வடமாகாண சபை ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறியின் இராஜினாமாவை அடுத்து, அங்கு ஒரு சிவில் உத்தியோகத்தர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் மிகவும் குதூகலிக்கின்றனர். இவர்கள் உண்மையை அறியாத அப்பாவிகளே.

யார் இந்த சிவில் உத்தியோகத்தர் பளிஹக்கார என பார்ப்போமானால், இவரும் இராணுவ அதிகாரி சந்திரசிறியை போன்ற ஒருவர் என்பதே உண்மை.

Ban-Kyi-Moon-palihakkara
இவர் 1990 முற்பகுதிகளில் ஜெனிவாவில் சிறிலங்காவின் தூதுவராலயத்தின் செயலாளராகக் கடமையாற்றியவர். பின்னர் 1998ம் ஆண்டு, சிறிலங்காவின் ஜெனிவா ஐ. நா. தூதுவராக நியமிக்கப்பட்டவர். அதன் பின்னர், அமெரிக்காவிலும் சிறிலங்காவின் தூதுவராக கடமையாற்றியவர்.

இவ் வேளையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது, சிறிலங்காவின் முப்படைகளினால் கட்டவிழ்க்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பளிஹக்காரவும், இவருடன் அவ்வேளையில் ஜெனிவாவில் கடமையாற்றிய, தற்பொழுது அமெரிக்காவில் சிறிலங்காவின் தூதுவராக கடமையாற்றும், பிரசாத் காரியவாசம், வேறு பல தூதுவராலாய ஊழியர்களும் இணைந்து, மிகவும் மோசமான முறையில் தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவில் வேலைத்திட்டங்களை முன்வைத்தவர்.

இவ்வேளையில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் படுகொலையை, பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையம், ஐ.நா. மனிதர் உரிமை ஆணைக்குழுவில் முன்னெடுத்திருந்த காரணத்தினால், தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ஆகிய என்னை, ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்திலிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு, என்மீது பல விசமத்தனமான புகார்களை ஐ.நா. செயலகத்திற்கு முறையிட்டவர்.

இதனால், அவ்வேளையில் பல தடவை ஐ.நா.வின் பாதுகாப்பு பிரிவினால் விசாரிக்கப்பட்டேன். இறுதியில் இவர்களது குற்றச்சாட்டுகள் யாவும், அரசியல் பின்ணனி கொண்டதென்பதை தெரிந்து கொண்ட ஐ.நா. செயலகம், என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

அடுத்து, ராஜபக்ச அரசினால் உலகின் கண்களுக்கு மண்தூவும் நோக்குடன் உருவாக்கப்பட்ட “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு”; (எல்.எல்.ஆர்.சி) முக்கிய அங்கத்தவராக பளிஹக்கார கடமையாற்றியதுடன், இக் குழுவின் அறிக்கையில், தமிழ் மக்களுக்கு நடைபெற்றவை ஓர் ‘இன அழிப்பு அல்ல’ என்ற அறிக்கையை வெளிக்கொண்டு வந்தவர்.

பளிஹக்கார முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினது நெருங்கிய நண்பர். சுருக்கமாக கூறுவதானால், ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவரே இந்த ஆளுநர் பளிஹக்கார.

ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர், வடமாகாண சபையின் ஆளுநராக ஓர் சிவில் நிர்வாகியை நியமிக்குமாறு வேண்டுகோள் வைத்த வேளையில், ஜனாதிபதி ராஜபக்ச இவ் பளிஹக்காரவையே நியமிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.

அவ்வேளையில் ஈ.பி.டி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டமென ராஜபக்சவை வற்புறுத்திய காரணத்தினால், அப்போது பளிஹக்கார வடமாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, அன்று ராஜபக்சவினால் தெரிவு செய்யப்பட்ட ஆளுநரை, இன்று நியமித்துள்ளார். இதிலிருந்து என்ன புலனாகிறது என்பதை பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் விளங்கி கொள்ளவேண்டும்.

முன்னாள் இராணுவ அதிகாரியான சந்திரசிறி, வடமாகாண சபைக்கு செய்த நாசகார வேலைகளுக்கு பல மடங்கு மேலாக, ராஜபக்சக்களின் நம்பிக்கை நட்சத்திரமான சிவில் ஆளுநர் பளிஹக்கார மேற்கொள்ளவுள்ளார்.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்