mullivaiகோர இனப்படுகொலை நடத்தி முடித்து மக்களை உயிரோடு மண்ணால் மூடி கொன்று புதைத்த பின் தமிழர்கள் படுகொலையான தடயம் புதைத்த முள்ளிவாய்க்கால் மண்ணை இப்பொழுது கடற்படையினருக்கு வழங்குமாறு கேட்கும் சூழ்ச்சி நடக்கிறது.

 

இனப்படுகொலையின் தடயங்கள் தமிழர்கள் கையில் இருக்கும் வரையில் ஆபத்து என உணர்ந்த சிங்களப் பேரினவாத கூலிப்படை இப்பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணையே முழுதுமாக அபகரிக்க பார்க்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் விழிப்பு கொள்ள வேண்டும். எதற்காகவும் எந்நிலையிலும் இழந்து விடக் கூடாது. விழித்து கொள்ளுங்கள் உறவுகளே.

 

எம் மக்கள் இம்மியளவு மண்ணையும் இழக்காமல் உறுதியாக இருக்க வேண்டும். பணத்தை காட்டி ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். மக்கள் எக்காரணம் கொண்டும் காணிகளை விட்டு கொடுக்கக் கூடாது.

 

எத்துணை விலை பேசினாலும் அதிகாரத்தை பிரயோகித்தாலும் மக்கள் அரசை ara எதிர்த்து போராட வேண்டும்.

 

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் 3றூட் 31பேர்ச் காணி போருக்குப் பின்னர் கடற்படையினரின் பாரிய முகாம் அமைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்தாண்டு தொடக்கத்தில் மேற்படி காணிகளை சுவீகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன், காணியை அளப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அளவீடு நிறுத்தப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் நேற்று முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி வசந்த பெரேரா தலமையில் மேற்படி முள்ளிவாய்க்கால் காணி உரிமையாளர்களுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

 

காலை 10.30 மணி தொடக்கம் சுமார் 2 மணி நேரம் மேற்படி சந்திப்பு நடைபெற்றிருந்தது. இதன்போது மொத்தமாக கடற்படை வசமிருக்கும் 617 ஏக்கர் காணியில் 276 ஏக்கர் காணி மட்டுமே அரச காணியாகும். மிகுதி காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணிகளாகும். என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த காணிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக கடற்படையினருக்கு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கோரிக்கை விடுத்ததுடன், காணிகளை வழங்கினால் இலங்கையில் மற்றைய இடங்களில் வழங்கப்பட்டதைக் காட்டிலும் அதிகபட்ச நஸ்டஈடு வழங்கப்படும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

 

இந்நிலையில் குறித்த கோரிக்கையை மறுத்துள்ள மக்கள் நஸ்டஈடு பெற்றுக்கொள்ள தாம் தயார் இல்லை. எனவும் தங்களுடைய காணிகளில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்கப் போவதில்லை. எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் குறித்த கூட்டம் தொடர்பில் வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் ம.அன்டனி ஜெயநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் காணி உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.

 

முல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் கலந்து கொள்ள வந்திருந்த போதும் அவர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும், நானும் கலந்து கொண்டோம். இதன்போது அவர்கள் காணி உரிமையாளர்களிடம் காணிகளை பாதுகாப்பு தேவை கருதி கடற்படையினருக்கு
வழங்குமாறு கேட்டிருந்தனர்.

 

மேலும் காணிகளை தமக்கு வழங்கினால் அதிகபட்ச நஸ்டஈடு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கடற்படையினர் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

ஆனால் மக்கள் அதனை நிராகரித்தார்கள். நாங்களும் மிக தெளிவாக கூறியிருக்கிறோம். அதாவது காணிகளில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது என்பதை.

 

இந்நிலையில் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக காணி உரிமையாளர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு தங்கள் காணிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும். எதிர்வரும் மாசி மாதம் தாம் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளை தாங்கள் அடையாளப்படுத்துவோம். எனவும் கூறினார்கள்.

 

இதனையடுத்து மக்கள் குழப்பமடைந்து தங்கள் காணிகளை எப்போதும் வழங்கப் போவதில்லை. என்பதை உறுதியாக தெரிவித்திருக்கின்றோம். கூட்டத்தில் கடுமையான குழப்பம் நிலவியது.

 

மக்கள் மீண்டும்..மீண்டும் இறுக்கமாக தக்கள் காணிகளை வழங்கப் போவதில்லை. என கூறிவிட்ட நிலையில் கூட்டம் நிறைவு பெற்றிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

 

செய்தி: (நன்றி ஈழமகான் தமிழ்)