us-assistant-secமறப்பது மக்களின் இயல்பு என்பதை மேற்குலக – பிராந்திய அரச பயங்கரவாதிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்..

 

ஐநா விசாரணைக்குழுவை நவிபிள்ளை அம்மையார் அறிவித்ததும் அதிலிருந்து தப்புவதற்காகவும் நடந்த இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கவும் சிங்களம் தமக்கு சார்பான பிரதிநிதிகளை கொண்ட ஒரு அனைத்துலக விசாரணைக்குழுவை அறிவித்ததை பலரும் மறந்து விட்டார்கள்..

 

இனி உருவாக இருக்கும் அனைத்துலக கண்காணிப்பு குழு எப்படியிருக்கும் என்பதற்கு அது நலல் உதாரணம்.

 

அந்த குழுவில் ஆட்கள் இணைக்கப்பட்ட கதை சுவாரசியமானது..

 

உதாரணத்திற்கு ஒன்று..

 

இந்தியாவிலிருந்து “மனித உரிமையாளர்” என்ற பெயரில் வலம் வரும் மகிந்தவின் நீண்டகால நண்பர் அவ்தாஷ் கௌஷல் அதில் ஒருவர்.

 

இவர் இந்த குழுவில் இணைக்கப்பட்டதாக செய்தி வந்தபோது கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் அப்போது ” தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் இது தனிப்பட்ட அழைப்பு” என்றும்; அறிவித்திருந்தது.

 

ஆனால் அடுத்த நாளே  அவ்தாஷ் கௌஷல் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தன்னை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு இதை உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்பே மகிந்த ராஜபக்ச தன்னிடம் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டதாகவும் கூறியிருந்தார்.

 

இது இந்திய அரசு அம்பலப்பட்டு நின்ற நிகழ்வுகளில் ஒன்று மட்டுமல்ல இலங்கை அரசின் அனைத்துலக விசாரணைக்குழு எப்படி இந்திய உளவுத்துறையின் பின்னணியில் கட்டியெழுப்பப்படுகிறது என்பதையும் கட்டியம் கூறிய நிகழ்வு.

 

அன்று முன்னைய சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட  இந்த ‘அனைத்துலக விசாரணைக்கு குழு’ விற்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை ஒன்றும் தெரியவில்லை.

 

அறிவிப்பதோடு சரி. அத்தோடு எல்லாம் முடிந்துவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் இனஅழிப்பு அரசால் அமைக்கப்பட்டஅனைத்துலக அலோசனை விசாரணைக்குழுக்களின்  – உதாரணத்திற்கு  பான் கீன் மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட மர்சூகி தருஸ்மர் மற்றும் இந்திய நீதிபதி பகவதி குழு  –  கதைக்ளை நாம் அறிவோம்..

 

இதற்குப் பிறகும் அவ்தாஷ் கௌஷல் போன்ற அடிமைகளை இந்தியாவும் கமலேஸ் சர்மா போன்ற அடிமைகளை அமெரிக்காவும் முன்மொழிந்து உருவாக்கப் போகும்  உள்ளக விசாரணை கண்காணிப்பை தமிழர்கள் கண்கொண்டு வேறு பார்க்க வேண்டுமா?

 

ஆனால் இன்னும் “இந்தியாவை நம்பு. அமெரிக்காவை நம்பு.” என்று சொல்வதற்கு நமக்குள்ளேயே ஒரு கூட்டம் இருக்கிறது.

 

போராடினால்தான் வாழ்வு என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

 

ஈழம்ஈநியூஸ்.