இலங்கையின் வடபுலத்தினில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் மிக மோசமான கட்டத்தினை அடைந்துள்ள நிலையினில் அதனை கண்டித்து ஊடக அமைப்புக்கள் நாளை வியாழக்கிழமை (31.07.2014)கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளன.

குறிப்பாக பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊடகவியலாளர்களை சிறையினில் அடைக்கும் அண்மைய சதி முயற்சிகளை அம்பலப்படுத்தி யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக நாளை நண்பகல் 12 முதல் ஆரம்பமாகி நடைபெறும் இவ்வார்ப்பட்டத்திற்கு சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட பிரதான ஜந்து ஊடக கட்டமைப்புகளுடன் வடக்கிலுள்ள ஊடக அமைப்புக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தினில் குதிக்கவுள்ளன.

யாழ்.ஊடக அமையம், சுதந்திர ஊடகக்குரல், நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பு, வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் என்பவற்றுடன் கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட ஊடக அமைப்புக்களும் இவ்வார்ப்பாட்ட போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து பங்கெடுக்கவுள்ளன.

தெற்கு ஊடக அமைப்புக்களுடன் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ஊடக அமைப்புக்களும் கைகோர்த்து முன்னெடுக்கும் இவ்வார்ப்பட்டத்திற்கு அனைத்து தரப்பினதும் ஆதரவினை வேண்டி நிற்பதாக ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.