இந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனாவின் முக்கிய அதிகாரிகளை அண்மையில் கொழும்பில் சந்தித்திருந்தனர்.

 

சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர் அணிக்குச் செல்லவேண்டிய காலம் நெருங்கிவரும் இந்த தருணத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

 

அதன் காரணம் என்ன?

 

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக மேம்பாடு, அனைத்துலக ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் படைத்துறை விரிவாக்கம் பசுபிக்பிராந்தியத்தில் ஏற்படுத்தியிருந்த பதற்ற நிலைமையும், அதிகாரப்போட்டியும் தற்போது இந்துசமுத்திரப் பிராந்தியத்திற்குள் நுளைந்துள்ளது.

 

 

யாழ்குடாநாட்டின் தீவகப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிப்போன தனது கப்பலைத் தேடுகின்றது சீனாவின் ஆய்வுக் குழு ஒன்று, மறுவளத்தில் திருகோணமலைத்துறைமுகத்தில் சிங்களக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் அமெரிக்கப்படையினர் தனது ஆழ்கடல் சுற்றுக்கால் கப்பலையும் சிறீலங்கா அரசுக்கு வளங்கியுள்ளனர்.

 
தமிழ் மக்களுக்கு உதவுவதாகவும், சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரப்போவதாகவும் தமிழ் மக்களை நம்பவைத்துவரும் மேற்குலகம் மனித உரிமைகள் மீறலிலும், கொடுமையான போர்க்குற்றங்களிலும் ஈடுபட்ட சிறீலங்கா படையினரை மேற்குலகத்திற்கு அனுசரணையாளராக இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கான பணியில் ஈடுபடுத்தப்படுத்தியுள்ளது.

 

 

அதேசமயம் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு அமைத்துக்கொடுக்கும் பணியை இந்திய அரசு எடுத்தபோது அதனை மிகவும் குறைந்தவிலையில் செய்து முடிக்க சீனா முன்வந்திருந்தது.

 

 

அதாவது இந்துசமுத்திர பூகோள அரசியல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, இதனை சிறீலங்கா அரசு எவ்வாறு கையாளபபோகின்றது அதேசமயம் தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் தான் ஈழத் தமிழ் மக்களினதும், தமிழக மக்களினதும் தப்பிப்பிழைக்கும் தகமை தங்கியுள்ளது.

 

 

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் சீனா தனது போட்டியில் இருந்து இறுதிவரை பின்வாங்கப்போவதில்லை ஆனால் அதனால் நாம் பல அனுகூலங்களை பெறமுடியும்.

 

 

இந்த பூகோள அதிகாரப்போட்டியின் முக்கியத்துவத்தை அறியவேண்டும் என்றால் நாம் சீனாவின் அண்மைக்கால வளர்ச்சியை உலக வல்லரசான அமெரிக்காவுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வது பொருத்தமானது.

 

 

சீனாவின் கடற்படை தோற்றம் பெற்று கடந்த ஏப்பிரல் மாதத்துடன் 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதேசமயம் தனது முதலாவது விமானம்தாங்கி கப்பலை சீனா தற்போது பாவனைக்கு கொண்டுவந்துள்ளது.

 

 

சீனாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, இந்தியா யப்பான் ஆகிய நாடுகள் மிகவும் அச்சத்துடன் பார்க்கின்றன. தனது கடற்படை கப்பல்கள் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்களை விரைவாக அதிகரித்துவரும் சீனாவானது மிக விரைவாக அமெரிக்காவின் படைவலுச் சமநிலையை முறியடித்துவிடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

 
இந்த படை வலுச்சமநிலை மாற்றமானது தாய்வான் மற்றும் தென் சீனக் கடற்பகுதிகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பசுபிக் கடற்பிராந்தியத்தில் தனது தனித்தன்மையான ஆளுமையை அனுபவித்துவரும் அமெரிக்க கடற்படை தற்போது மிகப்பெரும் செலவு நிறைந்த ஒரு போரை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

 

அதாவது அமெரிக்க கடற்படையின் தாக்குதல் பலத்தை நேரடி மோதல் மூலம் முறியடிக்கவேண்டிய தேவையை சீனா மேற்கொள்ளவில்லை, அவர்களின் போரிடும் வலுவை தனது நவீன ரடார்கள், செய்மதிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சீனா முறியடித்துள்ளது. சீனா அடைந்துள்ள இந்த இடத்தை முறியடிப்பதற்கு அமெரிக்கா அதிகளவான செலவீனங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

 

தனது இந்த பலத்தை ஆழ்கடல் வரையிலும் சீனா பரவலாக்கியுள்ளது. தென் சீனக் கடற்பகுதியில் மோதல் ஒன்று ஏற்படுமானால் அமெரிக்காவின் வலுவை முறியடித்து அந்த பகுதியை தக்கவைக்கும் நிலையை தற்போது சீனாவின் கடற்படை அடைந்துள்ளதாக அமெரிக்காவின் இந்திய-பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதில அட்மிரல் பிலிப் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவுக்கு இணையாக ஆயுதங்களை தயாரித்தோ அல்லது அவர்களிடம் உள்ளது போன்ற ஆயுதங்களை கொண்டடோ சீனா இந்த நிலையை எட்டவில்லை மாறாக ஒரு சமச்சீரற்ற களநிலமையை சீனா தனது நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் உருவாக்கியுள்ளதாகவும், எனவே போர் ஒன்று ஏற்பட்டால் சீனாவை அமெரிக்கா வெல்லும் சாத்தியங்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Digital Globe, via Getty Images Fiery Cross Reef in the South China Sea. The deployment of missiles on three man-made reefs in the disputed Spratly Islands).

 
உலகின் மிகப்பெரும் கடற்படையாக சீனாவின் கடற்படை கடந்த வருடமே தோற்றம் பெற்றுள்ளது. அமெரிக்காவை விட அதிக போர்க்கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் அது கொண்டுள்ளது. ஆனாலும் மேலும் பல தாக்குதல் கப்பல்களை சீனா மிக வேகமாக தயாரித்து வருகின்றது. அமெரிக்க கடற்படை கப்பல்கள் தமது தரத்தில் மேலோங்கியிருந்தலும் அதன் அளவானது குறுகிப்போயுள்ளது.

 
தற்போதைய நிலையில் கடற்படையின் விரிவாக்கம் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை என சீனா அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஏப்பிரல் மாதம் தெரிவித்திருந்தார். தென் சீனா பகுதியில் உள்ள தீவான ஹணாய் தீவில் இடம்பெற்ற கடற்படையின் ஒத்திகை நடவடிக்கையின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இந்த ஒத்திகை நடவடிக்கையில் 48 போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கு பற்றியிருந்தன.

 

 

எனினும் 1949 ஆம் ஆண்டு சீனா குடியரசு உருவாகியதில் இருந்து நோக்கும் போது சீனா கடற்படையின் வலு தற்போதே மிகவும் விரிவாக்கம் பெற்றுள்ளதாக சீனா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 
சீனாவுடனான பொருளாதாரப் போரை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றபோதும் சீனாவின் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் யப்பான், தாய்வான் மற்றும் சோல்ஸ் தீவுப்பகுதிகள் ஆகியவற்றின் கடற்பிராந்தியங்களுக்கு தமது பிரசன்னங்களை விரிவுபடுத்திவருகின்றன.

 
வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி தென் சீனக்கடற் பகுதியில் உள்ள பவளப் பாறை தீவுகளுக்கும் தனது கடல் ஆளுமையை சீனா விரிவுபடுத்தியுள்ளது. கடந்த மே மாதம் இந்த தீவுக் பகுதிக்கு அண்மையாக அமெரிக்க கடற்படையின் ஹிகின்ஸ் நாசகாhரி கப்பலும், அன்ரீரம் என்ற தாக்குதல் கப்பலும் சென்ற போது தனது போர்க்கப்பல்களை சீனா அங்கு அனுப்பிதுடன், அமெரிக்காவின் செயலானது போரைத் தூண்டும் செயல் எனவும் தெரிவித்திருந்தது.

 
அவுஸ்திரேலியா கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கடந்த ஏப்பிரல் மாதம் அந்த பகுதிக்கு சென்றபோதும் சீனா அதனையே மீண்டும் செய்தது. தென்சீனக் கடற்பகுதியில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவுப்பகுதியில் இராணுவமயமாக்கலை மேற்கொள்ளப்போவதில்லை என முன்னாள் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை சந்தித்த போது சீனா அதிபர் மூன்று வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

 
ஆனால் தற்போது அங்கு ஏவுகணைகளை நிறுவியுள்ள சீனா இராணுவம் சீன கடற்பகுதியில் அமெரிக்கா கடற்படையின் ஊடுருவலை முறியடிக்க அது அவசியமானது என தெரிவித்துள்ளது. தனது கடற்பகுதியில் ஒரு அங்குலத்தையும் சீனா விட்டுக்கொடுக்காது என சீனா அதிபர் அமெரிக்காவின் பாதுகாப்புது துறைச் செயலாளர் ஜிம் மாட்டிஸ் இடம் கடந்த ஜூன் மாதம் சீனாவின் தலைநகர் பிஜிங் இல் வைத்து தெரிவித்திருந்தார்.

 
சீன கடற்படையானது தனது விரிவாக்கத்தை 2000 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோதும், 2013 ஆம் ஆண்டு புதிய அதிபர் பதவியேற்ற பின்னர் அதன் விரிவாக்கம் அதிகரித்துள்ளது. கடற்படை, வான்படை மற்றும் ஏவுகணை பிரிவுகளிலேயே சீனா அரசு தற்போது தனது கவனத்தை குவித்து வருகின்றது. தரைப்படையின் விரிவாக்கத்தில் அது அதிக அக்கறை செலுத்தவில்லை.

 
மக்கள் விடுதலை இராணுவத்தில் இருந்து ஏறத்தாள 300,000 படையினரை 2015 ஆம் ஆண்டில் இருந்து சீனா அரசு குறைத்துள்ளது. தற்போது சீன இராணுவத்தின் அளவு 2 மில்லியனாக உள்ளது, அமெரிக்க படையினரின் தொகை 1.4 மில்லியனாகும்.

 
அமெரிக்க படையினரின் ஒவ்வொரு பிரிவுடனும் ஒப்பிடும்போது சீனா படை பிரிவுகள் சுடுவலுவிலும், அனுபவத்திலும் பின்னதங்கியுள்ளபோதும் சீனாவானது களமுனையை ஒரு சமச்சீரற்ற தளத்திற்கு நகர்த்தியுள்ளது. இது அமெரிக்க படையின் நகர்விற்கு பெரும் தடங்கலாகவே உள்ளது.

 
பிராந்தியத்திற்குள் பிரவேசிப்பதை தடுத்தல் என்பது அமெரிக்காவின் உத்தியாக உள்ளபோதும், அதனை முறியடித்தல் என்பது சீனாவின் உத்தியாக உள்ளது.
சீனா தனது உத்திக்கு அமைவாகவே நகர்ந்து செல்லும் விமானம்தாங்கி கப்பல்களை தாக்கியழிக்கும் அதி சக்திவாய்ந்த ஏவுகணைகளை (DF-21D) உருவாக்கியிருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு இந்த ஏவுகணைகளின் புதிய வடிவத்தை (DF-26) அது உருவாக்கி தனது படையில் இணைத்துள்ளது. அதாவது அமெரிக்க கடற்படையின் விமானம்தாங்கி கப்பல்கள் சீனாவின் எல்லையை அடையும் முன்னரே அவற்றை அழிக்கும் திட்டமிது.

 
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற படைத்துறை அணிவகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணையானது, சீனாவின் போஹாய் பகுதியில் கடந்த வருடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது குவாம் பகுதியில் உள்ள அமெரிக்க படைத்தளங்களுக்கும் அப்பால் சென்று தாக்கும் சக்தி வாய்ந்தது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமாக பென்ரகன் இந்த மாதம் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
இந்த ஏவுகணைகளை கண்டறிவதோ அல்லது இடைமறித்து தாக்குவதோ இயலாத காரியம் எனவும், இந்த ஏவுகணைகள் சீனாவின் ராடார் வலையமைப்புக்கள் மற்றும் செய்மதிகளால் வழிநடத்தப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

 
கடந்த ஏப்பிரல் மாதம் இந்த ஏவுகணைகள் தமது படையினரின் பாவனையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள சீனா அரசு அதன் படைப்பிவை ஹெனன் மாகாணத்தில் நிறுத்தியுள்ளது. 22 ஏவுகணைகளே படத்தில் காண்பிக்கப்பட்டபோதும், அதன் உண்மையான எண்ணிக்கை தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதுடன் சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைப் பிரிவை தாக்கி அழிப்பதும் சுலபமானது அல்ல.

 
இவ்வாறானதொரு சவாலை அமெரிக்க கடற்படை இதற்கு முன்னர் சந்தித்தது இல்லை என அமெரிக்க ஆய்வு மையத்தின் மே மாத அறிக்கை தெரிவித்துள்ளது.
விமானம்தாங்கி கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளானது (carrier killers) தென்சீனக் கடலில் நிறுவப்பட்டுள்ள கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளுக்கு (YJ-12B anti-ship cruise missile) மேலும் வலுச்சேர்த்துள்ளது. இந்த ஏவுகணைகள் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் வரையிலுமான தூரவீச்சுக் கொண்டது.

 
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான போரை நாம் நினைத்துப்பார்க்க முடியாதபோதும், 2013 ஆம் ஆண்டில் இருந்து கடற்பகுதியில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு சீனா தயாராகி வருவதாகவே படைத்துறை வியூகங்களுக்கான விஞ்ஞான சஞ்சிகை (The Science of Military Strategy) தெரிவித்துள்ளது.

 

 

பராசல் மற்றும் ஸ்பிராட்லி தீவுகளில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதானது அமெரிக்க படையினரின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வரும் என ஆர்ஏஎன்டி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் லைலி மொறிஸ் தெரிவித்துள்ளார். இதற்கான மாற்று வழியை கண்டறிவதே அமெரிக்காவின் மிகச் சிறந்த உத்தியாகும், கப்பல்களை ஏவுகணைகளின் தூரவீச்சில் இருந்து விலக்கி வைத்திருத்தலும் ஒரு மாற்றுவழி தான் ஆனால் ஆசிய கண்டத்தில் இது சாத்தியமற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
கடந்த ஏப்பிரல் மாதம் சீனா தனது கடலில் இறக்கியுள்ள இராண்டாவது விமானம்தாங்கி கப்பலானது சீனாவிலேயே கட்டப்பட்டது. அமெரிக்காவானது அணுசக்தியில் இயங்கும் 11 விமானம்தாங்கி கப்பல்களை கொண்டுள்ளது.
எனினும் தனது மூன்றாவது விமானம்தாங்கி கப்பலை சீனாவானது சங்காய் துறைமுகத்திற்கு அண்மையில் தயாரித்து வருகின்றது.

 

 

ஐந்து அல்லது ஆறு கப்பல்களை தயாரிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

 
வழமையாக தரைவழியான தாக்குதலை முறியடிப்பதில் தான் சீனா கவனம் செலுத்திவருவதுண்டு ஆனால் அது தற்போது ஆழ்கடல் நடடிக்கையிலும், விரிவாக்கம் பெற்றுவரும் தனது பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.

 

 

தொடரும்……