இலங்கை இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயது மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிபோல தாக்கி உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அராஜகமும், வலையறுப்பு நிகழ்வுகளும், துப்பாக்கிச்சூடுகளும் தொடர்கதையாகி வருகின்ற இச்சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.

 

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து அடிப்பது, உதைப்பது, நிர்வாணப்படுத்துவது, கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீன்களைக் கடலிலே வீசியெறிவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைச் சேதப்படுத்துவது, சிறைப்பிடிப்பது எனச் சிங்கள இராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல.

 

 

அன்றாட நிகழ்வுகளாகிப் போன இத்துயரத் துன்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ சிங்கள இராணுவத்தின் வன்முறை வெறியாட்டங்களைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்து, இந்தியப் பெருநாட்டில் வரி செலுத்தி,வாக்கு செலுத்தி வாழ்கிற 8 கோடித் தமிழர்களின் உணர்வுகளையும் அவமதித்து வருகிறது.