பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா என்னை நாவடக்கமாக பேசவேண்டும். இல்லையெனில் பாதுகாப்பாக வீடு திரும்பமுடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்தபேச்சுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடவும், எச்.ராஜாவின் உருவப்பொம்மையை எரிக்கவும் ம.தி.மு.க. தொண்டர்கள் தயாரானார்கள். அவர்களிடம் தகுதியில்லாத ஒரு நபருக்காக போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டேன்.

praba-vaiko
ராஜாவின் மிரட்டலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனால் தற்போது பா.ஜ.க முக்கிய தலைவராக இருப்பதாக கூறிக்கொள்ளும் சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில் ம.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறாவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் பிணையை ரத்துசெய்ய மனுதாக்கல் செய்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் சுப்ரமணிய சுவாமி மிரட்டுகிறார்.

எனக்கும், பா.ஜ.க.வுக்குமான பிரச்சினைக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு? என்று தெரியவில்லை. தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணிய சுவாமியை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்?

நான் எம்.ஜி.ஆர்., ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால் இதுவரை யாரும் என்னை மிரட்டியதில்லை. இப்போது ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்.

முடிந்தால் அவர்கள் ம.தி.மு.க.வை தடை செய்து பார்க்கட்டும். நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற ஒரு கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தார்கள். அப்போது பா.ஜ.க.வினர் வீட்டுக்குள் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அப்போது பேசியது நான்தான்.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்த காரணத்தால்தான் கடந்த 1998-ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணியில் வாஜ்பாயும், அத்வானியும் என்னை சேர்த்தார்கள்.

வாஜ்பாய் ஆட்சி கவிழ சுப்பிரமணிய சுவாமி தான் காரணம். அதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ம.தி.மு.க.வினர் எப்போதும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் சுப்பிரமணியன் சுவாமி ராஜபக்சவின் முகவர் அதனால்தான் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்கிறார்.

இப்போது ராஜபக்சவுக்கு பாரத ரத்னா கொடுத்துவிட்டு மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பீர்களோ?

-வைகோ