ஆட்சி மாற்றம் ஒன்றுக்கே பெரியண்ணன்மார் கடந்த ஐந்து வருடங்களாகப் பாடுபடுகிறார்கள் என்று சொன்னால், இது சிவப்புச் சிந்தனையின் வெளிப்பாடு என்று உதறிச் சென்றவர்கள் இப்போது அது குறித்து ஆராயத் தொடங்கிவிட்டார்கள்.
ஜனவரி 8 இற்குப்பின்னர், மார்ச் மற்றும் செப்டெம்பர் காலத்து ஐ.நா.கூட்டத்தொடரை ஒட்டிய இந்துசமுத்திரப்பிராந்திய பூகோள அரசியல், எவ்வாறு மாற்றம் அடையும் என்பது குறித்து எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

அதாவது மேற்குலக-இந்திய ‘வக்கிரப்பார்வை’ பட்ட மைத்திரிபால சிறிசேன சனாதிபதியாகினால், மலாக்கா நீரிணைக்குள் சீனாவின் புதிய மூலோபாயத்திட்டம் முடங்கி, யென் நாணயத்தின் பெறுமதியைச் செயற்கையாக (?) இறக்கிக்கொண்டிருக்கும் – ஆசியாக் QE ( quantitative easing ) இன் முதன்மையாளராகக் கருதப்படும் ஜப்பானின் மீள்வருகை இலங்கையில் சாத்தியப்படுமா என்பது பற்றி பேசலாம்.

manno
அதுமட்டுமல்ல, கிழக்கு நோக்கிய கொள்கையில் ( Look East Policy ) வியட்நாமோடும் ஜப்பானோடும் சேர்ந்து தென்சீனக் கடலில் இந்தியா நடாத்தும் ‘சீனத்தடுப்பு அரங்க நிகழ்வு’, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மாலைதீவோடு இணைந்து நிகழக்கூடிய வாய்ப்பு குறித்தும் ஆராயலாம்.

8ஆம் திகதியன்று நடைபெறவுள்ள தேர்தல் குறித்து இப்போது பார்ப்போம்.

பொதுவாகவே, அன்றாட அரசியல் நிகழ்வு குறித்து அதிக அக்கறை காட்டி, எதிர்கால வேலைத்திட்டமற்றுச் செயலாற்றும் கட்சிகள் தொடர்பாகத்தான் எப்போதும் கவனம் செலுத்தப்படுகிறது. மனச்சாட்சி, புறக்கணிப்பு போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தும் கட்சிகளின் நிலையும் இதுதான்.

இலங்கையைப் பொறுத்தவரை, ஒரு கட்சி அரசியல் நடைபெறுவது போல் தெரிகிறது. அதாவது பிரதான வேட்பாளர்கள் இருவரும் ஒரு கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள். இங்கு குடும்பம் இரண்டாகப் பிளந்து அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதெனலாம். அப்பிளவினுள் மாதுளை முத்துக்களையும், பலாபலச்சுளைகளையும் சில அறிஞர்கள் தேடுகின்றார்கள்.

ஒருபக்கம், வேட்பாளரின் குடும்பமும் சில தனிப்பட்ட ஆதரவாளர்களும், எதிர்வீட்டு செயலாளரும், சேனாக்களும் களத்தில் நிற்கின்றார்கள். அத்தோடு சிறுபான்மை இனக்கட்சிகளோடு இணைந்து நாட்டைப்பிரிக்க மைத்திரி அணி திட்டம் போடுகிறதென பேரினவாதப் போர்வாள்கள் கூச்சலிடுகின்றன.

மறுபக்கம், குடும்ப போர்த்தளபதியும், ஓய்வுபெற்ற முன்னாள் குடும்பத்தலைவியும், எதிர்வீட்டுத் தலைவரும், நேற்றுவரை அரைமந்திரி – முழுமந்திரியாக இருந்தவர்களும், குடும்பம் உடையமுன் வீட்டுக்குள் மட்டுமல்ல ஊர் பூராகவும் இனவாத தூபம் போட்ட உறுமயக் காவிகளும் சேர்ந்திருக்கிறார்கள். போர்க்குற்ற விசாரணையை மகிந்த மீதோ அல்லது இராணுவத்தின் மீதோ எவர் நடாத்த முன்வந்தாலும், அதனை எக்காரணம் கொண்டும் அனுமதியோம் என சவால் விடுத்துள்ளது இந்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது தரப்பாக இடதுசாரி அணியொன்று போட்டிக்களத்தில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு போட்டியிடும் அவ்வணிக்கு தமிழ் கட்சிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. இந்தநிலையில்,பெருந்தேசியஇனவாதக் கட்சிகளிடமிருந்து இவ்வணிக்கு ஆதரவு கிடைக்குமென்பது பகலில் கனவு காண்பதற்கு ஒப்பாகும்.

இங்கு போட்டி என்னவென்றால், 50 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக யார் வாக்கினைப் பெறுவது என்பதுதான். அதாவது தேர்தல் ஆணையாளரைப் பொறுத்தவரை, வெற்றிமாலை சூட தசம் ஒருவீதம் கூடுதலாக இருந்தாலே போதும். ஏனெனில் வெகுஜன மக்களின் சனநாயகமானது, தசவீதத்தில் தங்கியிருக்கும் அரசியல் கட்டமைப்பினைக் கொண்ட சனம்-நாயகம் நாடு இது.

அதேவேளை தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக, தசவீதங்களை நிரப்பும் மென்சக்தியாகவோ அல்லது குறுஞ்சக்தியாகவோ இருக்குமென சில தமிழ் அரசியல் தலைவர்கள் நம்புகிறார்கள்.

இத் தேர்தல் குறித்து தமிழ் பேசும் மக்களிடம் இரண்டுபட்ட நிலை கிடையாது. போட்டியிடும் 19 பேரில் எவர் வந்தாலும் நிலைமை மாறாது என்பதுதான் தமிழ் மக்களின் சலிப்பான முடிவு. மகிந்த ஆட்சியதிகாரம் அகற்றப்பட வேண்டுமென்கிற உள்ளார்ந்த விருப்பு, அதன் 10 வருடகால ஆட்சி மீதான வெறுப்பு இவர்களிடம் நிறைந்து காணப்படுகிறது. அதேவேளை எதிரணியில் உள்ள மனோகணேசனைத் தவிர, வேறெவரையும் நம்பக்கூடிய நிலையிலும் தமிழ் மக்கள் இல்லை எனலாம். புரையோடிப்போயிருக்கும் தங்களின் அவல வாழ்வு குறித்து, சிறிசேனாவின் தேர்தல் அறிக்கை சிறிதளவிலாவது பேசுமென எதிர்பார்த்த சிலருக்கு ஏமாற்றமே எஞ்சியது.

வடக்கில் மாகாணசபை நிறுவப்பட்டால் நல்லிணக்கம் வருமென்று எதிர்பார்த்த அதே வெளிச் சக்திகள், தற்போது ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டால் இலங்கை முழுக்க சமாதான சகவாழ்வு, நல்லிணக்கமெல்லாம் மீண்டும் நிலைநாட்டப்படுமென்று எம்மை நம்ப வைக்க முயற்சிப்பதுதான் வேடிக்கையான கவலைதரும் விடயமாக இருக்கிறது.

அதேவேளை ஐ.நா.வின் விசாரணைக்கு மகிந்த அரசு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடையினை அமெரிக்கா தலைமையிலான மேற்கு அணி கொண்டுவருமென இப்போதும் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சே தேர்தலில் தோல்வியுற்று, இன்னும் இரண்டு வருடத்திற்கு நானே ஆட்சியில் இருப்பேனென அடம்பிடித்தால் அல்லது சனாதிபதி -இராணுவ கூட்டு ஆட்சி அமைக்கப்பட்டால் மட்டுமே, பொருண்மிய நெருக்கடியை மேற்குலகம் பிரயோகிக்க ஆரம்பிக்கும்.

மேற்குலகோ அல்லது இந்தியாவோ, ‘சிறுபான்மையாக வாழும் தேசிய இனங்களுக்குரிய உரிமையை நீங்கள் வழங்காவிட்டால் இருதரப்பு பொருளாதார உறவினை நிறுத்துவோம்’ என திபெத் விவகாரத்தை முன்வைத்து சீனாவிடமும் சொல்வதில்லை, தேசிய இனங்களைப் பரவலாக ஒடுக்கும் மியன்மாரையும் (பர்மா) அச்சுறுத்துவதில்லை. மாறாக, பொருளாதார உறவினை மேம்படுத்தும்வண்ணம், நட்புப் பயணங்களையே அந்நாட்டுத் தலைவர்கள் அதிகமாக மேற்கொள்கின்றார்கள்.

இந்த யதார்த்தைப்புரிந்து கொள்ளாமல், பூகோள அரசியல் எமக்குச் சாதகமாக மாறுகிறதென மேம்போக்காகச் சொல்லிவிட்டுச் செல்ல முடியாது. ஆசியப்பிராந்தியத்தில் இவ்வல்லரசுகள் மேற்கொள்ளும் காய்நகர்த்தல்கள், எமக்கும் பொருந்திவரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ஒரு பிராந்தியத்தை உள்ளடக்கியதாகவே, இவர்களின் அரசியல்- இராணுவ மூலோபாயத் திட்டம் வகுக்கப்படும். தனியே இலங்கையை மட்டும் வைத்து இவை வகுக்கப்பட மாட்டாது.

சர்வதேச விசாரணைக்கு எதிராக இராஜதந்திரப்போரினை நடாத்தப்போவதாக, வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார் மைத்திரி அணியில் இருக்கும் ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க என்கிற செய்தி வருகிறது.

‘தன்னைத்தூக்கிலிட மேற்குலகம் முயற்சி செய்கிறது’ என்ற மகிந்தாவின் பரப்புரையை பலமிழக்கச் செய்ய, ஜாதிக ஹெல உறுமயவை ரணில்- சந்திக்கா- மைத்திரி கூட்டு களமிறக்கி விட்டுள்ளது போலிருக்கிறது.

இந்திய அரசின் சுப்பிரமணிய சுவாமி பாத்திரத்தை, மைத்திரி அணியின் சம்பிக்க சிரமேற்கொண்டு செயற்படுகின்றார். அங்கு புலி எதிர்ப்பு. இங்கு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு. பெரிய வேறுபாடில்லை.

maithee
இந்த இலட்சணத்தில் நல்லாட்சியும், நல்லிணக்கமும் உருவாக ஆட்சிமாற்றம் ஒன்றே பொருத்தமானது என்கிற முடிவிற்கு வெளிச்சக்திகள் வந்திருக்கின்றன. தேர்தல் ஒழுங்காக நடக்குமா? இராணுவ அதிகாரம் நெருக்கடிகளை உருவாக்கமா? என்பது குறித்தே அனைத்துலக நெருக்கடி குழு (ICG) போன்றவை கவலைப்படுகின்றன. ஆட்சி மாற்றத்திற்கு தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலேயே அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

தமிழர் தரப்பு ஆதரவு வழங்கினாலோ அல்லது அவர்களின் ஆதரவினைப் பகிரங்கமாக கோரினாலோ, எதிர்த்தரப்பிற்கு சிங்கள ஜனதாவ ( மக்கள்) சாய்ந்துவிடும் என்கிற பயம் இரு தரப்பிற்கும் இருக்கிறது. நான்கு சுவர்களுக்குள் இரகசியமாகப் பேசி ஆதரவினைப் பெற்றாலும், தமிழ் கட்சிகள் பகிரங்கமாக அந்த ஆதரவினைத் தெரிவித்து விடக்கூடாது என்பதிலும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.

இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவினை பகிரங்கமாகவே எதிரணிக் கூட்டுக்கு அறிவித்து விட்டது. அறிவித்தல் வெளியானவுடன் கிழக்கெங்கும் முஸ்லிம் மக்கள் சீனவெடி(?) கொளுத்தி தமது விருப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள்.பசிலோடு உறவு வைத்திருந்தோர் முகங்கள் மட்டும் வாடியிருந்ததை ஒளிப்படங்கள் வெளிப்படுத்தின.

இவைதவிர, மைத்திரி வென்றால் சிலவேளைகளில், முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. என்பன கூட்டமைப்போடு இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியைப் பிடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பும் சிலரிடம் உள்ளது.

அதேவேளை சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவம் ஆக்கிரமித்த நிலங்களை மீளப்பெறுதல், சொந்த இடத்தில் மீள்குடியேற்றம், இன அழிப்பு தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் நிரந்தரமான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழர் தரப்பு பேசமுற்படும்போது, ஆளையாள் கைநீட்டிக்காட்டித் தப்பித்துச் செல்லும் விளையாட்டில், சந்திரிக்கா- இரணில் தரப்பு ஈடுபடுவதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

ஈழத்தமிழினத்தின் அரசியல் விவகாரம் குறித்து பகிரங்கமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பேச, இந்த எதிரணி பின்னடிக்கும்போது, எவ்வாறு இனங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமென்று புரியவில்லை.
அந்த அளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில், பெருந்தேசிய இனவாதத்தினை பெரும் விருட்சமாக பலயாக்களும், உறுமயக்களும் வளர்த்துள்ளன.

சர்வதேசத்தின் ஆதரவு தேவையாயின், அவர்களின் ஆட்சி மாற்ற விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருப்பது போல் தெரிகிறது.

அதற்கு ஏற்றவாறு கூட்டமைப்பின் தலைமை, மைத்திரிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரச்சாரத்தினை முன்னெடுக்க தலைவர்களும் தளபதிகளும் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டதாக களச் செய்திகள் கூறுகின்றன. சம்பந்தர் அவர்களின் நிலைப்பாட்டினை ஆதரித்து உணர்ச்சிக் கவிதைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழர் தரப்பானது, அதிபர் தேர்தலில் ஒரு தரப்பிற்கு ‘நிபந்தனையற்ற’ ஆதரவினை வழங்குவது இதுதான் முதற்தடவை.

இது எவ்வாறு இருப்பினும், சீன சார்பு போய் மேற்குலக சார்பு அரசு அமைக்கப்பட்டாலும், தமிழ் பேசும் இனத்தின் பிரச்சினை தீர்க்கப்படுமா என்கிற சந்தேகம் மட்டும் மாறாமல் இருக்கும்.

– வீரகேசரி