hero-canமாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் கொண்டாடப்படுகிறது. எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சி நாட்களானது நவம்பர் 25 இல் தொடங்கி நவம்பர் 27 இல் முடிவடைகின்றது. இம்மாவீரர் நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் நாளுக்கு முன்னதாகவே தமிழீழமெங்கும் புனிதப்பட்டு விடுகிறது.

மாவீரர் தூபிகள் நிழற்படங்கள் அமைந்த இடங்கள் இல்லங்கள் ஒழுங்கைகள் வீதிகள், கல்விக்கூடங்கள் பொது இடங்கள் காரியாலயங்கள் அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவம் ஒருமித்தும் புனிதமாக்கி விடுகின்றனர் இவையாவும் மாவீரர் நினைவாக அலங்கரிக்கப்பட்டு தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் விளங்கும்.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும்இ நடைமுறை ஒழுங்குகளும்

1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட விருக்கின்றன.

தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்.

மாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27

ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் எழுச்சி நாட்கள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு பொலிவுடன் விளங்கும். அனைத்துத் தமிழீழ மக்களும் அலங்கரிப்பு நிகழ்ச்சியிலும் வீரவணக்க நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்கள். வேறு களியாட்டங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறமாட்டாது. தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்துவிடும். மதுச்சாலைகள் மூடப்பட்டு மது பாவிப்பதை நிறுத்திவிடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் பிரிவு பிரிவாக அமைப்புக்கள் ரீதியாக ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.

தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27

தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும்இ அருஞ்செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் அவலப்படக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில் எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
heros
தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நிறைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக்கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த எமது இயக்க வீரர் லெப்ரினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.

1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் எதிரியின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடாத்திக்கொண்டு தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவுகூர்ந்து வருகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு நடுகற்கள் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.

சக்தியின் முகநூலில் இருந்து.