ananthy-usதமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றது.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்காவின் குடியரசுக்கட்சியின் செனட் பிரதிநிதி றிச்சர்ட் புர் மற்றும் ஜனநாயகக் கட்சியின் செனற் பிரதிநிதி பொப் கசே ஆகியோர் இணைந்து அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த தீர்மானமானது சிறீலங்கா மீதான நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களுக்கு மேலதிக அழுத்தத்தை கொடுக்கவல்லது என்பதுடன் வாக்கெடுப்பின் மூலம் அது செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்படலாம் என பிரான்ஸ் நாட்டை தளமாகக்கொண்ட அசோசியட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் சபையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்துலக சமூகத்துடன் இணைந்து சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா செயற்படவேண்டும் என்றும் காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவின் தீர்மனத்தில் அனைத்துலக விசாரணையை கோரும் சரத்து உள்ளதா என்பது குறித்த தகவல்களை அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.

இதனிடையே, போர்க்குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரசல்சில் நடைபெற்ற ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் சில விடயங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதற்கு ஆதரவளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மனித உரிமை மேம்பாட்டுக்கு ஆதவரளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் செயற்படும் என அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவுக்கு அதில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளும் உடன்படும் என்ற தகவல்கள் சிறீலங்காவுக்கு மிகுந்த அதிர்ச்சியான விடயமாகும். ஏற்கனவே பிரித்தானியாவும், கனடாவும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் எழுப்பியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் துணைத்தூதுவர் நிஷா பிஸ்வால், போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக குற்றவியல் நீதியாளர் ஸ்ரீபன் ராப் ஆகியோரின் அண்மையான சிறீலங்கா பயணம், பிரித்தானியா பிரதமர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஆகியோர் கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணம் போன்றவை எதிர்வரும் மாதம் கொண்டவரப்படும் தீர்மானத்திற்கு வலுச்சேர்ப்பைவையாக இருப்பினும் இந்தியா இன்றுவரை அமைதிகாப்பது பாதகமான விளைவை ஏற்படுத்தலாம்.

இந்தியாவை பின்பற்றி பல நாடுகள் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதில் இருந்து தப்பிக்க வழிதேடலாம். சிறீலங்காவுக்கு ஆதரவான ஒரு நிலையை மறைமுகமாக ஏற்படுத்தவே இந்தியா இறுதிவரை அமைதிகாப்பது வழக்கம். கடந்த இரு தீர்மானங்களின் போதும் இது தான் நடந்தது.

செய்தித் தொகுப்பு: ஈழம் ஈ நியூஸ்.