நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமது நன்றிகளை இதன்போது குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, “அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்திய தேர்தல்கள் ஆணையாளர், முப்படையினர் மற்றும் அதற்கு உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி. மஹிந்த ராஜபக்ஷவுக்கு என் விஷேட நன்றிகள், எனக் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் முடிவுகளை அடுத்து, யாருக்கும் மனதளவிலும் வேதனை அளிக்க வேண்டாம் என மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.