மோடியின் பணமதிப்பு இழப்பின் உள்நோக்கம் என்ன? – இதயச்சந்திரன்

0
703

மக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான ஒரு முக்கிய காகிதம் ‘பணம்’.

 

iciciஇதில் நாணயத் தாளைவிட, மின்னணு பணப்பரிமாற்றமே உலகளவில் அதிகம்.

 

இந்தியாவில், நவம்பர் 9 இல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ‘ பண மதிப்பு நீக்கம்’ ( Demonetisation ) பல கோடி இந்திய மக்களின் இயல்பு வாழ்வினைப் புரட்டிப் போட்டுள்ளது.

 

பணத்தைக் கக்கும் ATM இயந்திரங்களின் முன்னால், நீண்ட வரிசையில் மக்கள்.

 

500, 1000 ரூபா நோட்டுக்கள் மதிப்பிழந்து போனதால், அதனைப் பிரதியீடு செய்ய 2000 ரூபா நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனை (2000 ரூபா) மாற்றுவதற்கு, 20 நூறு ரூபா நோட்டுக்கள் தேவை. இதனால் மக்கள் படும் சிரமம் சொல்லி மாளாது.

 

கறுப்புப் பணத்தை, கள்ள நோட்டை, தீவிரவாதத்தை, இலஞ்சத்தை ஒழிப்பதற்கு இந்தப் பண மதிப்பு நீக்கம் அவசியம் என்பது பிரதமர் மோடி தரப்பு வாதம்.

 

இவைதவிர இன்னுமொரு முக்கிய காரணியும் இருக்கிறது.

 

அதுகுறித்தே, இனிப் பேசப்போகிறோம்.

 

இருப்பினும் சில அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே மோடி அரசின் பண மதிப்பு நீக்க விவகாரத்தை ஓரளவாவது விளங்கிக் கொள்ளலாம்.

 

இந்திய ரிசர்வ் வங்கி, திறைசேரி (Treasury ), மற்றும் ஏனைய வங்கிகள் யாவும் அரசோடு தொடர்புடையவை.
நாணய நிதிக்கொள்கை (Monetary)மத்திய ரிசர்வ் வங்கியாலும், அரசிறைக் கொள்கை (Fiscal ) அரசாங்கத்தின் திறைசேரியாலும் கையாளப்படுகின்றன.

 

அரசிற்கும் திறைசேரிக்குமிடையில் நடைபெறும் பரிவர்த்தனையில், திறைசேரியின் முறிகளும் (Bond ) அச்சடிக்கப்பட்ட நாணயத்தாள்களுடன் பெருமளவு மின்னணு நாணயமும் இடம்பெறுகின்றன.

 

வங்கிப் பரிவர்த்தனை ஊடாகவே ,திறைசேரிக்கான வரி மற்றும் ஏனைய வருவாய்கள் (revenue ) வந்தடைகின்றன.
ஆனால் வங்கிப் பரிவர்த்தனைக்கு அப்பால் நிகழும் நேரடிப் பணப்பரிவர்த்தனை தொடர்பான கணக்குகள், அரசைச் சென்றடைவதில்லை என்பதுதான் வலதுசாரி சிந்தனையாளர்களின் கவலை.

 

ஆனாலும் மக்களிடம் இருக்கும் திரவப் பணமெல்லாம் (liquid money ) கறுப்புப் பணமல்ல என்கிற வாதத்தை முன்வைக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

 

வங்கியூடாக நடைபெறாத எந்த வணிக பரிவர்தனையும் (transaction) , சட்டபூர்வமற்றவை என்று குறிப்பிட முடியுமா?.
இந்தியாவிலுள்ள 6 இலட்சம் கிராமங்களில், வங்கிகளோடு தொடர்பாடல்களைப் பேணும் மக்கள் எத்தனை சதவிகிதம் என்பதை வலதுசாரிப் பொருளியலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

பிரிக்ஸ் கூட்டமைப்பில், சீனாவின் ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியில் (AIIB ), புதிய முதலீட்டு வங்கியில் இந்திய அங்கம் வகித்தாலும், சொந்த நாட்டில் பெரும் ஏகபோக வங்கிகளை உருவாக்கமுடியாமல் இருக்கிறதே என்கிற சலிப்பு, மோடி அரசிற்கும், அதனை ஆதரிக்கும் முதலாளித்துவ வலதுசாரி பொருளியலாளர்களுக்கும் இருக்கிறது.

 

இது குறித்த பல தொலைக்காட்சி விவாதங்களை பார்க்கக் கூடியதாவுள்ளது.

 

ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் தாம் கலந்து கொள்ளும் விவாதங்களில், வங்கி உருவாக்கம், Fractional Reserve Banking, மொத்த உள்ளூர் உற்பத்தி (GDP ), குறித்து பல கருத்துக்களை முன்வைக்கிறார்.

 

வீட்டு விலையுயர்விற்கும், தங்கத்தின் விலையேற்றத்திற்கும் வங்கியோடு தொடர்பில்லாமல் வெளியே நடக்கும் பணப்புழக்கமே முக்கிய காரணி என்கிறார் பொருளியல் நிபுணர் குருமூர்த்தி.

 

சென்ற ஆண்டு உலகச் சந்தையில் 1500 டொலர்களைத் தொட்ட தங்கத்தின் விலை, தற்போது 1165 டொலர்களாக ( இதை எழுதும் பொழுது) வீழ்ச்சியுற்றதற்கும், பணம் கொடுத்து தங்கம் வாங்குவதுதான் முக்கிய காரணியா?.

 

எனது பங்குச் சந்தை வர்த்தகம் பற்றியதான புரிதலின் அடிப்படையில், பொதுவாகவே பங்குச் சந்தை வீழ்ச்சியுறும் போது தங்கத்தின் விலை எகிறும்.

 

அடுத்ததாக கோயம்பேடு போன்ற மத்திய காய்கறிச் சந்தைகளில் நடைபெறும் நாணயத்தாள் பரிவர்த்தனை பற்றிக் குறிப்பிடும் குருமூர்த்தி அவர்கள், நக்சல்பாரிகள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களில் ஐம்பது தொடக்கம் அறுபதினாயிரம் கோடி ரூபாய் வரை, வங்கிக்கு வராத நாணயப் பொருளாதாரம் கோலோச்சுவதாகக் குறிப்பிடுகின்றார்.

 

ஆனால் கமிஷன் மூலமாக பெறப்பட்ட பல இலட்சம் கோடிக்கணக்கான இலஞ்சப்பணம் அல்லது கறுப்புப்பணம், ஹவாலா பொறிமுறை ஊடாகவும், மின்னியல் பரிமாற்றம் மூலமும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள விவகாரம் குறித்து பேசாமல் இருப்பது விநோதமாகவிருக்கிறது.

 

2017mநோட்டுக்கள் மதிப்பிழப்பின் ஊடாக, நவம்பர் 10 இலிருந்து டிசெம்பர் 29 வரை, 14.92 இலட்சம் கோடி ரூபாய்கள் வங்கிகளில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிக்கின்றன.

 

அதாவது, இனிமேல் நாணயத்தாள் அற்ற (cashless) பொருண்மிய பரிவர்த்தனையை நோக்கிய , குறைந்தளவு கரன்சியைக் (Less Cash )கொண்ட பொறிமுறையை உருவாக்க வேண்டுமாயின், 500, 1000 நோட்டுக்களின் மதிப்பிழப்பு ( செயலற்றதாக்குதல்) அவசியம் என்பதுதான் முதலாளித்துவ சிந்தனையாளர்களின் வாதமாகும்.

 

‘2001 இல் இந்திய மக்களிடையே 10 சதவிகிதமாகவிருந்த பணப்புழக்கம், தற்போது 12 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, வங்கியைச் சார்ந்து இயங்க வேண்டிய பொருளாதார முறைமைக்கு தடைக்கல் ஆக அமைகிறது’ என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
வங்கிசாரா பரிவர்த்தனைகளை, அடாவடிப் பொருளாதாரம் என்று அழுத்தமாகக் கூறும் காரணி என்ன?.

 

50 நாட்களில் நாணயப் பரிவர்த்தனையை நிறுத்திவிட முடியுமா?.

 

இப்போது வங்கிகளில் குவிந்துள்ள பணத்தினை மீள்சுழற்சிக்கு விட வேண்டும். Fractional Reserve பொறிமுறையின் பிரகாரம், பணம் பெருகும்.

 

அதனைக் கடனாகப் பெறுவதற்கு, மக்களிடம் வாங்குதிறன் இருக்க வேண்டும். ஆகவே ரிசெர்வ் வங்கியானது (Repo Rate )வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும்.

 

இனி அரச வட்டிவீதம் குறையும்.

 

இந்த பணமதிப்பிழப்பு, வட்டிவிகிதக் குறைப்பு போன்ற அவசர சிகிச்சைக்கான முக்கிய காரணிகள் என்ன ? என்பது குறித்து பார்க்க வேண்டும்.

 

ஏகாதிபத்தியத்தை நோக்கிய முதலாளித்துவத்தின் உட்பரிமாணங்கள் குறித்து, தோழர்.லெனின் முன்வைக்கும் ஐந்து விளக்கங்களில் 3 விடயங்களை இங்கு முன்வைப்பது பொருத்தமாகவிருக்குமென எண்ணுகிறேன்.

 

1. நிதிமூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுக்களின் மூலதனத்துடன் ஒன்று கலந்துவிட்ட ஒருசில மிகப்பெரிய ஏகபோக வங்கிகளின் ‘வங்கி மூலதனம்’ .

 

2. வங்கி மூலதனம் தொழிற்துறை மூலதனத்தோடு ஒன்று கலத்தலும், இந்த நிதிமூலதனத்தின் அடிப்படையில் ‘நிதி ஆதிக்க’ கும்பல் உருவாதல்.

 

3. சர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்.
ஆகவே பணமதிப்பிழப்பு குறித்தான விரிவான பார்வையைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை ஆழமாக ஆய்வு செய்வது அவசியம்.

 

வல்லரசுக் கனவிலிருக்கும் இந்திய அதிகார வர்க்கத்திற்கு, அதன் கார்பொரேட் தொழிலதிபர்களுக்கு, மிகப்பெரிய ஏகபோக வங்கிகளின் உருவாக்கம் அவசியமாகிறது.

 

இதனால், வங்கி மூலதனத் திரட்சிக்கு இடையூறாகவிருக்கும் சமாந்தர (parallel )பணப்பரிவர்த்தனை பொருளாதார முறைமையினை, முடக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

 

இதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த மதிப்பிழப்பு.

 

இதன் விரிவான பக்கங்களை உரையாடல் மூலம் முன்வைக்கலாமென எண்ணுகிறேன்.

 

-08-01-2017
வீரகேசரி