ஒரு நாட்டில் ஒடுக்கப்படும் மக்களுக்கான தீர்வாக அந்த நாட்டில் இருந்து அவர்களின் நிலப்பகுதியை பிரித்து தனியான தேசம் ஒன்றை அமைத்து கொடுப்பது என்பது இயலாத காரியம் ஒன்றாகவே தன்னைத்தானே மிகப்பெரும் ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் இந்தியா என்ற தேசம் தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றது. அதற்கு வலுச்சேர்க்கும் பொருட்டு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் சிறீலங்கா என்ற ஒரு தேசத்திற்குள் தான் தீர்வைத்தேடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றைச் சொல்லில் தமிழ் மக்களின் பல தசாப்த்தப் போராட்டத்தின் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் அனைத்தும் புதைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு நாட்டில் இருந்து பல தேசங்கள் உருவாகிய வரலாறுகளை நாம் அறிவோம் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அதற்கு சிறந்த உதாரணம் யூகோலாஸ்வாக்கியா. அது மட்டுமல்லாது ஒரு இனம் பரந்துவாழும் பல நாடுகளில் இருந்து அந்த நிலப்பரப்புக்களை பிரித்து ஒரு புதிய தேசத்தை உருவாக்கலாமா என்ற விவாதங்களும், அதற்கான முயற்சிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதாவது ஈராக்கில் வாழும் குருதிஷ் இன மக்களுக்கு அவர்களின் பாதுகாப்புக்கு ஆதராவாக ஆயுத வினியோத்தையும், வான் தாக்குதல்களையும் மேற்குலகம் மேற்கொண்டு வருகின்றது. ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்புக்கு எதிரான இந்த தாக்குதலை மேற்குலகம் மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருவது ஒருபுறம் இருக்க, குருதிஷ் இன மக்கள் தமது தேசத்தை உருவாக்குவதற்கான செயற்பாட்டையும் ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் ஈராக், சிரியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் வாழும் 20 மில்லியன் மக்களுக்கான தேசத்தை உருவாக்கவேண்டும் எனில் இந்த நான்கு நாடுகளும் பிரிக்கப்படவேண்டும். உலக வரலாற்றில் மிகவும் அபூர்வமான பிரிவினை இது, ஆனால் இயலாதது என்றில்லை.

குருதிஷ் இன மக்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் எண்ணை மற்றும் எரிவாயு வளம் அதிகம் என்பதுடன், ஈரான் மற்றும் ரஸ்யாவின் எண்ணை விலையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் மலிவானது. அது மட்டுமல்லாது இந்த நான்கு தேசங்களுக்கும் இடையில் ஒரு புதிய தேசத்தை உருவாக்கினால் அது மேற்குலகத்தின் ஆளுமைக்கு மிகவும் பயனுள்ளது. எனவே தான் தற்போது குருதிஷ் இனமக்கள் மீது ஒரு குண்டு வீழ்ந்தாலும் அமெரிக்கா கதறிக் கதறி அழுகின்றது.
kurds2
குருதிஷ் படையினருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு தனது நாட்டுடன் இணைந்து செயற்பட எழு ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் சூக் காஜெல் தெரிவித்துள்ளார்.

தனது பிராந்திய நலன்களுக்காக கிழக்கு உக்ரேனில் போரிடும் ஆயுதக்குழுக்களுக்கான ஆயுதவினியோகங்களை ரஸ்யா மேற்கொள்கின்றது. ஈராக்கின் நான்காவது பெரிய எண்ணை வயல்களை தனது கைகளில் தக்கவைக்க குருதிஷ் படையினருக்கு ஆயுதங்களை வழங்குகின்றது அமெரிக்கா. ஆனால் ஈராக்கின் எண்ணைவளத்தில் அரைப்பங்கினை குருதிஷ் மக்கள் வாழும் பகுதி கொண்டுள்ளதனால் அதனை இழப்பதற்கு ஈராக் விரும்பவில்லை.

எனினும் பொருளாதார மற்றும் பிராந்திய ஆதிக்கமே ஒரு நாட்டினதும், பல இனங்களினதும் தலைவிதியை தீர்மானிக்கின்றன. அதில் ஈராக்கின் விருப்பம் என்பது இரண்டாம் பட்சமே.

எனவே இந்தியாவோ அல்லது தமிழத்தேசியக்கூட்டமைப்போ கூறுவதைப்போலவோ ஒருங்கிணைந்த சிறீலங்காவிற்குள் தான் நாம் தீர்வைக்காணமுடியும் என்பது எல்லாம், தமிழனை தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கும் தந்திரமே தவிர அதில் வேறுஎதுவுமில்லை.

தற்போதைய உலக நடப்பின் பூகோள மற்றும் பொருளாதார நிலமைகளை கருத்தில்கொண்டு நாம் நகர்வைமேற்கொண்டால் அதனை முறியடிப்பது என்பது இந்தியாவுக்கும் மேற்குலகத்திற்கும் கடினமானதாகும்.

ஓருங்கிணைந்த குருதிஷ் இனத்தைப்போல தமிழ் இனமும் ஒருங்கிணைக்கப்படவேண்டும், இதில் முக்கியமானது தமிழகம், ஆனால் அதனை முறியடிப்பதில் தான் சிறீலங்காவும், இந்திய புலனாய்வு அமைப்புக்களும் தீவிரகவனம் செலுத்தும் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். சிறீலங்கா அரசு தனது முழுவளத்தையும் இதற்கு பயன்படுத்தும், அதன் வெளிப்பாடே அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் இனம் தன் மீது பிரயோகிக்கப்படும் இன ஒடுக்குமுறையை சர்வேதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பது இரண்டாவது படிமுறை. அதற்கான வாசல்கதவை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது திறந்துள்ளது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

குருதிஷ் இன மக்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தம் தாக்குதல்களை ஒரு இனஅழிப்பு என அமெரிக்க அதிபர் ஒன்றுக்கு பல தடைவ கூறிவருகின்றார். ஆனால் சிறீலங்காவில் இடம்பெற்றதை ஒரு இனஅழிப்பு என தெரிவிப்பதற்கு அவர்கள் தயங்குகின்றனர். அதனை ஒரு படுகொலை, மனித உரிமை மீறல் என்ற பதத்திற்குள் அடக்கிவிட அவர்கள் முயல்கின்றனர்.

Tamil-SLA
சிறீலங்காவில் இடம்பெற்றது ஒரு இனஅழிப்பா என்பதை நாம் தற்போது முடிவுசெய்யமுடியாது என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களும் கடந்த வருடம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அவரும் தனது வரைமுறைக்குட்பட்ட அதிகாரங்களையே பயன்படுத்தமுடியும், மேற்குலகத்தையும், இந்தியாவையும் நேரிடையாக எதிர்ப்பதற்கு அச்சமடைந்திருக்கலாம்.

எனினும் அது ஒரு இனஅழிப்பு தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை அவர் எமக்கு வழங்கியுள்ளார். அதற்காக நாம் அவரை போற்றவேண்டும். அது தான் ஐ.நா மனித உரிமகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழு, அதற்கான சாட்சியங்களை இயன்றவரை முழுiமாக வழங்குவதற்கு அனைத்து தமிழ் மக்களும் உழைக்கவேண்டும்.

தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்களும், அமைப்புக்களும், மாணவர் அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் இதனையே முதன்மைச் செயற்பாடாகக் கருதி செயற்படவேண்டும். கட்சிபேதங்களை மறந்து தமிழ் இனம் என்ற செயற்பாடே இங்கு முக்கியமானது.

நாம் வழங்கும் சாட்சியங்களின் அளவுகளையும், அதில் அடங்கியிருக்கும் கருத்துக்களையும் கொண்டு தமிழ் இனம் ஒரு இனஅழிப்புக்குள் சிக்கியுள்ளது என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது அங்கு இடம்பெற்றது ஒரு இனஅழிப்பே என அவர்கள் அறிவிக்கவேண்டும். அது தான் நாம் முள்ளிவாய்க்காலில் செலுத்திய விலைக்கு கிடைக்கும் முதலாவது வெற்றியாகும். எனவே இருக்கும் சொற்பகாலத்தை விரையமாக்கும் வேறு பணிகளை விடுத்து சிறீலங்கா அரசின் இனஅழிப்பினால் பாதிக்கப்பட்டு உலகம் எங்கும் சிதறிப்போயுள்ள சாட்சியங்களை ஒருங்கிணையுங்கள், நவநீதம்பிள்ளை அவர்கள் எமக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.

ஓவ்வொரு தமிழ் மக்களும் தமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ இனஅழிப்பினால் பதிப்படைந்திருந்தால் அவர்களுடன் பேசி, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி ஐ.நாவிடம் சாட்சியமளிக்கவையுங்கள். இது தான் தற்போது எம்முன்உள்ள முதலாவது பணியாகும். உங்கள் சக்திகளை வீணடிக்காது செயற்திறனாக மாற்றுங்கள். யூக்கோஸ்லாவாக்கியாவின் முன்னாள் அதிபர் காலம்சென்ற ஸ்லோபொடன் மிலோசொவிக்கின் தலைவிதியைப் போல மகிந்தாவின் தலைவிதியை எழுதுங்கள்;, சிதறுண்ட யூக்கோஸ்லாவாக்கியவைப்போல சிறீலங்காவை மாற்றுங்கள்.

ஈழம்ஈநியூஸ்இற்காக:
வேல்ஸ் இல் இருந்து அருஷ்