யதார்த்தத்திற்கு புறம்பான வாதங்களும் பிரதிவாதங்களும்..தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த புலம்பெயர் மக்களுக்கு ஒரு அறைகூவல்

0
607

hero-k89அண்மையில் உங்கள் இணையத்தில் வெளியிடப்பட்ட ததேமமு மற்றும் நிலாந்தன் தொடர்பான கண்டனங்களை பார்த்து எம்மால் சிரிக்கத்தான் முடிந்தது. பொதுவாகவே களச்சூழலின் யதார்த்தம் குறித்த புரிதலில்லாத புலம்பெயர் ஊடகங்களின், செயற்பாட்டாளர்களின் மாயத்தோற்றத்தை உங்கள் பதிவுகள் அப்படியே பிரதிபலித்தன என்றால் அது மிகையல்ல.

கள நிலவரம் வேறு தள (அதாவது இணையம் மற்றும் புலம்பெயர் ஊடக மனநிலை) நிலவரம் வேறு என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லை.

முதலில் நிலாந்தன். அவர் யார் என்று சாதாரண மக்களுக்கு தெரியாது. சாதாரண மக்கள் புரிவது போல் அவர் எழுதுவதும் கிடையாது. எனவே அரசியல் மற்றும் ஊடக மட்டங்களில் அவரை ஓரளவிற்கு தெரியும். அவர் நேரத்திற்கு சூழலுக்கு ஏற்றதுபோல் நிறம் மாறக்கூடியவர் என்பது அரசியல்- ஊடக மட்டங்களில் எல்லோருக்குமே தெரியும். “காகம் கறுப்பு” என்று நீங்கள் பக்கம் பக்கமாக எழுதத்தேவையில்லை. அது கறுப்பு என்று பார்க்கும்போதே தெரியும். நிலாந்தன் அந்த வகை.

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி ஒருவர் மிக நுட்பமாக அரசியல் பொதிந்த அர்த்தத்துடன் நிலாந்தன் குறித்து கூறியது இது “சகல கலா வல்லவன்! வெட்டி ஓடுதல் உட்பட” இதுதான் நிலாந்தன்.

நாளை இந்தியப்படை வந்தாலோ, ஐநா படை வந்தாலோ அங்கும் நிலாந்தன் முகாமடித்திருப்பதை காணலாம். எனவே அவரை அம்பலப்படுத்த தேவையில்லை. அவரே ஒரு அம்பலம்தான்.

இங்கு தாயகத்தில் நடக்கும் புலியெதிர்ப்பு கூட்டங்கள், சந்திப்புக்கள், இலக்கிய விழாக்கள், புத்தக வெளியீடுகள் எங்கும் அவரை காணலாம். கிட்த்தட்ட மே 18 இற்கு பிறகு ஏதோ வகையில் புலிகளை வசைபாடியோ போராட்டத்தை தாக்கியோ எழுதப்பட்ட நூல்கள் அனைத்திற்கும் நிலாந்தன் முன்னுரை, மதிப்புரை, வெளியீட்டுரை என்று ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருக்கிறார். பூபாலசிங்கம் புத்தகசாலையில் அவை தாராளமாகவும் கிடைக்கிறது. நீங்கள் புலத்தில் இருந்து இதை முன்வைக்கத் தேவையில்லை எமக்கு தெரியும்.

ததேமமு அவருடன் தெரிந்துதான் கூட்டு வைத்திருக்கிறது. ஏனென்றால் அவர்கள் சந்தாப்பவாதிகள்தானே. அதைத்தானே செய்வார்கள்.

அது சரி ததேமமு என்பது யார்? அதுவும் இங்கு பாதிச்சனத்திற்கு தெரியாது. இங்கு ஊடகங்களில் அவர்கள் குறித்து செய்தியோ ஏன் அவர்கள் அறிக்கைகள் கூட பெரும்பாலும் வருவதில்லை. அவர்கள் கூட்டங்கள் நடத்தியதாக ஆர்ப்பாட்டம் நடத்தியாதக வரும் செய்திகளையும் புலம்பெயர் ஊடகங்களை பார்த்துதான் நாம் அறிந்து கொள்ளும் நிலை. இதுவும் புலம்பெயர் ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மிகை பிம்பம்தான். கள யதார்த்தம் வேறு.

மக்கள் ததேமமு ஐ ஆதரிப்பதாக எந்த தகவலும் இல்லை. கூட்டமைப்பை எதிர்க்கும் ஒருசிலரும் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கூட்டமைப்பை உடைப்பதற்காக ததேமமு ஐ ஆதரிக்கும் ஒரு கும்பலும் சேர்ந்து ததேமமு என்ற கட்சிக்கு ஒட்சிசன் வழங்கிக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான். இல்லாவிட்டால் அது எப்போதே இழுத்து மூடப்பட்டிருக்கும். உண்மை அதுதான்.

கள யதார்த்தம் அப்படி இருக்க ஏற்கனவே அம்பலப்பட்டு போன நிலாந்தனையும், நான்கு பேர் கொண்ட குழுவாக சுருங்கி “கட்சி” என்ற பெயரில் சேடம் இழுத்து கொண்டிருக்கும் ஒரு குழுவையும் முன்வைத்து நீங்கள் முன்வைக்கும் அலப்பறைகளை காணச்சகிக்கவில்லை.

கொஞ்சமாவது யதார்த்த நிலைக்கு திரும்புங்கள். விரும்பியோ விரும்பாமலோ நாம் கூட்டமைப்பை அதன் சரி தவறுகளுடன் ஆதரிக்க வேண்டும். இதுதான் தாயக மக்கள் விரும்புவதும் கள யதார்த்தமுமாகும். கூட்டமைப்பு குறித்து ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்து அதை செம்மைப்படுத்துவதுதான் ஒரே வழி.

ததேமமு கூட்டமைப்புக்கு எதிரிக்கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறதே ஒழிய ஒரு மாற்று அரசியல் சக்தியாக தன்னை என்றைக்குமே அடையாளம் காட்டியதில்லை. நீங்கள் கூறும் நிலாந்தன் விவகாரமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. யாருடனாவது கூட்டு சேர்ந்து கூட்டமைப்பை உடைக்க திரிகிறார்களே ஒழிய மக்கள் சார் அரசியலை அவர்கள் செய்யத்தயாரில்லை.

பெரும்பாலான மக்கள் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினார்கள் என்ற கோணத்திலேயே அணுகுகிறார்கள். தவறுகள் தமக்கு இழைக்கிறார்கள் என்று புரிந்தபோதிலும் மக்கள் அதற்கு மாற்றாக வேறு ஒரு அரசியல் கட்சியை ஏற்க தயாரில்லை. கூட்டமைப்பை அதன் சரி தவறுகளுடன் ஆதரிக்கும் மக்கள் உணர்வை தயவு செய்து புலம்பெயர் மக்களும் ஊடகங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பதிவில் கூட்டமைப்பு மற்றும் ததேமமு க்கு மாற்றாக தேர்தல் அரசியலுக்கு அப்பால் ஒரு இயக்கம் என்று ஒரு கதை விட்டிருக்கிறீர்கள். கேட்க நல்லாத்தானிருக்கிறது. அது நியாயமும்கூட ஆனால் இங்கு யதார்த்தம் வேறு. அப்படி ஒரு அமைப்பு தொடங்கப்பட்டால் நாளை அதை பயங்கரவாத முத்திரை குத்தி அடக்கிவிடுவது சிறீலங்கா அரசிற்கு சுலபம்.

எனவே கூட்டமைப்பை அதை அதன் சரி தவறுகளுடன் ஆதரிப்பது குறித்தும் அதை எப்படி நெறிப்படுத்துவது என்பதும் குறித்து சிந்திப்பதுதான் யதார்த்தம் மட்டுமல்ல நேர்மையானதும் கூட. மக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.

தாயகத்திலிருந்து நெடுமாறன்

(இது எமக்கு எதிர்வினையாக வந்தது. கட்டுரையாளரின் விருப்புக்கிணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடுமையான சில வசைச்சொற்கள் நிரம்பியுள்ளதால் சில பகுதிகளை நீக்கி வெளியிடுகிறோம். நன்றி )