ஏதோ மிகைப்படுத்தி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.. இன்றைய தினம் தமிழர் வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க தினம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது

 

காலையில் அலாரம் வைத்து எழுந்து குளித்துவிட்டு மெரினாவை நோக்கி வண்டியை விரட்டியபோது மனதில் நினைத்து பார்க்கவே இல்லை ஒரு அற்புதமான அனுபவமாக இன்றைய காலைப்பொழுது அமையப்போகிறது என்று.

 

பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்பையெல்லாம் கடந்து கலங்கரை விளக்கத்தை அடைந்தபோது பேரணி நகர ஆரம்பித்தது. அப்படியே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பேரணியில் ஐக்கியமானேன்.

 

பார்வையை சுழற்றினால் கண்ணுக்கெட்டியதூரம் வரை முன்னும் பின்னும் ஒரே இளைஞர்கள் திரள். வேட்டி சட்டையில் இளைஞர்கள் ஒரு பக்கம்.. பட்டுப்பாவடை, தாவணி, சேலை என்று இளம்பெண்கள் ஒரு பக்கம் என்று அந்த காட்சியே பயங்கர உற்சாகத்தை கொடுத்தது.

 

ஞாயிறு காலையிலே இவ்வளவு பேர் பொங்கல் விழாவுக்கு ஜல்லிக்கட்டு பார்க்க கிளம்பி வருவதுபோல் வந்திருந்தார்கள். அதுவும் இப்படி ஒரு கிராமிய செட்டப்பில் பெண்களை எல்லாம் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கிராமிய உடையில் இளம்பெண்கள் சிலர் கொள்ளை அழகுடன் காட்சியளித்தார்கள்.

 

“வீ வாண்ட் ஜல்லிக்கட்டு’’ என்ற ஒற்றைக்கோசம் பேரணி முழுக்க எதிரொலிக்க மெரினா அதிர்ந்தது. இதுவரை எவ்வளவோ போராட்டங்களுக்காக சென்றிருக்கிறேன். இப்படி ஒரு இளைஞர் பட்டாளத்தை களத்தில் பார்த்ததில்லை. கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பித்து உழைப்பாளர் சிலைவரை ஊர்வலம் நீண்டிருந்தது. பல்லாயிரக்காணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலம் அது.

 

ஆனால் சன்நியூஸ் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் 5 ஆயிரம் பேர் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். தமிழர் அடையாள அரசியலுக்குப்பின் இவ்வளவு இளைஞர்கள் திரள்வது அவர்களுக்கு உள்ளுக்குள் பதட்டமாகதான் இருக்கதான் செய்யும்.

 

மற்றபடி ஊளை சத்தமிடும் வட இந்திய தொலைக்காட்சிகள் எதையும் காணோம். இதுவே இந்த பீட்டா பயலுக ஒரு ஐம்பதுபேர் ஊர்வலம் போயிருந்தால் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி என்று ஒப்பாரி வைக்க ஓடி வந்திருப்பார்கள். ஆனால் இது தமிழர்கள் நடத்தும்பேரணி என்பதால் இருட்டடிப்பு செய்வார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்.

 

எந்த மீடியாக்களின் ஆதரவும் இல்லாமல்
இது எப்படி சாத்தியமானது என்பதை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களே இப்படி ஒரு இளைஞர் படை திரளும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

 

நமது ஒரே பலம்.. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மட்டுமே. இதை பயன்படுத்தி இவ்வளவு இளைஞர்களை திரட்ட முடியும் என்பது அரசியல் அமைப்பினருக்கு ஒரு பாடம். ஈழத்தமிழர் பிரச்னையில் ஆரம்பித்து தமிழர்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் இந்த இளைஞர்களை ஏன் இழுத்து வர முடியவில்லை.. என்பது யோசிக்க வேண்டிய விசயம்.

 

இன்றைய தினம் மெரினாவில் தமிழ் இளைஞர் படை ஜல்லிக்கட்டு நடத்தியது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காளையை வேறு ஊர்வலத்தில் அழைத்து வந்திருந்தார்கள். சும்மா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கோசம் செல்ஃபி என்று தெறிக்க விட்டாங்க நம்ம பசங்க. பீட்டா பயலுக மட்டும் சிக்கியிருந்தால் சிதைச்சுருப்பாங்க..

 

ஜல்லிக்கட்டு பேரணி முடித்துவிட்டு அப்படியே சேப்பாக்கத்தில் விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்திலும் அதே இளைஞர்கள் கலந்து கொண்டது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

 

இந்த பேரணியில் கந்து கொண்டவர்கள் அனைவரும் சாதிவெறியர்களோ காட்டுமிராண்டிகளோ அல்ல என்பதை பெரியார் பக்தர்களும் பீட்டா சொம்புகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஜல்லிக்கட்டு என்பது தமிழரின் அடையாளம். அதில் சில இடங்களில் சாதிய சிக்கல்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதை கலைய முயற்க்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக முடக்க வேண்டும் என்பது அறிவற்ற செயல்.

 

அதோடு பன்னாட்டு என்.ஜி.ஓ ஓநாய் ஒன்று நம்மூருக்குள் புகுந்து நம் கலாச்சார அடையாளங்களை சிதைக்கும்போது, முற்போக்கின் பெயரில் அவர்களோடு ஒத்தூதுவது என்பது அயோக்கியத்தனம்.

 

அத்துடன் தமிழக அரசு வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லையா.. மறைமுகமாக ஆதரவு கொடுக்க வேண்டும். தங்கள் அடியாட்களான போலீசை ஏவிவிட்டு அடிக்காமல் வேடிக்கைப்பார்க்கவிட்டால் போதும். தங்கள் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மற்ற மாநில அரசுகள் அப்படிதான் எதிர்கொள்கின்றன.

 

ஆனால் தமிழர்களை பிடித்த பீடைகளான திராவிட கட்சிகள் இரண்டும் ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதால் தமிழர்களின் நியாயங்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கின்றன. வருங்காலம் அதை மாற்றும்.

 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய அத்தனை அமைப்பினருக்கும் பாரட்டுகளும் நன்றிகளும்.

 

தமிழர்களின் போராட்ட வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

 

-கார்ட்டூனிஸ்ட் பாலா
8-1-17