மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும்நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு ஜூன்- 9ம் திகதி செவ்வாய்க்கிழமை லண்டனில் தொடங்குகின்றது.

இந்த நான்கு நாள் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

isai-3
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்புத் தூதரான ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

இந்த மாநாட்டில் இலங்கை கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தின் துணைத் தூதர் நெவில் டி சில்வா பிபிசியிடம் கூறினார்.

மோதல்களின்போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை அங்கீகரிக்கும் நாடுகளை மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பிதழ் விடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

‘நாங்கள் மாநாட்டில் பங்குபற்ற விரும்பினோம். ஆனால், பிரகடனத்தை அங்கீகரிக்காத நிலையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது’ என்றார் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் துணைத்தூதர் நெவில் டி சில்வா.

மோதல்களின்போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை இலங்கை மட்டுமன்றி, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

‘மாநாட்டின் பிரகடனத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லை’இந்தப் பிரகடனத்தை இலங்கை ஏன் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தையும் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

இலங்கையிலுள்ள அரசாங்க அதிகாரிகளிடமிருந்து இதற்கான விளக்கத்தைப் பெற பிபிசி எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

லண்டன் எக்ஸல் மண்டபத்தில் ஜூன் 10ம் திகதி முதல் 13-ம் திகதி வரையான காலத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாடே, மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான மிகப்பெரிய மாநாடாக அமையவுள்ளது.

மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐநா பிரகடனத்தை அங்கீகரித்துள்ள எல்லா அரசாங்கங்களும் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் இராணுவ தொழிற்சார் நிபுணர்களும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டின் பிரகடனத்தின் மூலம் அளிக்கப்படுகின்ற உறுதிமொழிகளை பெண்கள், சிறார்கள் மற்றும் ஆண்களை பாலியல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளாக மாற்றுவதே மாநாட்டின் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி.