மீண்டும் ஒரு போர் ! – சரவணன் கன்னியாரி

0
631

china-cartoon4இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மார்ச் மாதமும் சிலர் “பரிவட்டம்” கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனர். இப்படி புறப்பட்டு வருபவர்கள் ஒன்றை கவனிக்க மறந்து விடுகின்றனர், ஈழப்போரின் போது தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக நிலையும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது தான். காங்கிரசோடு சேர்ந்து நின்று ஈழத்தில் இனவழிப்பை நடத்திய திமுக-வின் நிலையோடு இந்த “பரிவட்டக்காரர்கள்” சேர்ந்து நிற்கிறார்கள்.

முத்து மாலை (“String of Pearls”) ( http://en.wikipedia.org/wiki/String_of_Pearls_(China) ) இந்திய பெருங்கடலை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக சீனா வைத்திருக்கும் திட்டம். இந்த முத்து மாலையில் ஒரு முத்து தான் “இலங்கை”. இலங்கையை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா பல்வேறு வகையான உதவிகளை போருக்கு முன்னும் பின்னும் இலங்கைக்கு செய்து வருகிறது குறிப்பாக ராஜபக்சே ஆட்சியில். இந்த முத்து மாலை திட்டம் என்பது சீனாவிற்கு முன்னதாக அமெரிக்காவின் திட்டமிடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கே பிரமராக இருந்த போது அமெரிக்காவுடனாக நெருங்கிய நட்பை கொண்டிருந்தது இலங்கை அரசு (https://www.colombotelegraph.com/index.php/wikileaks-keep-the-pressure-on-ranil-wickremesinghe/) விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு அடித்தளம் இட்டு மேற்குலக நாடுகளின் ஆதரவை குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவை பெற்றதில் ரணில் விக்கிரமசிங்கேவின் பங்கு முக்கியமானது.

அமெரிக்கா ஏன் இலங்கை அரசிற்கு குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தனது ஆதரவை தரவேண்டும். விடை, இந்திய பெருங்கடல். 1980 களில் இந்தியாவின் இந்திரா காந்தி அரசு புலிகளுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் தந்ததின் பின்னணியும் இந்திய பெருங்கடல் தான். திரிகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு தாரை வார்க்க எடுக்கப்பட்ட முடிவு. (http://smallwarsjournal.com/jrnl/art/us-naval-basing-in-sri-lanka) அதனை புலிகளை கொண்டு தடுக்கவே இந்திரா காந்தி அரசு புலிகளுகளுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் அளித்தது. புலிகளின் வளர்ச்சிக்குப் பின்னர் திரிகோணமலை துறைமுகக் கனவு இலங்கை அரசிற்கும் அமெரிக்காவிற்கு கனவாக முடிந்தது. அந்த வகையில் புலிகளின் அல்லது தமிழர்களின் இருப்பு இந்திய பெருங்கடலை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருபவர்களுக்கு எப்போதும் இடைஞ்சல் தான். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி சீனாவாக இருந்தாலும் சரி.

ஆக உலகின் இருபெரும் சக்திகளுக்கு இடையே சிக்கியது ஈழத்தின் தமிழினம். 2005-ல் அமெரிக்க ஆதரவு ரணில் விக்கிரமசிங்கேவை தோற்கடித்து மகிந்த ராஜபக்சே இலங்கையில் ஆட்சிக்கு வருகிறார். ஆனால் ராஜபக்சே அரசின் கீழ் இலங்கை சீனாவிடம் அதிக நெருக்கம் கொள்கிறது. (http://en.wikipedia.org/wiki/China%E2%80%93Sri_Lanka_relations) ) அதே சமயம் மேற்குலக நாடுகளின் ஆதரவையும் தக்கவைத்துக்கொள்கிறது. சீனாவின் அறிவிக்கப்படாத பொருளாதார மண்டலமாக இலங்கை ஆகிறது. இலங்கையில் தெற்கில் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமான ஹம்பாந்தோட்டாவில் மிகப் பெரிய அளவில் ஒரு துறைமுக நிர்மானிக்கப்படுகிறது, இது சீனாவின் கடற்படைத் தளமாகவும் மாற்றக்கூடியது. ஆக சீனாவின் முத்து மாலைத்திட்டத்தில் முக்கியமான முத்து கோர்க்கப்பட்டுவிடுகிறது. இந்திய பெருங்கடலை ஆட்சி செய்ய முக்கியமான செயல்திட்டத்தின் ஒரு பகுதி நிறைவுகிறது. இது பிராந்திய வல்லரசாக இருக்கக்கூடிய‌ இந்தியாவிற்கு பெருத்த பின்னடைவாக அமைகிறது.

இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது முக்கியமானது. இலங்கையை சமாளிப்பது ஓரளவு எளிது. ஆனால் விடுதலைப்புலிகள் வளர்ந்து தமிழருக்கான ஒரு நிலையான ஆட்சி வரப்பெற்றால் இந்தியா, சீனா, அமெரிக்காவின் இந்தியப் பெருங்கடல் கனவுக்கு பெரும் இடையூறாக அமையும். மாபெரும் செயல் திட்டத்தில் முதல் படியாக விடுதலைப்புலிகளை அழிக்க முதல் நகர்வு எடுக்கப்படுகிறது. அமெரிக்காவின் “கைப்பாவையான” ஐநா வேடிக்கைப் பார்க்க லட்சக் கணக்கான தமிழர்களும் போரில் கொன்றழிக்கப்படுகின்றனர். சிரியாவில் ஆயிரத்து இருநூறு பேர் இறந்ததற்கு ஓடி வந்து சிரிய அரசை மிரட்டிய ஐநா, லட்சக்கணக்கான தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட போது வேடிக்கைப்பார்த்தது. பின்னணி அமெரிக்கா என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழர்களின் அழிவு அமெரிக்காவிற்கு தேவையான ஒன்று.

போர் முடிவுக்கு வருகிறது, ஒரு இன அழிப்பு நடந்து முடிகிறது. போருக்கு பின் ராஜபக்சே பெரும் செல்வாக்குடன் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார். சீனாவுடனான நெருக்கம் இன்னும் அதிகரிக்கிறது. சமயத்தில் இந்தியாவிற்கே அது இடைஞ்சலாக இருக்கிறது. இந்திய முதலீட்டாளர்களை விட சீன முதலீட்டாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. (http://www.doc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=68&Itemid=83&lang=en) இந்திய பொருட்களை விட சீன பொருட்களுக்கு அதிக வரி குறைப்பு செய்யப்படுகிறது. இது இந்திய பெருமுதலாளிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

China-anti-missile-test-pix360
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டுமென்றால் ராஜபக்சே அரசு நீக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழர்களும் மீண்டெழ கூடாது. அமெரிக்கா தனது செயல் திட்டத்தை ஆரம்பிக்கிறது. இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டால், அது தமிழர்களின் தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவாக முடியும். தனி நாடாக ஈழம் அமைந்தால் அது அமெரிக்காவிற்கே தலைவலியாக முடியும். அதனால் “போர்குற்றம்” என்ற வார்த்தையை பயன்ப்டுத்துகிறார்கள். போர்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதனை செய்த ராணுவ வீரர்களும், அவர்கள் அதிகாரிகளும், அரசை தலைமை வகித்த ராஜபக்சே மட்டுமே “தண்டிக்கப்படுவார்கள்”. இது வெறும் “தண்டனையோடு” முடிந்து விடுமே தவிர, தமிழர்களுக்கு எந்த பலனும் தராது. ராஜபக்சே என்ற நபர் ஆட்சியில் இருந்து நீக்கப்படுவார். அவ்வளவே அதை தாண்டிய ஒன்றும் நடக்காது. இது தான் அமெரிக்காவிற்கும் அதனை ஆதரிக்கும் இந்தியாவிற்கும் வேண்டியது. ராஜபக்சே தீர்மானத்தை எதிர்ப்பதும் தன்னையும் தனது ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளவே.

ஆக “அமெரிக்க தீர்மானம்” என்பது மிகப்பெரும் சூழ்ச்சி. தமிழர்களை “மீண்டும்” முட்டாள் ஆக்க இந்தியா மற்றும் அமெரிக்க செய்யும் சதி. நமக்கு தேவை இலங்கையில் ஆட்சி மாற்றம் அல்ல. தேவை தமிழர்களுக்கான “தனி நாடு” அதற்கான எந்த ஒரு முயற்சியும் இதுவரை யாராலும் எடுக்கப்பட வில்லை. இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது அதன் முதலீட்டாளர்களுக்காக. சீனா அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பது தனது முதலீடுகளை காப்பாற்ற. சரி அமெரிக்கா இல்லாவிட்டால் வேறு யார் என்ற கேள்வி வரலாம்? இலங்கையில் பொருளாதார நலன் இல்லாத ஒரு நாட்டின் மூலம் இனப்படுகொலைக்கான தீர்வு வேண்டி ஐநாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இதனை முன்னெடுக்க வேண்டிய பல்வேறு நாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களே. இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தை எப்போதும் கொண்டு வராது, ஏனென்றால் இந்திய முதலாளிகள் அதற்கு அனுமதியளிக்க மாட்டார்கள். அமெரிக்காவும் ஆதரவு அளிக்காது. இனப்படுகொலைக்கான தீர்வு மற்றும் பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கைகளை கொண்ட தீர்மானம் தான் வேண்டும், அதனில் குறைந்த எதுவும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வு தராது என்பதில் இந்திய தமிழர்களும் தீர்மானமாக இருக்க வேண்டும். இதனை குலைக்க பல்வேறு சக்திகள் முயலும் அந்த சதியில் சிக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது.

“50 நிறுவனங்களால் ஆளாப்படும் 50 மாநிலங்கள்” என்பது அமெரிக்கவின் மினசோட்டா மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் ஜெஸ்ஸி வென்சுராவின் கருத்து. நிறுவனங்கள் எப்போதும் லாபத்தை நோக்கியே இயங்குபவை. அமெரிக்கவின் “லாப” தீர்மானத்தை ஆதரித்து “லாபத்தில்” பங்கு பெற்று/பெற இருக்கும் “தமிழர்களும்” “தமிழர் அமைப்புகளும்” அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் முன் யோசிக்க வேண்டும், நீங்கள் செய்வது எவ்வளவு பெரிய துரோகம் என்று !

தமிழினம் மீண்டும் ஒரு “போரில்” சிக்கி இருக்கிறது. மறவாதீர்கள் !!