யாழில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற போர்வையில் 161 தமிழர்களை கைது செய்திருக்கிறது இன அழிப்பு அரசின் காவல்துறை.

parani
இனியும் புலிப்பூச்சாண்டி காட்டி கைது செய்ய முடியாது என்று தெரிந்து குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற போர்வையில் வகை தொகையில்லாமல் கைதை தொடங்கியிருக்கிறது இன அழிப்பு அரசு.

ஒரு மாதத்திற்கு முன்புதான் இதே பகுதியில் 185 தமிழர்கள் இதே காரணங்களுடன் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்களின் குற்றச்செயலாக திருட்டு இருக்கிறது. இவர்கள் யார் என்று கவனித்து பார்த்தால் ஒரு விடயம் புரியும்.

இன அழிப்பு அரசின் இராணுவத்தால் வல் வளைப்பு செய்யப்பட்டிருக்கும் மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி போன்ற வலி வடக்கு மற்றும் வலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள்.

கடந்த 30 வருடமாக நிலம் பறிக்கபட்டதால் இவர்களுக்குள்ளிருந்து ஒரு குற்ற சமூகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது.

ஏதோ மில்லியன் கணக்கில் திருடவில்லை. வளவுக்குள் நின்ற ஆட்டை, மாட்டை திருடியது, தேங்காயை திருடியது, சைக்கிள் திருடியது. இது திருட்டா? கோடிக்கணக்கான சொத்துமதிப்புள்ள அவர்களின் நிலத்தையும் சொத்தையும் முடக்கி வைத்திருக்கும் இன அழிப்பு செய்வது திருட்டா?

நிலமும் இல்லாமல் தொழிலும் இல்லாமல் வீட்டில் குழந்தைகள் பசியுடன் படுத்திருக்கும் போது யார்தான் பார்த்துக்கொண்டு படுத்திருப்பார்கள்?

இப்போது அவர்களுக்கு கிடைத்திருப்பது திருட்டு பட்டம். சரி இவர்களை உள்ளே பிடித்து போட்டாச்சு. மனைவி பிள்ளைகளின் கதி என்ன? குழந்தைகள் பாலுக்கு ஏங்கி அழும்போது குழந்தைகளின் பசி ஆற்ற இவர்களின் மனைவிமார் வீதிக்கு வரமாட்டார்களா?

இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் பட்டங்கள் திருடன், கொலைகாரன், விபச்சாரி.

ஏனென்றால் இதைத்தான் இன அழிப்பு அரசு விரும்புகிறது. இந்த நிலைகளை திட்டமிட்டே உருவாக்கியதே இன அழிப்பு அரசுதானே!

sla-jaff
இதற்கு பெயர்தான் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு. இப்போது நடக்கிற எந்த கூத்திற்கும் பெயர் புனர்வாழ்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. நல்லிணக்கமும் இல்லை. அப்பட்டமான இன அழிப்பு!

இப்போது குற்றச்செயல் அதிகரித்துவிட்டது என்று கதை விட்டு தமிழர்களை கைது செய்வதனூடாக பல குறிகளை வைத்திருக்கிறது இன அழிப்பு அரசு.

01. இனஅழிப்பின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கில் தமிழ்க் குடும்பங்களை முடக்குவது

02. திருட்டுக்கள் அதிகமாகி விட்டது என்ற போர்வையில் ஆளணி பற்றாக்குறை நிகழ்வதால் தமிழர்களை இராணுவம் மற்றும் தொண்டர் படையணியில் கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதை நியாயயப்படுத்துவது.

03. விசேட அதிரடிப்படை புதிதாக வடக்கிற்கு வரவழைத்திருப்பதை நியாயப்படுத்தி இராணுவமயமாக்கலுக்கு வழி கோலுவது.

04. மக்களின் மாணவர்களின் சுநதந்திரமான மாலைநேர ஒன்றுகூடல்களுக்கு, (புரட்சி குறித்த உரையாடலை தடுக்கும் நோக்குடன்) திருட்டை காரணம் காட்டி தடை செய்வது..

இப்படி இன்னும் நிறைய எழுதலாம்.

தனி நாடு என்பதற்கும் அப்பால் காணி, காவல்துறை, நீதி அதிகாரங்களையாவது நாம் முதலில் போராடி பெறுவதே இந்த கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாக்க உதவும்.

சிங்கள நீதிக்குள் நாம் வாழ்வதும் ஒன்றுதான் சாவதும் ஒன்றுதான். இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை. நாம் என்ன செய்யப்போகிறோம்? கேள்விகளுடன் நின்று கொள்ளாமல் விடையை தேடுவோம். போராடுவோம்.

ஈழம் ஈ நியூஸ் இற்காக பரணி கிருஸ்ணரஜனி