யப்பானின் கையை மீறிப்போன பக்குசீமா

0
647

Japan-steps-in-to-Fukushima-disasterஎந்தவொரு சக்தியையும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்த முடியும், அதற்கு மிகவும் பொருத்தமானது அணுசக்தியே. திணிவை சக்தியாக மாற்ற முடியும் என அணுவிஞ்ஞானி அயன்ஸ்ரீன் தெரிவித்தபோது அதனை முதன் முதலாக தான் தேடிவந்த மிகச்சிறந்த ஆயுதத்திற்கு பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.

அதன் விளைவுகளை நாம் ஹிரோசிமாக மற்றும் நாகசாகியின் அழிவுகளில் கண்டோம். அதன் பின்னர் அணுசக்தியை மின்சார உற்பத்திக்கு உலகம் பயன்படுத்திக் கொண்டாலும், அதனைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுதம் தொடர்பில் உலகம் பல போர்களை சந்தித்து வருகின்றது.

எனினும் அணுசக்தி மின்சாரத்திற்கு பயன்படுத்தும் நடவடிக்கைகளிலும் உலகம் கடும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றது. 2011 ஆம் ஆண்டு யப்பானின் பக்குசீமா பகுதியில் இடம்பெற்ற பூமிஅதிர்வு அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பக்குசீமா அணுஉலையின் அனர்த்தம் காலம் செல்லச் செல்ல மிகம் பூதாகரமாக மாற்றம் பெற்றுவருகின்றது.

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வை தனது நாட்டில் நடத்துவதில் யப்பான் வெற்றிபெற்றுள்ளபோதும் பக்குசீமா பகுதியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்களை தடுத்துநிறுத்த முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் விளையாட்டு நிகழ்வை நிறுத்தவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

பக்குசீமா பகுதியில் இருந்து கசியும் கதிர்வீச்சு கிழக்கு திசையில் பசுபிக் சமுத்திரத்தை கடந்து அமெரிக்காவின் வொசிங்டன் நகரின் ஒரிகோன் (Oregon) கடற்கரைப் பகுதி மற்றும் கனடா ஆகிய நாடுகளை அடுத்த வருடத்தின் முற்பகுதியில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கலிபோர்னியா பகுதியை அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் சென்றடையலாம். ஏனெனில் கதிர்வீச்சுக்களை கொண்ட நீரின் தொடர் பிரவேசத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

தொடர்ந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்த முடியாதுவிட்டால் அது கவாய், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவை பல பத்துவருடங்களில் சென்றடைந்துவிடும். இது நீரோட்டத்தின் வேகத்தை அடிப்படையாகக் கொண்ட கணிப்பு. ஆனால் மீன்கள் பல ஆயிரம் மைல்கள் நீந்திச் செல்லக்கூடியவை. எனவே நீரோட்டம் இங்கு முக்கியமானது அல்ல.

பெரிய மீன்கள் அதிகளவான கதிர்வீச்சுக்களால் பாதிப்படையக்கூடியவை. அண்மையில் கலிபோர்னியாவில் பிடிக்கப்பட்ட ரியூனா (tuna) மீனில் பக்குசிமா பகுதியில் இருந்து வெளியேறிய சீசியம் கதிர்வீச்சு (Cesium) கண்டறியப்பட்டது. கடற் தாவரங்களும் கதிர்வீச்சுக்களால் அதிகளவில் பாதிப்படையக்கூடியவை.

பக்குசிமா அணுஉலையில் மூன்று கட்டிடத்தொகுதிகளில் உள்ள அணுசக்தி உலோகங்களை (Molten cores) தற்போது கூட மனிதர்களால் அணுக முடியவில்லை. பல நூறுவருடங்கள் சென்றாலும் அதனை அகற்ற முடியாது.
இந்த கட்டிடங்களில் ஒன்று சேதமடைந்தாலும், உலோகங்களைக் குளிர்விக்க பாச்சப்படும் நீர் தடைப்படும், அதன் பின்னர் அதிக சூடாகும் அணுசக்தி உலேகம் வெடித்து சிதறலாம். அதன்போது வெளியேறும் பெரும்தொகையான கதிர்வீச்சுக்கள் காற்று மற்றும் நீருடன் கலந்து பாரிய அனர்த்தத்தை உலகில் விளைவிக்கும்.

இந்த அனர்த்தம் தொடர்பில் அமெரிக்காவோ அனைத்துலக சமூகமோ அதிக அக்கறை காண்பிக்கவில்லை. மேலும் ஊடகங்களும் அதனை இருட்டடிப்புச் செய்கின்றன. அதனை தடுத்து நிறுத்தும் வளங்கள் யப்பானிடமும் இல்லை.
நான்காவது கட்டிடம் 79 சென்ரி மீற்றர் நிலத்தினுள் புதைந்துள்ளதுடன், அதில் உள்ள 250 தொன் அணுசகத்தி உலோகமும் அகற்றப்படமுடியாது காணப்படுகின்றது. எனினும் குளிர் நீர் அதற்கு தொடர்ந்து பாச்சப்படுகின்றது. ஆனால் அங்கு ஐதரசன் வெடிப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

குளிர்நீர் பகுதியானது 8,800 இறத்தல் புளுட்டோனியம் (Plutonium) உட்பட 100 இற்கு மேற்பட்ட கதிர்வீச்சு அணுக்களைக் கொண்டுள்ளது. மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் வெடிப்பு 14,000 மடங்கு அதிகமான ஹிரோசிமா அணுவெடிப்புக்களை அல்லது 10 மடங்கு அதிகமான சேர்னோபைல் (Cesium than Chernobyl) ஒத்ததாக இருக்கும்.
A-five-year-old-girl-is-t-009
யப்பான் தனது எல்லா அணு உலைகளையும் மூடியுள்ளபோதும், பக்குசிமா அழிவுகளில் இருந்து தப்புவது முடியாது உள்ளது. கனடாவும், அமெரிக்காவும் தமது மேற்கு கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களில் உள்ள கதிர்வீச்சுக்களை கண்காணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன. யப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மீதான தடை தொடர்பிலும் அவை சிந்தித்து வருகின்றன அல்லது ஒவ்வொரு உணவுப் பொருட்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

தனது பேரளிவுகளை மறைத்து அங்கு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதாக யப்பான் அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் அதிக கதிர்வீச்சு ஆபத்தான பகுதிகளில் தற்போதும் வசிக்கின்றனர். இந்த கதிர்வீச்சுக்கள் பல தலைமுறைகளை பாதிக்கும். கடந்த மார்ச் மாதம் மட்டும் 100 குவாட்றில்லியன் பெக்குரல் (Quadrillion Becquerels) சிசியம், 400 குவாற்றில்லியன் அயடீன், 400 குவாற்றில்லியன் ஆர்கன் வாயுக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளது.

நோபில் வாயுக்கள் எனப்படும் இந்த வாயுக்கள் அதிக சக்திவாய்ந்த கமா கதிர்வீச்சுக்கொண்டவை. இது எக்ஸ்ரே கதிர்களைப் போன்றது. புற்றுநோய்களை உருவாக்கக்கூடியது. சீசியம் மற்றும் அயடீனும் இவ்வாறான தாக்கங்களை உண்டுபண்ணக்கூடியவை. பக்குசிமா விபத்து நடைபெற்ற காலத்தில் இருந்து இன்றுவரை நாள் ஒன்றிற்கு 300 தொன் கதிர்வீச்சுக்கொண்ட நீர் பசுபிக் சமுத்திரத்துடன் கலந்து வருகின்றது.

கடந்த 30 மாதங்களில் 270,000 தொன் நீர் கடலில் கலந்துள்ளது. நீரில் உள்ள றிற்றியம் (Tritium) என்ற கதிர்வீச்சு அணு, உடலில் உள்ள டீஎன்ஏயுடன் இணைந்து பிறக்கும் குழந்தைகளில் பாதிப்பையும், மூளை, கருப்பை உட்பட பல பகுதிகளில் புற்றுநோயையும் உருவாக்கக்கூடியது. 120 வருடங்கள் அழியாமல் இருக்கக்கூடிய இந்த அணு, மீன், மரக்கறி உட்பட பல உணவுப்பொருட்களின் ஊடாக மனித உடலை சென்றடையக்கூடியது.

300 வருடங்கள் அழியாமல் இருக்கும் சீசியம் இருதைய நோய், தைரேய்ட் புற்றுநோய், நீரழிவு உட்பட பல நோய்களை விளைவிக்கக்கூடியது. 240,000 வருடங்கள் அழியாமல் இருக்கும் புளுட்டோனியம் மிகச்சிறிய அளவே புற்றுநோயை உருவாக்கக்கூடியது. இவ்வாறான 100 இற்கு மேற்பட்ட அணுக்கள் பசுபிக் சமூத்திரத்தில் கலந்துள்ளது. சுவையற்ற, மணமற்ற மற்றும் கண்ணுக்கு தெரியாத இந்த அணுக்கள் எதிர்வரும் 5 வருடங்களில் இருந்து 80 வருடங்களில் பாரிய அளவில் புற்றுநோயை உருவாக்கலாம். குழந்தைகளில் இதன் தாக்கம் அதிகமானது.

பக்குசிமா பகுதியில் இதுவரையில் 18 சிறுவர்களுக்கு தைரொய்ட் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் செரனோபைல் விபத்தின் போது நான்கு வருடத்தின் பின்னரே இந்த புற்றுநோய் கண்டறியப்பட்டது.

பொருளாதாரத்தில் முன்னிலை வகித்த யப்பானினால் ஒரு அணு உலையில் சீரழிவை தாங்க முடியவில்லை. இந்த நிலையில் இந்தியா எவ்வாறு கூடாம்குளம் அணு உலையில் அழிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளப்போகின்றது.

ஆனால் ஒன்று மட்டும் நிட்சயமானது, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இந்தியாவின் அணு உலையில் சேதம் ஏற்பட்டால் அது தமிழகத்திலும், ஈழத்திலும் உள்ள தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அழிவாக இருக்கும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்.
சமகால படைத்துறை ஆய்வு (23.09.2013)
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி.