தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையை 99 வருடங்களுக்கு தனதாக்கிக் கொண்ட சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு காலாவதியான திருமலைத்துறைமுகத்தின் ஒப்பந்தத்தை பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா புதுப்பித்துள்ளது.

 

அதாவது திருமலைத்துறைமுகத்திலுள்ள அமெரிக்காவின் பிரசன்னம் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன், இந்தியாவையும் கண்காணிக்க அமெரிக்காவுக்கு பெரும் உதவிகளை வழங்கும்.

 

ஆனால் தற்போது அமெரிக்கா மற்றுமொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது சீனா வடக்கு நோக்கி தனது நகர்வை முன்னெடுத்துள்ளது.

 

வடக்கிற்கும் சீனாவுக்குமான ஆதிகால வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் அல்லைப்பிட்டியில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த சீனா தற்போது மன்னார் வளைகுடா மீது தனது கவனத்தை பதித்துள்ளது. சிறீலங்கா கடற்படைக் கப்பலில் சென்ற சீனா தூதரக அதிகாரிகள் மன்னார் கடல் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டது இந்திய தரப்பை அச்சத்தில் தள்ளியுள்ளது.

 

அதாவது இந்தியாவின் தென்கோடியில் 30 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் சீனா நிலையெடுப்பது என்பது இந்தியா ஒரு முற்றுகைக்குள் சிக்கியுள்ளதையே காட்டுவதாக பாதுகாப்புத்துறை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

இந்த பூகோள பலப்பரீட்சையில் தமிழ் மக்களின் விடுதலைப்போர் பெரும்பங்கு வகிக்கின்றது அதனை தமிழ் மக்கள் அறிவார்களோ அல்லது இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எம்மை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அவர்களை பயன்படுத்திக் கொள்ள எமது தற்போதைய அரசியல் தலைமைகள் தவறி வருகின்றனர்.

 

எனினும் எமது அரசியல்வாதிகளின் தவறுகளை புறக்கணித்து சாதரணமாக கடந்து செல்வதற்கு தமிழ் இனம் தயாராகவில்லை. அதனை தன்னிட்சையாக மேற்கொள்ளப்படும் மக்களின் போராட்டங்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மூலம் நாம் காணமுடியும்.

 

சிறீலங்கா படையினரின் நிலஅபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் என்பன தமிழ் அரசியல்வாதிகளால் ஒழுங்கமைக்கப்படவில்லை மாறாக தற்போது பதவியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அதனை விரும்பவுமில்லை. எனவே தான் அதனை குழப்பும் முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வதுடன், அவர்களால் நடத்தப்படும் ஊடகங்களிலும் இந்தப்போராட்டங்கள் வெளிவராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

 

காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டமும் அவ்வாறானதே, அதாவது சிறீலங்கா அரசின் அபிவிருத்தி என்ற மாயைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சி தமது விடுதலைப்போரை கைவிடுவதற்கு தமிழினம் தயாராகவில்லை.

 

கடந்த 6 ஆம் நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பான மாணவர்களின் மாநாட்டைத் தொடர்ந்து 16 ஆம் நாள் மிகப்பெரும் கண்டனப்பேரணி ஒன்றையும் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர். பிரித்தானியாவின் ஊடாக சிறீலங்காவுக்கு மேற்குலகம் வழங்கும் காலஅவகாசத்திற்கு எதிராக மாணவர்களும், மக்களும் அணிதிரண்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மாற்றம் பெற்ற போரட்டத்தின் வடிவத்தை அதன் தேக்க நிலையில் இருந்து முன்நகர்த்திச் செல்ல தற்போது அவர்கள் தயாராகிவிட்டனர்.

 

தமது பூகோள நலன்களுக்காக சிறீலங்கா அரசு கேட்காமலே மேலதிகமாக இரண்டு வருட அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பிரித்தானியா வழங்குவது தமிழ் மக்களை மிகுந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் தள்ளியுள்ளது. அதற்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பது தமிழ் மக்களுக்கு அவர்கள் மீது மிகுந்த அதிதிருப்தியை ஏற்படுத்தியிருந்தலும் அதன் பின்புலம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

 

2015 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசியலில் மாற்றம் ஒன்றை கொண்டு வந்த அமெரிக்கா சிறீலங்காவில் தொடரப்போகும் தொங்கு நாடாளுமன்ற ஆட்சியை முன்கூட்டியே கணித்திருந்தது. எனவே அதனை சரிசெய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது பிடிக்குள் கொண்டுவந்திருந்தது. ஏனெனில் தெற்கில் ஏற்படும் இரு பெரும் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் சமநிலையை ஒரு பக்கத்திற்கு நகர்த்துவதற்கு தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியம் என்பதை அமெரிக்க சரியாகக் கணித்திருந்தது.

 

அதற்கான பேச்சுவார்தையும், இணக்கப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்குமிடையில் சிங்கப்பூரி;ல் இடம்பெற்றது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அதாவது கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையில் இடம்பெற்ற பதற்றத்தை தணிப்பதற்கும் மகிந்த ராஜபக்சாவை வெளிறே;றுவதற்கும் எந்தவித நிபந்தனைகளுமின்றி சுமந்திரன் ஏன் நீதிமன்றம்வரை சென்று போராடினார் என்பதற்கான விடை தற்போது எமக்கு தெளிவாகியுள்ளது.

 

சுமந்திரனின் தனிப்பட்ட பேராசையில் தமிழினம் தனக்கு கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பம் ஒன்றை அநியாயமாக இழந்துள்ளது.

 

அதாவது தமிழ் மக்களின் உரிமைகள் அமெரிக்காவிடம் ஏற்கனவே விலைபேசப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தமிழ் இனத்திற்கு மக்கள் மற்றும் மாணவர் போராட்டத்தின் எழுச்சிகள் அவசியமாகின்றன.

 

அதாவது தமிழ் அரசியல் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. தவறான அரசியல் தலைமைகளினால் தவறவிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு தற்போதைய மாணவர் எழுச்சிக்கு உறுதுணை வழங்கவேண்டிய கடமை ஒன்று ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் உண்டு.

 

வடக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் இந்தப்போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதுடன், உலகில் தமிழ் மக்கள் பரந்துவாழும் நாடுகளில் கல்விகற்கும் தமிழ் மாணவர்களும் தமது அமைப்புக்களின் ஊடாக இந்த போராட்டத்தினை உலகம் முழுவதும் ஒருங்கிணைக்கவேண்டும்.

 

அதாவது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் ஆளுமையை தீர்மானிக்கும் சக்தியாக மாணவர்கள் மாறவேண்டும் என்பதுடன் அவர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
மாணவர்களால் இது சாத்தியாமாகும் ஏனெனில் அதற்கான ஆதாராமாக 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் வடக்கிலும், கிழக்கிலும் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களைக் குறிப்பிடலாம். ஓட்டுக்குழுக்களை விரட்டியடித்து, தமிழ்த் தேசியத்தின் முன் மக்களை அணிதிரள வைத்ததில் மாணவர்களின் பங்கு அன்று அளப்பரியது.

 

ஓன்றுபட்ட சக்தியாகவும், தமிழ் மக்களின் அரசியல் பலத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் நாம் எம்மை மறுசீரமைத்துக்கொண்டாலே தமிழ் மக்களின் குரலை அனைத்துலக சமூகமும், மேற்குலகமும், பிராந்திய வல்லரசுகளும், தற்போதைய உலக ஒழுங்கிற்கு ஏதுவாக இசைந்து இயங்கிவரும் மனித உரிமை அமைப்புக்களும் உள்வாங்கிக்கொள்ளும்.

 

எனவே தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கு ஜெனீவா கூட்டத்தொடரில் நீதி கிடைக்கவேண்டும் என அணிதிரளும் மாணவர்கள் தமது போரிடும் வலுவை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதுடன், தற்போது போரட்டகளத்தில் உள்ள மக்களின் போராட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வேண்டும்.

 

ஏனெனில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதிகேட்டுப்போராடும் தமிழ் மக்களின் எண்ணிக்கைகள் வருடம்தோறும் ஜெனீவாவில் குறைவடைந்துவரும் அதேநேரம் தாம் மேற்கொண்ட மற்றும் தற்போது மேற்கொண்டுவரும் இனஅழிப்பை நியாயப்படுத்த சிங்களவர்கள் ஜெனீவாவில் ஒன்று திரண்டுவருகின்றனர்.

 

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய பிரதிநிதித்துவத்தால் எமது இராஜதந்திர நகர்வுகள் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதனை சீர்செய்யவேண்டும் எனில் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தில் மிகப்பெரும் மாற்றம் தேவை. அதனை மேற்கொள்ளும் தகமை தற்போது வீரியம்பெற்றுவரும் மக்களினதும் மற்றும் மாணவர்களினதும் போராட்டத்திற்கு உண்டு.

 

நன்றி: இலக்கு (17.03.2019)