மேற்குலகத்துடனான ரணிலின் தேன்நிலவே தாக்குதலுக்கான காரணம் – பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு

0
1289

சிறீலங்கா தலைநகர் கொழும்பிலும் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பிலும் மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கொல்லப்பட்டவர்களில் 50 வெளிநாட்டவர்கள், 98 சிங்கள இனத்தவர் மற்றும் 150 தமிழ் மக்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 600 இற்கும் மேல் எனவும் அதில் பலரின் நிலமை கவலைக்கிடமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

சிறீலங்கா முழுவதும் நேற்று மாலை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 24 இற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவான ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

 

இப்ராகிம் என்பவருக்குச் சொந்தமான தெமட்டக்கொடவில் உள்ள வீடு சுற்றிவழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 3 சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன், இரு பொதுமக்களும் கொல்ப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை முடித்த அவரின் 26 வயது மகனே தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருந்தார்.

 

சிறீலங்கா காவல்துறையின் நடவடிக்கையின் போது தற்கொலைதாரியின் மனைவி அல்லது தாயார் கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.; சிறீலங்காவில் இறக்குமதி வர்த்தகத்தை மேற்கொள்பவர்களில் இப்ராகிம் மிக முக்கியமானவர்.

 

இதனிடையே, தியத்தலாவைப் பகுதியில் மேறகொள்ளப்பட்ட தேடுதலின் போது ரி-56 துப்பாக்கிகளுக்கான 156 ரவைகளும், 8 ரவைக்கூடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஏப்ரல் 11 என நாள் குறிக்கப்பட்ட கடிதம் ஒன்று காவல்துறை மா அதிபர் ஒருவரால் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்த போதும் அதனை சிறீலங்கா புலனாய்வுத்துறை புறக்கணித்திருந்தது பெரும் சர்ச்சைகளை சிறீலங்கா அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று அரச தலைவர் மைத்திரி பதவி விலகவேண்டும் மற்றும் ரணில் அரசு கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

 

மேற்குலகத்துடனான ரணில் அரசின் தேன்நிலவே இந்த தாக்குதல் நடப்பதற்கான முக்கிய காரணம் என சிங்க மக்கள் கருதுகின்றனர்.

 

இதனிடையே தேசிய தாவீட் ஜமாத் தலைவர் முகமட் ஷகரன் கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் கூடும் இடங்களை தாக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் தகவல்களை மேற்கோள் காட்டி அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

நேற்றைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 39 இற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்னர். இறந்தவர்களில் 5 பிரித்தானியர்கள் மற்றும் 6 இந்தியர்கள் அடங்குவதாகவும், இவை தவிர அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, டுபாய், போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அதேசயம், இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்ற சுவரெட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. நேற்றைய தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள பௌத்த தீவிரவாதிகளால் சில முஸ்லீம் வீடுகளும் கடைகளும் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்தே இந்த சுவரொட்டிகள் தென்படுகின்றன.

 

சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்கள் தற்காலைத் தாக்குதல்கள் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள போதிலும் அது தொடர்பில் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஓவ்வொரு தாக்குதலுக்கும் தலா 25 கிலோ சி-4 எனப்படும் மிகவும் சக்திவாய்ந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல் மிகவும் திறமையாக திட்டமிடப்பட்டுள்ளதும் சிறீலங்கா படைத்தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

வெடிபொருட்களும் ஆயுதங்களும் வெளிநாட்டில் இருந்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தொடர்ச்சியாக கைப்பற்றப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது எதிர்காலத்தில் பெருமளவான தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சிறீலங்காவில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற வாய்புக்கள் உள்ளதாகவும் தமது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அல்லது சிறீலங்காவுக்கான பயணத்தை தவிர்க்குமாறும் கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

 

நேற்றை தாக்குதலானது உயிரிழப்புக்களுக்கு அப்பால் சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என அரசியல் அவதானி ஒருவர் ஈழம் ஈ நியூசிற்கு தெரிவித்துள்ளனர்.

 

பெருமளவில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டது சிறீங்காவின் சுற்றுலாத்துறையையும், முதலீட்டுத் துறையையும் கடுமையாக பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

செய்தித் தொகுப்பு ஈழம் ஈ நியூஸ்.