ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தின் பின்னனியில் மாணவர்களின் பங்களிப்புகள் எப்போதும் இருந்ததுண்டு. பொன் சிவகுமாரன் தொடக்கம், 1980 களில் பெரும் வளர்ச்சி கண்ட விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்பு வரையிலும் தமிழ் மாணவர்களும் தமிழ் மக்களின் விடுதலைப்போரும் பின்னிப் பிணைந்துள்ளதாகவே காணப்படுகின்றது.

 

தமிழ் மாணவர் சமூகம் என்பது எமது விடுதலைப்போரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ள அடுத்த தலைமுறைகளை தொடர்ந்து பிரசவிக்கும் ஒரு தளமாகும். எனவே தான் சிறீலங்கா அரசும் அதன் புலனாய்வுத்துறையினரும், அனைத்துலக சமூகமும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது குறிப்பாக யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் மீது அதிக கவனங்களைச் செலுத்துவதுண்டு.

 

முள்ளிவாய்க்கால் போரவலத்தின் பின்னர் தமிழ் இனம் இன்னொரு போராட்டத்தை கையில் எடுக்கப்போவதில்லை என்ற கற்பனையில் சிறீலங்கா அரசும், பிராந்திய வல்லரசுகளும் இருக்கையில் அண்மைக்காலமாக தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவ சமூகம் தொடர் ஆதரவுகளை வழங்குவதும், அவர்களாகவே போராட்டத்தில் குதித்து வருவதும் தமிழின எதிரிகளை கலக்கத்திற்குள் தள்ளியுள்ளது.

 

எனவே தான் அண்மைக்காலமாக யாழ்ப்பலைக்கழகத்தில் பகிடிவதைகள் நடைபெறுவதாகவும், பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும் சிறீலங்கா அரசின் துணையுடன் மறைமுகமாக இயங்கிவரும் தமிழ் ஊடகங்கள் பொய்யான தகவல்ககைப் பரப்பி வருகின்றன.

 

தமிழ் ஊடகங்கள் என்ற போர்வையில் சிறீலங்கா அரசின் நிதி உதவியுடன் இயங்கிவரும் இந்த ஊடகங்கள் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை குறிவைத்துவருவது என்பது தமிழ் இனத்தின் போர் எழுச்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் திட்டமாகும்.

 

கிளிநொச்சியில் உயிருடன் இருக்கும் மாணவி ஒருவரை தற்கொலை செய்து கொண்டதாக எந்தவித ஆதாரமுமின்றி தகவல்களை வெளியிடும் சிறீலங்கா அரசின் ஆதரவுடன் இயங்கும் இந்த ஊடகங்கள். பொதுமக்கள் படிக்கமுடியாத பல செய்திகளையும் தமது வியாபார நோக்கத்திற்காக வெளியிட்டுவருவது என்பது மாணவ சமூகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் மிகப்பெரும் இடைவெளி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

 

ஆனால் இந்த தகவல்கள் தொடர்பில் கடந்த வாரம் யாழ்ப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும், இரண்டாம் வருட மாணவர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்த அவர்கள் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிடாதது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

 

இனஅடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் இந்த தமிழின விரோதிகளை எதிர்த்து போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமது உதவிக்கரத்தை நீட்டியுள்ளனர்.

 

ஊடக தர்மத்தை கைவிட்டு, தமிழ் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க முற்படும் சமூகவிரோத ஊடகங்களின் நடவடிக்கையை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.

 

1990 களில் யாழில் இருந்து இயங்கிவரும் உதயன் பத்திரியையும் இவ்வாறான ஒரு தகவலை வெளியிட்டது தொடர்பில் மாணவ சமூகத்திற்கும், உதயன் பத்திரிகைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததுடன் அந்த ஊடகத்தையும் அன்று புறக்கணித்திருந்தனர்.

 

எனவே தற்போது எழுந்துள்ள இந்த சூழ்நிலைகளை தமிழ் மக்கள் வெறுமனவே கடந்து செல்லமுடியாது. ஏனெனில் இது நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் ஒரு இனஅழிப்பு நடவடிக்கையாகும். இதற்கு எதிராக தமிழினம் தனது முழு எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதோடு தவறான ஊடகங்களை புறக்கணிக்கவேண்டும் என்பதும் இங்கு முக்கியமானது.

 

ஏனெனில் தமிழினம் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் அழிவைச் சந்தித்து 10 வருடங்கள் அண்மித்துள்ள நிலையிலும் தற்போதும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடிவருகின்றது.

 

அதாவது ஒரு மக்கள் போராட்டம் ஒன்று பெருமளவில் இடம்பெறும் சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் அதற்கு பக்கபலமாக இருக்கப்போவது மாணவ சமூகமே என்பதை தெரிந்துகொண்ட எதிரி தனது தமிழ் ஊடகங்கள் மூலம் தமிழினத்தின் போராடும் வலுவைச் சிதைக்க முனைந்து நிற்கின்றான்.

 

நன்றி: இலக்கு (14-04-2019)