1965இல் இந்தியை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற, மிகப்பெரும் அரசியல் எழுச்சியின் 50ஆம் ஆண்டு வீரவணக்க நாள், சனவரி 25 – 2015 அன்று எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பில், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

சென்னை

சென்னையில், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் தெரிவித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. சனவரி 25 அன்று, காலை 9 மணியளவில், விருகம்பாக்கத்திலுள்ள தழல் ஈகி அரங்கநாதன் நினைவிடத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அதன்பின்னர், இரு சக்கர வாகனங்களில் செஞ்சட்டைத் தோழர்கள் அணிவகுத்துச் சென்று, மூலக்கொத்தளம் பகுதியை அடைந்தனர். அங்கு, தமிழுரிமைக் கூட்டமைப்பின் சார்பில், மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பேரணியில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கேற்றது.
molzi
பேரணியை, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் ஒருங்கிணைத்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ்த் தேச நடுவம் அமைப்பாளர் வழக்கறிஞர் கோ.பாவேந்தன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தலைநகர் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கணபதி, தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலர் தோழர் வேலுமணி, தோழர்கள் இராசேந்திரசோழன், காஞ்சி அமுதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.

த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, வீரவணக்க முழக்கங்களை எழுப்ப, பேரணியாகச் சென்ற தோழர்கள், மூலக்கொத்தளம் இடுகாட்டிலுள்ள மொழிப்போர் ஈகியர் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்றடைந்தனர். அங்கு, மலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் வீரவணக்கம் செய்யப்பட்டது. அதன்பின் அங்கு நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில், பல்வேறு அமைப்புத் தலைவர்கள் உரையாற்றினர்.

நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தோழர் இரா.இளங்குமரன், தோழர் வி.கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், த.இ.மு. சென்னை செயலாளர் தோழர் துரை.முத்துக்குமார், மகளிர் ஆயம் தோழர்கள் ம.இலட்சுமி, இளமதி, புதுமொழி, சத்யா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மொழியுரிமை பேரணி

மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், சென்னை கடற்கரையில், தமிழ் மொழியுரிமைக் கூட்டமைப்பு சார்பில், சனவரி -25 அன்று மாலை வீரவணக்கப் பேரணி நடைபெற்றது. கண்ணகி சிலை அருகில் தொடங்கிய இப்பேரணியை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆழி.செந்தில்நாதன் ஒருங்கிணைத்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் தமிழின கி. வீரலட்சுமி, தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க.குணசேகரன், தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பாளர் தோழர் இராச்குமார் பழனிச்சாமி, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் தோழர் இரா.அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர். பேரணி, திருவள்ளவர் சிலை அருகில் நிறைவுபெற்ற பின், அங்கு மொழிப் போர் ஈகியர் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தஞ்சை – திருச்சி – இரு சக்கர வாகனப் பேரணி

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி – சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில், மொழிப் போர் ஈகியர் படங்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு, வீரவணக்க உரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு நிகழ்வை ஒருங்கிணைத்தார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை, தஞ்சை நகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

பின்னர், தமிழ்த் தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தேவதாசு தலைமையிலான தோழர்கள், செங்கிப்பட்டியிலிருந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து, முழக்கங்கள் எழுப்பியவாறு, திருச்சி சென்றடைந்தனர். திருவெறும்பூரில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் திருச்சி தோழர்கள் இணைந்து கொள்ள, அனைவரும் மொழிப்போர் ஈகியர் கீழப்பழூர் சின்னச்சாமி நினைவிடம் நோக்கி, இரு சக்கர வாகனங்களில் பயணமாயினர்.

திருச்சி

செஞ்சட்டைத் தோழர்களின் இரு சக்கர வாகனப் பேரணி, திருச்சி – உய்யகொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ள, மொழிப் போர் ஈகி கீழப்பழூர் சின்னச்சாமி, நினைவிடத்தில் நிறைவுபெற்றது. அங்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களும், திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், அதன் செயலாளர் திரு. வீ.ந.சோமசுந்தரம் அவர்களும், மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செய்தனர்.

நிகழ்வில், பைந்தமிழ் இயக்கம் புலவர் தமிழ்ஆளன், பாவாணர் தமிழியக்கத் தோழர் தமிழகன், திருக்குறள் கல்வி மையம் திரு. சு. முருகானந்தம், பொறியாளர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி த.தே.பே. செயலாளர் தோழர் மூ.த.கவித்துவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் இராசாரகுநாதன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி. ஆரோக்கியசாமி, குன்றாண்டார் கோயில் ஒன்றியச் செயலானர் தோழர் த.மணிகண்டன், விராலிமலை கிளை சார்பில் தோழர் கருப்பசாமி தலைமையிலான தோழர்கள் என த.தே.பே. தோழர்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

சிதம்பரம் அண்ணாமலை நகரில், மாணவ ஈகி இராசேந்திரன் பெயரால் அமைந்துள்ள சாலையில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருச்சிலைக்கு தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் ஆ.யவனராணி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சிக்கு தமிழ்த் தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன், மூத்த உறுப்பினர்கள் தோழர் சி.ஆறுமுகம், தோழர் மு.முருகவேள், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்ரமணிய சிவா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை செல்லூர் பகுதியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தோழர்கள் கருப்பையா, கதிர்நிலவன், கரிகாலன், மேரி, காமராசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

சாமிமலை

சாமிமலை, கடை வீதியில், மொழிப் போர் ஈகியர் படங்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு, சாமிமலை கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையேற்றார். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் அருள் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் முருகன்குடியில், பேருந்து நிலையம் அருகில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு, ஆசிரியர் பழனிவேலு தலைமையேற்று, ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து, உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், கிளைச் செயலாளர் தோழர் கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தார். திரளான த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

ஒசூர்

ஒசூர் குமரன் நகர் பகுதியில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். த.தே.பே. ஒசூர் செயலாளர் தோழர் கு.செம்பரிதி முன்னிலை வகித்தார். திரளான, த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

இது போல், தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

==============================

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
==============================

பேச: 7667077075, 9047162164
==============================
ஊடகம்: www.kannotam.com
==============================
இணையம்: tamizhdesiyam.com
=============================