விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. இது தமிழ் இனத்தின் விடுதலைப்போரின் அடுத்த கட்ட நகர்வுக்கு கிடைத்த உந்துசக்தியாகும்.

புலிநீக்க அரசியல் தொடர்பில் இந்தியாவும், அதற்கு சார்பானவர்களும் பேசிவரும் வேளையில் இந்த தீர்ப்பானது அவர்களின் கனவை உடைத்து எமது விடுதலைப்போரை தடையின்றி தொடர்வதற்கு உறுதுணையாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடையின் நீக்கத்தை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் தனது எதிர்ப்பினை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு ஒன்று நிகழுமானால் அதனை எதிர்க்கும் மனஉறுதியை இந்த தீர்ப்பின் மூலம் நாம் பெற்றுள்ளோம்.

சிறீலங்காவுடன் பேசவேண்டும், ஒருங்கிணைந்த சிறீலங்காவுக்குள் தீர்வுவைக் காணவேண்டும், 13 ஆவது திருத்தத்தை திருத்தவேண்டும் என பல சட்டம்படித்தவர்கள் மக்களை ஏமாற்ற கங்கணங்கட்டிச் செயற்பட்டுவரும் இந்த தருணத்தில் விடுதலைப்புலிகள் என்ற நாமத்தின் ஊடாகத்தான் எமது உண்மையான சுதந்தித்தை பெறமுடியும் என்ற உண்மையை எடுத்துரைத்த வழக்கறிஞர் திரு லதன் சுந்தரலிங்கம் அவர்களின் முயற்சியானது மிகவும் போற்றத்தக்கது.

இனிவருங்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் தமிழத் தேசியக் கொடியை ஏந்திச்செல்வதற்கோ, மண்மீட்புபோரில் உயிர்த்தியாகம் செய்த எமது உறவுகளை நினைவுகூருவதற்கோ எந்த தடையும் இருக்கப்போவதில்லை.

தடையை காரணமாக முன்வைத்து தமிழ் சமூகத்தை மிரட்டிவந்த சமூகவிரோதக் கும்பலும் இனிமேல் வேறுகாரணங்களை தேடவேண்டிவரும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்காக போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து சாட்சியங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சிகளை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

விசாரணைக்குழுவை இந்தியாவுக்கு அனுமதிக்க மறுத்துள்ள மோடி அரசு, தமிழகத்தில் ஒரு அரசியல் உறுதியின்மையை ஏற்படுத்தி தமிழ் மக்களின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.

ஐ.நா சபையின் விசாரணையினால் எதுவும் ஆகப்போவதில்லை என ஒரு சாரார் தெரிவித்துவரும் கருத்துக்களானது சிறீலங்கா அரசை தப்பவைக்கும் முயற்சியாகும் என்பதுடன் தமிழ் இனத்திற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையும் தகர்க்கும் முயற்சியுமாகும்.

ஆனால் அயராத முயற்சியும், சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தும் தந்திரமும் எமது பாதையை இலகுவாக்கும் என்பதை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு எமக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் ஊடாக நாம் மேற்குலகத்துடன் ஒரு இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த வலுப்படுத்தல்களில் தமிழகமே முக்கிய பங்கு வகிக்கவேண்டும். இதன் மூலம் தான் இந்திய மத்திய அரசுக்கு தமிழ் இனம் சரியான பதிலடியை வழங்க முடியும் என்பதுடன், தற்போது தோன்றியுள்ள பூகோள அரசியல் நீரோட்டத்தின் ஊடாக நாம் எமது விடுதலையை வென்றெடுக்க முடியும்.

‘எமது ஆயுதங்களை நாம் தற்காலிகமாக மௌனிக்கின்றோம்’ என 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைமை அறிவித்ததன் முக்கிய நோக்கமும் அதுவேதான்.

ஈழம்ஈநியூஸ்.