மனிதகுலத்தின் ஒரு பகுதி சில மணித்துளி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட கொடிய தேசத்தை நோக்கி அவர்களை அனுப்பிவைக்கப் போகிறார்களாம். மனிதகுலத்தை இருளின் விழிம்பிற்குள் இருத்திவைத்துவிட்டு உலகத்தின் அழகிய மூலை ஒன்றில் மரண ஓலங்களுக்கு மத்தியில் மனிதர்களைக் கொசுக்கள் போன்று கொன்றுபோட்ட அரசிடம் அப்பாவிகளை ஒப்படைக்கப் போகிறார்களாம்.

மனித குலத்தைப் பாதுகாப்பதற்கு என்றே உலகத்தின் ஒவ்வோரு மனிதனின் உழைப்பிலும் மில்லியன்களைச் சுரண்டி உருவான நூற்றுக்கணக்கான உரிமை அமைப்புக்கள் அனைத்தும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க ஆயிரமாயிரமாய் மனித உயிர்கள் மாமிசங்களாக்கப்பட்ட தேசத்தை நோக்கி தப்பியவந்தவர்களின் பயணம் தொடரப்போகிறது…

australia-refugee1
குழந்தைகளும், முதியோரும், சிசுக்களைத் தாங்கிய பெண்களும், நெஞ்சுரம் மிக்க நாளைய சந்ததியும் பிணக் குவியல்களாக அழித்துப் போடப்பட்ட எல்லைக்குள் அவர்களின் பயணம் தொடரப்போகிறது…

அவுஸ்திரேலிய அரசு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணாக ஈழத் தமிழ் அகதிகளை தனது எல்லைப் பகுதியைத் தாண்டவிடாமல் இரவும் பகலும் அலைமோதும் கடலின் நடுவே தடுத்து வைத்திருக்கிறது. ஆங்காங்கே ஈனக் குரல்களில் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மனிதாபிமானிகள் குரல்கொடுக்கிறார்கள்.

அகதிகளைப் பாதுகாப்பதற்கு என்று உலக நாடுகள் ஒன்றுகூடி நியமித்த நிறுவனம் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையம்(UNHCR) . அவர்களைத் தொடர்புகொண்டால் அகதிகளைக் காக்குமாறு தங்களிடம் யாரும் உதவி கோரவில்லை என்று திமிரோடு சொல்கிறார்கள்.

இந்த நிலையில் அகதிகளுக்காகக் குரலெழுப்ப யாரும் இல்லை என்ற துணிவோடு அரசுகளும் அகதிகள் நிறுவனனங்களும் தாம் விரும்பிய அனைத்தையும் செய்து முடிக்கின்றன.

உலகத்தின் மற்றோர் மூலையில் அகதிகளுக்கான குரல் இதோ ஒலிக்கிறது என்பதைக் கூற தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு எதிர்வரும் திங்கள் 07.07.2014 அன்று லண்டனில் அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக அமைந்திருக்கும் UNHCR இடம் அவுஸ்திரேலிய தமிழ் அகதிகளைப் பாதுகாக்குமாறு கோரி அனுப்பப்பட்ட மனுவிற்குப் பதில் தருமாறு ஆர்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும்.

இனக்கொலை அரசை நோக்கி அப்பாவி அகதிகளைத் திருப்பியனுப்புவதை நிறுத்த அணிதிரள்வோம்.

Protest on Monday the 7th of July 2014 @4PM in front of Australian high commission and UNHCR which is next to it. Australia House, Strand, London WC2B 4LA, Nearest Tube Temple. Contact: 020 3752 3889

03.07.2014