தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு அண்டைய மாநிலத்தில் வைத்து விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் கர்நாடக மாநிலச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும், தமிழகத்திற்கும் வரப்போகும் பேரழிவுக்கான சமிக்கைகளே.

ஜெயலலிதா அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரானவர் என்பதே பொருள்.

mahi-modi (2)
1990 களில் தன்னை சந்தித்த ஒரு முக்கிய பிரமுகரிடம் தமிழீழத் தேசியத்தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட ஜெயலலிதா குறித்த தனது கருத்தை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். ‘இந்த அம்மாவுக்கு நாம் என்ன செய்தோம் ஏன் எங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார்’ என பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனால் மாற்றங்கள் தான் வாழ்க்கை, எதிரிக்கும் நண்பனுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்பது நூலிடை தான் அதன் போக்கு எந்த சமயத்திலும் மாற்றமடையலாம். புளொட் என்ற ஆயுதக்குழுவில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டுவந்த மாமனிதர் சிவராம் அவர்களிடம் ஏற்றட்ட மாற்றம் இதற்கு சிறந்த உதாரணம்.

அண்மைக்காலமாக ஜெயலலிதாவில் ஏற்பட்ட மாற்றம் என்பது அவரது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் ஆனால் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான ஆனால் சிறீலங்கா அரசுக்கு எதிரான பல தீர்மானங்களை அவர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருந்தார்.

தமிழ் இனத்தை காப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் பணிபுரிந்தாலே தமிழக அரசியலில் தம்மை நிலைநிறுத்த முடியும் என்ற இனஉணர்வு அங்கு ஏற்பட்டதே அதற்கான காரணம். ஜெயலலிதாவின் இந்த மாற்றம் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அவரை தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க வைத்திருந்தது. மத்தியில் கூட்டணி அரசு அமையுமாக இருந்தால் அதற்கான ஆதரவு ஜெயலலிதாவிடம் தான் இருந்திருக்கும்.

அடுத்த பிரதமர் ஜெயலலிதாவோ? என்ற நிலையில் மோடிக்கு சாவால்விடும் நிலைக்கு அவரை உயர்த்தியதும் தமிழ் மக்களுக்கு சார்ப்பாக, சிங்கள அரசுக்கு எதிராக அவர் செயற்பட்டதுதான்.

ஆனால் மோடி அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் மிகவும் தந்திரமாக காய்நகர்த்துகின்றனர்.

அதாவது இனத்துவேசத்தை பேசியதற்காக ஹவாட் பல்கலைக்கழகத்தில் இருந்த கலைக்கப்பட்ட எப்போதுமே தமிழ் மக்களுக்கு எதிராக சிந்தித்து செயற்படும் சுப்பிரமணியன்சாமியை சிறீலங்காவுக்கு அனுப்பி தமிழ் விவகாரங்களில் தந்திரமாக அவரை நுளைத்துள்ளது பாரதிய ஜனதாக் கட்சி.

தனக்கும் சாமிக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு தெரிவித்துவரும்போதும் அவரின் பின்னனியில் இருந்து செயற்படுவது இந்திய மத்திய அரசுதான்.
அதன் பின்னர் தான் ஜெயலலிதா மீதான தனது இரண்டாவது கட்டப் பாச்சலை ஆரம்பித்துள்ளது மோடி அரசு. ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததன் நோக்கம் அவரின் அரசியல் வாழ்வை அழிப்பது, குறிப்பாக அ.தி.மு.காவின் அரசியல் அடித்தளத்தை அழிப்பது தான் முக்கிய நோக்கம்.

அதுதவிர அவரை கர்நாடக சிறையில் அடைத்ததன் நோக்கம் தமிழ் மக்களின் தன்மானத்தை சீண்டுவதன் மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை குலைத்து ஆட்சியை கலைப்பதே.

jaya23ஜெயலலிதா யாரக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அவர் தமிழக மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். தமிழகத்தின் முதல்வர் எனவே அவரை வேறு ஒரு மாநிலத்தின் சிறையில் அடைப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட அவமானமாகும்.

இரண்டு வடஇந்திய மீனவர்களை சுட்ட இத்தாலிய நாட்டவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடைவடிக்கையை நாம் அறிவோம், ஆனால் 500 இற்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்த சிறீலங்கா அரசு மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள எந்த ஒரு இந்திய மத்திய அரசும் முன்வந்ததில்லை.
இது ஒரு சிறு உதாரணமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இந்திய மத்திய அரசு மேற்கொண்டுவரும் வன்முறைகளும், இனப்புறக்கணிப்புக்களும்,

ஒடுக்குமுறைகளும் ஏராளம். எனினும் மோடி அரசின் செயற்பாடுகள் என்பது தமிழகத்தில் அடுத்த ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்வை உருவாக்கி முற்று முழுதாக தமிழ்த் தேசிய உணர்வை அழிக்கும் முயற்சியின் ஆரம்பமாகவே பார்க்கப்படவேண்டும்.

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சாவை விட மிக மோசமானவர் தான் மோடி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவரை முறியடிக்கும் முகமாகவே எமது காய்நகர்த்தல்கள் இருத்தல் வேண்டும்.

modi-rajani
ஜெயலலிதா சிறை சென்ற பின்னர், தமிழக அரசை கலைப்பதற்கு சாமி மேற்கொள்ளும் முயற்சிகளும், நடிகர் ரஜனியை அரசியலுக்கு இழுத்து தமிழக மக்களின் தலைவிதியை கன்னட இனத்தின் கைகளில் கொடுப்பதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மேற்கொள்ளும் முயற்சிகளும், கையில் துடைப்பக்கட்டையுடன் கமலஹாசனை மோடி அழைக்கும் தந்திரங்களையும் நாம் சரிவர புரிந்துகொள்ளவும், உள்வாங்கிக்கொள்ளவும் வேண்டும்.

நாம் தோல்வி அடைந்தோமோ அல்லது வெற்றியடைந்தோமோ என்பதில் எமது அடுத்த கட்ட நகர்வு தங்கியிருப்பதில்லை. கசப்பாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்வதில் தான் எமது அடுத்த கட்ட நடவடிக்கையின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியை பொறுத்தவரையில் சிறுபான்மை இனங்கள் மீது வன்முறைகளை பிரயோகிப்பதிலும், ஒடுக்குவதிலும் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவை விட மோசமானவர். குஜராத்தில் இடம்பெற்ற இனக்கலவரம் அதற்கு சிறந்த உதாரணம்.

ஆனால் தற்போது அவரின் பார்வை பதிந்துள்ளது, முஸ்லீம் மக்கள் மீதோ அல்லது பாகிஸ்த்தான் மீதோ அல்ல, தமிழ் மக்கள் மீது தான். அதன் வெளிப்பாடே துள்ளித்திரியும் சாமியும், வேற்று மாநிலத்தில் வைத்து தமிழக முதல்வர் மீது மேற்கொள்ளப்பட்ட அவமதிப்புமாகும்.

ஜெயலலிதா மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை களைந்து பார்ப்போமானால் மோடி அரசின் நகர்வுகளை புரிந்துகொள்ளமுடியும்.
எனவே தமிழகத்தில் இருந்து இந்திய காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிந்ததுபோல பாரதிய ஜனதாக்கட்சியும் தமிழகத்தில் இருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவேண்டும்.

எனவே நாம் செய்யவேண்டிய முக்கிய கடமைகள் பல உண்டு, முதலில் தமிழகத்தில் இருந்து பா.ஜ.கவை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும்.

அதற்கு அடுத்ததாக தமிழினக்கட்சிகளை ஒருங்கிணைத்து, மாணவர்களை உள்வாங்கி தமிழத்தேசியத்தை பலப்படுத்துவதுடன், அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

அதனையும் மீறி தமிழினம் இந்திய மத்திய அரசின் புறக்கணிப்புக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகுமானால் ஸ்கொட்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை போன்றதொரு நகர்வுக்கான சட்ட நடைமுறை இந்திய அரசியல் அமைப்பில் உள்ளதா என்பதை ஆராயவேண்டும். இல்லை எனில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக அதற்கான நகர்வை மேற்கொள்ள முடியும்.

ஏனெனில் ஸ்பெயின் நாட்டின் மாநிலமான கற்றலோனியா தனது சுதந்திரப்பிரகடனம் தொடர்பில் சிந்தித்து வருகின்றது. கடந்த வாரம் வெளிவந்த இந்த செய்திகள் தொடர்பில் ஸ்பெயின் அதிபர் கடும் சினமடைந்ததுடன், அதனை தடுப்பதற்கு தனது நாட்டில் உள்ள சட்டங்களை பயன்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மொழி உட்பட பல வழிகளிலும் 1938 ஆம் ஆண்டில் இருந்து புறக்கணிப்புக்கும், அடக்குமுறைக்குள் உட்பட்டுவரும் கற்றலோனியா மாநில மக்கள் சுதந்திரப்பிரகடன் தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை நினைவில் கொள்ளுங்கள், இனஅழிப்பில் இருந்து தப்புவதற்கும், இனத்தை காப்பதற்குமான நடைவடிக்கைக்கு தயாராகுங்கள்.

ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.