் பரப்பிலிருந்து நீக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் நாம் ‘புலி நீக்க’ அரசியல் என்கிறோம்.  இதற்காக எமக்குள்ளிருந்தே அன்னிய கைக்கூலிகளும் பதவி வெறிபிடித்த மேட்டுக்கு கனவான் அரசியல் செய்பவர்களும் நுட்பமாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்த்தேசியம் பேசியபடியே தமிழின விடுதலையை குழிதோண்டிப் புதைப்பதுதான் இவர்களின் பணி.

 

இந்த ‘புலி நீக்க’  அரசியலை நாம் ஏன் தொடர்ந்து எதிர்க்கிறோம் என்பதன் மிக எளிமையான விபரணம் இதுதான்.

 

“புலி”  என்ற குறியீட்டு பதத்தை தமிழ் பரப்பில் நாம் தொடர்ந்து நிறுத்துவது ஆயுதப்போராட்டத்தை முன்னகர்த்த அல்ல. ( அது நீண்டகால நோக்கில் ஒரு உதிரிக் காரணமாக இருப்பதை நாம் மறுக்கவில்லை) இந்த ‘நினைவு அழிப்பு’  அரசியலுக்கு எதிர்வினையாக – எமது இனத்தின் அரசியல் உள்ளடக்கத்தை தொடர்ந்து பேண நாம் எடுத்துள்ள அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

 

தமிழின அழிப்பினூடாக புலிகளை அழித்த மேற்குலக – பிராந்திய சக்திகள் புலிகளை பயங்கரவாத பட்டியலில் தொடாந்து வைத்திருக்கும் பின்புலமும் இதுதான். இதை எமது மக்களுக்குள் கடத்தி ‘ புலிக்கொடி பிடிக்க கூடாது, புலிகளின் அரசியலை முன்னிறுத்தக்கூடாது’  என்பது தொடக்கம் ‘புலிகளை நினைவு கொள்ளக்கூடாது’ என்பதுவரை வகுப்புக்கள் எடுக்கப்படுகிறது.

 

“புலிநீக்கம” என்பது சிங்களத்தினது மட்டுமல்ல இந்திய மேற்குலக நிகழ்ச்சி நிரல் என்பது எமது மக்களுக்கு தெளிவாகவே தெரியும்.

 

உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எடுக்கப்படும் இந்த ‘வகுப்புக்களுக்கு’ பெரிதாக மக்கள் பலியாகிவிடவில்லை என்ற போதும் எமது நீதிக்கான பயணத்திற்கு இது தடையாக இருக்கிறதென்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.

 

தமிழ்த்தேசியம் பேசியபடியே இந்த ‘நினைவு அழிப்பு’ அரசியலின் அடித்தளமான ‘புலி நீக்க’ அரசியலை தமிழ்ப்பரப்புக்குள் கடத்தும்போது ஒரு அதிர்வு ஏற்படத்தான் செய்யும்.

 

இதை மக்கள் எப்படி எதிர் கொள்வது?

 

ஒரு விடுதலைப் பேராட்ட வரலாற்றில் தோல்வி என்ற பதம் என்றைக்குமே பொருத்தப்பாடுடையதல்ல. அதை ‘பின்னடைவு’ என்றே புரட்சியாளர்கள் எடுத்தியம்புகிறார்கள். அதையும் புலிகள் ‘பின்னகர்வு’ என்ற பதமாக வரையறுத்து அந்த பின்னடைவில் வெற்றிக்கான சூத்திரங்களை தனியே பிரித்தெடுத்தார்கள்.
எனவே புலிகளின் பாணியில் மக்களும் மாறியுள்ள ஆட்சியை தமக்கு சாதகமாக்கி ( இந்த ஆட்சி மாற்றம் எமக்கு பாரிய பின்னடைவு என்ற புரிதல் உள்ளபோதும்..) நினைவு அழிப்பு அரசியலுக்கு – புலி நீக்க அரசியலுக்கு எதிராக எதிர்வினையாற்றுவதனூடாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.

 
தமிழ் அரசியல்வாதிகளினதும்,  மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களினதும் நுட்:பமான ‘புலி நீக்க’ சதிக்குள் தம்மை பலியாக்காமல் சுயமாக இயங்குவதனூடாகவே இதைச் சாதிக்க முடியும்.

 

எனவே இந்த ‘மே 18’  தமிழின அழிப்பு நாளில் மக்கள் கூட்டாகவோ அல்லது  பகுதியாகவோ தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து மண்மீட்பு போரில் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதனூடாக மிகப் பெரிய அரசியலை எழுத முடியும். தமிழ் அரசியல்வாதிகளாலும் கனவான் அரசியல் செய்பவர்களாலும் என்றுமே இத்தகைய அரசியலை எழுத முடியாது.

 

‘எமது பிள்ளைகளை நினைத்து அழக்கூட முடியாத தேசத்தில்  எப்படி ஐக்கியமாக வாழ முடியும்?’  என்ற கேள்வியை அனைத்துலகத்தை நோக்கி கேட்கும் தைரியமும் ;உரிமையும் மக்கள் தொகுதிக்கே உண்டு.

 

ஒரு நாட்டிற்குள் வாழும் இரு வேறு இனங்களில் ஒரு இனம் ஒரு நாளை தேசிய துக்க நாளாக நினைவு கூரும்போது அதே நாளை அடுத்த இனம் அவர்களை வெற்றி கொண்ட நாளாக கொண்டாடும் போதே அடிப்படையில் அந்த நாடு இரண்டாக உடைந்து விடுகிறது. இதை வேறு எந்த தர்க்கங்களினூடாகவும் சமரசங்களினூடாகவும் இராஜதந்திர நகர்வு என்ற போர்வையிலெல்லாம் ஒட்ட முயற்சிப்பது அபத்தம்.

 

எனவே உங்கள் பிள்ளைகளை நினைந்து ஒன்று கூடி தீபமேற்றி அழுங்கள்.

 

அதுதான் எமது விடுதலைக்கான அடிப்படை.. அனைத்துலக – பிராந்திய – உள்ளுர் சதிகளை உடைத்து எமது நீதியை வென்றெடுக்கும்  ஆயுதம் உங்கள் பிள்ளைகளான மாவீரர்களை நினைந்து நீங்கள் சிந்தப்போகும் கண்ணீர்தான்.. உங்கள் பிள்ளைகளை ‘போர்க்குற்றவாளிகள’ ‘ பயங்கரவாதிகள்’  என்று கூறியே உங்களுக்கான நீதியை குழிதோண்டிப்புதைக்கும் அனைவருக்கும் உங்கள் கண்ணீர் பதிலளிக்கட்டும்.

 

உங்கள் கண்ணீர் எதிரிகளையும் துரோகிகளையும் அடித்து செல்லும் பேராறாக பெருக்கெடுத்து ஓடட்டும்.

 

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” : தியாகி திலீபன்.

 

ஈழம்ஈநியூஸ்.

 

( இந்த பத்திக்காக பெண்ணிய உளவியலாளரும் ஆய்வாளருமான பரணிகிருஸ்ணரஜனி அவர்களின் ஆய்வுகளிலிருந்து சில கருத்தாக்கங்களை அவரது அனுமதியுடன் பயன்படுத்தியிருக்கிறோம்.)