விமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது.

 

புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா அறிமுகப்படுத்தியிருந்ததாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மேற்குலகத்தின் தாக்குதல் கப்பல்களுக்கு இணையானது. இதே போன்ற மேலும் இரண்டு கப்பல்களை கடந்த ஜூலை மாதம் சீனா டாலியன் துறைமுகத்தில் உள்ள கடற்படைத்தளத்தில் இணைந்துள்ளது.

 
கடந்த வருடத்தின் படைத்துறை ஆய்வுகளின் அடிப்படையில் சீனாவின் கடற்படையானது 317 கப்பல்களையும், நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டுள்ளது. அமெரிக்க கடற்படை 283 கப்பல்களையும், நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு நிகழ்ந்த சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் இவ்வாறான தகவல்கள் பெறுவது கடினமானது.

 

 

பனிப்போர் காலத்தில் இடம்பெற்ற படைத்துறை போட்டியில் சோவியத் ஒன்றியம் மேற்கொண்ட படைத்துறை அதிகரிப்பு போலல்லாது, சீனாவின் படைத்துறை அதிகரிப்பானது அதன் பொருளாதார வளர்ச்சியின் விகிதத்திற்கு ஏற்றவாறே அமைந்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனங்களுடன் (($610 billion) ஒப்பிடும் போது சீனாவின் பாதுகாப்புச் செலவீனம் (($228 billion) இரண்டாவது நிலையில் உள்ளதாக Stockholm International Peace Research Institute தெரிவித்துள்ளது.

 

 

1995 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் தாய்வானில் முதலாவது தேர்தல் நடைபெற்றபோது சீனாவானது அதன் அருகில் உள்ள தீவுகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியிருந்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய அமரிக்க அதிபர் பில் கிளிங்டன் இரு விமானந்தாங்கி கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியிருந்தார். எனவேதான் வான் மற்றும் கடற்பரப்புக்களின் படைபலத்தில் சீனா தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

 
இராட்சியத்தின் நடுவில் இருக்கும் நீச்சல் தடாகம் போன்ற கடற்பரப்பின் மீது நாம் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே கடற்பரப்பில் எமக்குள்ள அனுகூலங்களை மட்டும் நாம் இழக்கவில்லை, எமது கடற்பரப்பு தற்போது ஏனைய வல்லரசுகளின் கைகளில் போகும் நிலையை அடைந்துள்ளது என ஆய்வாளர் சென் கோகியன் கடற்படையின் உத்தியோகபூர்வ செய்தித்தாளில் எழுதியுள்ளார்.

 
அதன் பின்பே சீனாவின் கடற்படை வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு சீனக் கடற்படை 3 நீர்மூழ்கிக்கப்பல்களையே கொண்டிருந்தது. ஆனால் தற்போது அது 60 நீர்மூழ்கிக்கப்பல்களைக் கொண்டுள்ளது இது 80 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Congressional Research Service கடந்தமாதம் வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
வெளிநாடுகளில் கண்டறியப்படும் தொழில்நுட்பங்களை சீனா தனது படை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றது. அதன் பெருமளவான ஆயுதத் தொழில்நுட்பம் சோவித்து ஒன்றியத்தின் வடிவத்தை கொண்டதாக இருக்கின்றபோதும், தற்போது சீனா அரசு மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது.

 
சீனாவின் முதலாவது விமானந்தாங்கிக் கப்பலானது 1988 ஆம் ஆண்டு சோவித்தினால் பாவனைக்கு கொண்டுவரப்பட்டதாகும், எனினும் மூன்று வருடங்களின் பின்னர் சோவித்தின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்த கப்பலை உக்கிரேன் அரசு சீனாவை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 20 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தது.
கேளிக்கை விடுதியாக மாற்றம் செய்வதற்கு என்று வர்த்தகர் ஒருவரால் கொள்முதல் செய்யப்பட்ட இந்தக் கப்பலின் கொள்வனவின் பின்னனியில் சீனா அரசே இருந்துள்ளது. பின்னர் சீனா அரசு அதனை மீளவடிவமைத்து லியோனிங் என்ற பெயருடன் தனது கடற்படையில் இணைத்துக்கொண்டிருந்தது.

 
தற்போது கட்டப்பட்டுள்ள இரண்டாவது விமானந்தாங்கி கப்பலும் அதன் வடிவமைப்பையே கொண்டுள்ளபோதும், அதில் நவீன தொழில்நுட்ப வடிவமைப்பையும் சீனா அரசு புகுத்தியுள்ளது. எனினும் அணுசக்தியில் இயங்கும் விமானந்தாங்கி கப்பலை விரைவில் வடிவமைக்கப்போவதாக கடந்த பெப்ரவரி மாதம் சீனா அரசின் கப்பல் கட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக தரித்துநிற்ற வேண்டிய தேவையற்றது.

 

 

ஆனால் சீனா கடற்படையானது ஊழல் மற்றும் போரில் அனுபவமற்ற தன்மை போன்ற நெருக்கடிகளை கொண்டுள்ளது. எனினும் ஊழலை முற்றாக ஒழிக்கப்போவதாக சீன அரச தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

யப்பானின் சென்ககு தீவு மற்றும் சீனாவின் டையேயூ தீவுகளுக்கு அண்மையாக கடந்த ஜனவரி மாதம் சீனாவின் மிக நவீன நீர்முழ்கிக்கப்பல் தென்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான தாக்குதல் நீர்மூழ்கிகள் இலகுவில் தென்படுவதில்லை.

 

 

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிகப்பலின் ஆரம்ப பயணம் ஏப்பிரல் மாதம் இடம்பெறுவதாக இருந்தது ஆனால் அது பின்னர் மே மாதத்திற்கு பிற்போடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

 
யப்பானின் மியாக்கோ நீரிணையின் ஊடக லியனிங் விமானந்தாங்கி கப்பல் ஏனைய 6 போர்க்கப்பல்களுடன் பயணித்ததைத் தொடர்ந்து அது தக்குதலுக்கு தயாராகிவிட்ட அணியாக சீனா அறிவித்திருந்தது. இந்த அணி தனது முதல் நடவடிக்கையை பசுபிக் பிராந்தியத்தில் ஆரம்பித்திருந்தது.

 
இந்த அணி தற்போது தாய்வான் பகுதியை சுற்றி வலம் வருகின்றது. அதில் தாக்குதல் மற்றும் குண்டுவீச்சு விமனங்களும் உள்ளன.

 
சீனாவின் புதிய ஜே-20 ஸ்ரெல்த் தாக்குதல் விமானங்கள் தனது முதல் பயிற்சி நடவடிக்கையை கடந்த மே மாதம் சீனாவின் கடற்பகுதியில் எச்-8 ரக குண்டு வீச்சு விமானங்களுடன் மேற்கொண்டிருந்தன. இந்த விமானங்கள் முதல் முதலாக பரசல் தீவில் உள்ள ஓடுதளத்திலும் தரையிறங்கியிருந்தன. இந்த தீவில் உள்ள தளத்தில் இருந்து தெற்காசியா பிராந்தியத்தில் உள்ள இலக்குகள் மீது இந்த விமானங்கள் தாக்குதல் நடத்தும் வீச்சைக் கொண்டவை.

 

 

எச்-6 தாக்குதல் விமானங்கள் யப்பான், தென்கொரியா மற்றும் குவாம் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை தாக்கும் வீச்சுக் கொண்டவை என பென்ரகன் தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
அமெரிக்காவானது எதனையும் தனக்கு போட்டியாகவே பார்க்கும் ஆனால் சீனாவானது தனது உரிமைகளையும், நலன்களையும் பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே இறங்கியுள்ளது என சீனாவின் கடற்படை ஆய்வுமையத்தின் அதிகாரி லீ ஜி தெரிவித்துள்ளார்.

 

 

ஆபிரிக்காவில் உள்ள டிஜிபோதி பகுதியில் கடந்த ஆண்டு (2017) சீனா தனது முதலாவது கடல் கடந்த படைத்தளத்தை திறந்துள்ளது. ஆனால் சோமாலியா கடற் பகுதி கடற் பகுதியில் கடற் கொள்ளையை தடுக்கும் முகமாக இடம்பெறும் கூட்டு காவல் பணிகளுக்காகவே அதனை நிர்மாணித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

 

 

ஆனால் தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுகங்களையும், தளங்களையும் தன்வசப்படுத்தும் நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகின்றது. நீண்டதூர கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனது கடற்படைக் கப்பல்கள் மற்றும் தனது வர்த்தகக்கப்பல்களின் பாதுகாப்புக்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காகவே சீனா இந்த முத்துமாலைத் திட்டத்தை மேற்கொண்டுவருவதாக வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இந்த நடவடிக்கையில் சீனா விரைவில் வெற்றிபெறும், உதாரணமாக அவர்கள் தனது கடற்படை அணியை ஆபிரிக்காவில் தரையிறக்கி தமது இலக்குகளை பாதுகாக்கும் பலத்தைப் பெறுவார்கள் என மொஸ்கோவைத் தளமாகக் கொண்ட கிழக்குப் பிராந்திய ஆய்வு மையத்தின் அதிகாரி வசிலி ஹசின் தெரிவித்துள்ளார்.

 

 

யேமனில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் சிக்கியிருந்த 629 சீன மற்றும் 279 வெளிநாட்டவர்களையும் 2015 ஆம் ஆண்டு சீனாவின் போர்க்கப்பல்கள் காப்பாற்றியிருந்தது. யேமனின் தென் துறைமுகமான ஏடன் பகுதியில் தரையிறக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட சீனாவின் போர்க்கப்பல்களில் ஒன்றான லின்ஜி என்ற கப்பல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட Operation Red Sea என்ற திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடியதும் நினைவிருக்கலாம்.

 
சீனாவின் நடவடிக்கைகள் உலகம் எங்கும் பரவப்போகின்றது எனவே அதற்கு நாம் தயாராக வேண்டும் என ஹசின் மேலும் தெரிவித்துள்ளார்.

 
ஆம் இந்து சமுத்திரப்பிராந்தியத்திலும் சரி, ஆசியக் கண்டத்திலும் சரி சீனா தனக்கான பாதையை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களின் கலாச்சாரம், மொழி அகியவற்றில் அக்கறை செலுத்துகின்றது. உதாரணமாக பெஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் தமிழ் மொழியை கற்பிக்கின்றது என இந்தியா ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

 
பயில்வதற்கு மிகவும் கடினமாக மொழியாக தமிழ் உள்ளபோதும் தாம் அதனை முன்னெடுத்து வருவதாக இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் Zhou Xin தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது இந்திய மற்றும் ஆசிய பிராந்தியத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்திப்பதிலும் அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேணுவதிலும் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

 
இந்தியாவில் உள்ள ஏனைய இனங்களின் மொழிகளையும் தமது மக்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களுடன் ஒரு இராஜதந்திர உறவைப்பேண சீனா விரும்புகின்றது. அதே சமயம் தமிழ் வானொலியையும் அங்கு உருவாக்கியுள்ளது.

 
பல வருடங்களாக சிங்கள இனத்துடன் உறவாடிய சீனா தற்போது தமிழ் மக்களின் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது. சிறீலங்காவுக்கு அதிக உதவிகளை முன்னர் வழங்கி வந்த யப்பனை தோற்கடித்த சீனா போர்க்காலத்தில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தாவுடன் உறவாடி அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், காலிமுகத்திடல் அபிவிருத்தியையும் இன்னும் பல நடவடிக்கைகளையும் தனதாக்கியிருந்ததை நாம் அறிவோம்.

 
அதேசமயம் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசம் சார்ந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வலையங்களை பலப்படுத்தவே தென்கொரியா விரும்புவதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் சொங் ஜொங் மூ (Song Yong Moo) அண்மையில் தனது இந்திய பயணத்தின் போது தெரிவித்திருந்தார்.

 
1950 களில் இடம்பெற்ற கொரியப் போரின் போது இந்தியா மேற்கொண்ட உதவிகளை தாம் மறக்கவில்லை எனவும், தென் கொரியாவின் உதவியுடன் மிகவும் தரம்வாய்த கடற்படைத்தளத்தை உருவாக்கவும், தமது தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பரிமாறிக்கொள்ளவும் தாம் தாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 
சீனாவுடன் வடகொரியா நட்புறவாக உள்ளதை நாம் அறிவோம் எனவே பனிப்போர் ஒன்று ஏற்பட்டால் அவர்களின் வியூகங்களைத் தகர்ப்பதற்காகவே மேற்குலகத்தின் நண்பனான தென்கொரியா இந்தியாவுடன் கைகோர்க்க திட்டமிட்டு வருகின்றது.

 
அதாவது இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் தற்பாதைய நிலை மிகவும் காத்திரமான இராஜதந்திர நகர்வுகளின் புள்ளியாக மாற்றம் பெற்றுள்ளது, இந்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு எவ்வாறு தனக்கு அனுகூலமாக மாற்றப்போகின்றது? நாம் என்ன நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்?

 
அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

 
தொடரும்……..

 

முதலாவது பாகத்தை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்.

 

முக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம்? -வேல்ஸ் இல் இருந்து அருஷ்