ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா? வாக்கு வங்கியின் நிலவரம் எவ்வாறு இருக்கிறது? மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? என்றெல்லாம் கணிப்பிடவே ஊவா மாகாண சபைத் தேர்தலை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்தினார். சிங்கள அரசியலில் ராஜபக்ச உருவாக்கியுள்ள பிம்பத்தை முறியடிக்க முடியுமா என்பது சிங்கள தேசத்தின் மாபெரும் அரசியல் சிக்கல் ஆகியிருந்தது. அதைப்போல ராஜபக்சவின் சர்வாதிகாரத்தில் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்த முடியுமா என்பதும் இங்கு பெரும் சிக்களுக்குரியதாகும்.

mahinda
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை எதிர்த்து யார் தேர்தலில் நிற்க முடியும் என்றும் யாரால் வெல்ல முடியும் என்றும் மார் தட்டிக் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டேன், புலிகளின் நிலப்பரப்பை கைப்பற்றி விட்டேன் என்று சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றார் ராஜபக்ச. தனது அண்ணன் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது இந்த நாடு இரண்டு நாடுகளாக இருந்தன என்றும் தனது அண்ணாவே இந்த இரு நாடுகளையும் ஒன்றாக்கியவர் என ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய கூறுகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்து பெற்ற வெற்றியை முன் வைத்து ராஜபக்ச பிரசாரத்தில் ஈடுபடுட்டார். ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போரட்டத்தை தோற்கடித்தமை, ஈழ மக்களை இனப்படுகொலை செய்தமை, மனித குலத்திற்கு விரோதமான போர்க்குற்றங்களை இழைத்தமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் கொண்ட முள்ளிவாய்க்கால் போர் ராஜபக்சவின் அரசியல் முதலீடு ஆனது. இதை வைத்தே இலங்கைத் தீவை தொடர்ந்தும் தனது சர்வாதிகார ஆட்சிக்குள் வைத்திருக்கலாம் என்று ராஜபக்சே கணக்குப் போடுகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபகச்வுக்குப் போட்டியாக அவருடன் ஈழ இனப்படுகொலைப் போரை நடத்திய இராணுவத்தளபதி ஜென்ரல் சரத்பொன்சேகா போட்டியிட்டார். யுத்தத்தின் நிஜமான ராஜா யார்? என்று இருவருக்கும் இடையில் சமர் மூண்டது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை கூட்டாக நடத்திய இருவரும் அந்த யுத்தம் முடிந்து சில மாதங்களின் அதன் வெற்றிக்காக சண்டையிட்டனர். அந்த தேர்தலில் சரத்பொன்சேகாவே வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் சரத்பொன்சேகா ஊடகம் ஒன்றுக்கு அளித்தபோட்டியில் அந்தத் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக கூறினார். தானே இலங்கை ஜனாதிபதி என்றார். தேர்தலில் மோசடிகள் இடம்பெற்று ராஜபக்ச வெற்றி பெற்றாதாக காட்டப்படுகிறது என்பதே சரத்பொன்சேகாவின் வாதம். அவரது குற்றச் சாட்டுக்களை நிரூபிக்கும் விதமாக இருநிகழ்வுகள் இடம்பெற்றன. ஒன்று தேர்தல் முடிந்த கையோடு அன்றைய தேர்தல் ஆணையாளர் திசாநாயக்கா தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அந்தத் தேர்தலில் நடந்த மோசடியினால் அது ஓர் அநீதி என்ற மனசாட்சியின் உறுத்தலால்தான் அவர் பதவி விலகினார் என்றும் தற்போது அவர் வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிந்த பின்னர் நடந்த கூட்டங்களில் எல்லாம் சிங்கள மக்கள் சரத்பொன்சேகாவை “அப்பே ஜனாதிபதி மாத்துமா” (எங்கள் ஜனாதிபதி) என்றே அழைத்தார்கள். பின்னர் சரத்பொன்சேகாவை கைது செய்து இரண்டு வருடங்கள் சிறையில் அடைத்து வைத்த ராஜபக்ச தன் இருப்பை பலப்படுத்திய பின்னர் அவரை விடுவித்தார்.

இந்த முறை தேர்தல் அறிவிக்க முன்னரே யாரை வேட்பாளராக அறிவிக்கப் போகிறீர்கள் என மகிந்தராஜபக்சவும் அவரது அரசை சார்ந்தவர்களும் எதிர்கட்சிகளைப் பார்த்த்து கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே எதிர்கட்சி வேட்பாளராக நிறுத்துவதாக பரவாலாக பேசப்பட்டது. அக்கட்சியினரும் அதையே சொல்லி வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ராஜபக்சவின் அரசியிலிருந்து அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேனவும் ராஜித சேனரத்தனவும் விலகி வந்தனர். அவர்களுடன் முப்பதுபோர் வரையில் எதிர்கட்சியில் இணையலாம் என பேசப்பட்டபோதும் மேலும் சிலர் தற்போது இணைந்து வருகின்றனர்.

கட்சி மாறுபவர்களின் பையில்கள் (கோவை) என்னிடம் உள்ளன அவற்றை எடுக்கும் மனிதன் நான் இல்லை என்று ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்தமை அரசை விட்டு வெளியேறுபவர்களை தடுப்பதற்கான உத்தியே. இப்போது கட்சி மாற நினைப்பவர்களிடம் பெரும் பயம் ஒன்று குடி கெண்டிருப்பதைக் காணலாம். மைத்திரிபால சிறிசேன ஒரு நியாயமான தேர்தல் நடந்தால் வெல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் கடந்த முறையைப்போல ராஜபக்சே தனது சர்வாதிகார விளையாட்டைக் காட்டி தேர்தலில் மோசடி செய்தால் கட்சி மாறியவர்களின் கதி என்ன ஆவது என்பதுதான் அவர்களது கலக்கம்.

எம்பிலிப்பிட்டியவில் நடந்த பொதுச்சந்தை திறப்பு விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ச ஜனவரி எட்டாம் தேதியின் பின்னரும் நான்தான் ஜனாதிபதி என்று கூறினார். யாரும் பயப்பிட வேண்டாம் என்று அவர் அவ்வாறு உறுதிபடக்கூறுவது எதை வைத்துக் கொண்டு? இந்தத் தேர்தல் நியாயமான தேர்தலாக நடக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேவை. தேர்தலை மிகவும் அவதானமாக கண்காணிக்க வேண்டும். நியாயமான தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் ராஜபக்ச தோற்கடிக்கப்படும் வாப்புக்களே உள்ளன.

சிங்கள பௌத்த பேரினவாத அரச தலைவருக்கான இந்தப் போட்டியில் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்றங்களினால் தமிழர்களுக்கு என்ன மாற்றம் நேரும் என்பது குறித்து அடுத்து ஆராய வேண்டியிருக்கிறது. இப்போது ராஜபக்சே தன் தேர்தல் பிரசாரங்களில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளுக்கு எதிராக சில விடயங்களைப் பேசி வருகின்றார். முன்னாள் பிரதமரும் இந்நாள் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரம சிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமார துங்கவும் மைத்திரிபால சிறிசேனாவை கொண்டு வந்திருப்பது ஈழ ராஜ்ஜியத்தை உருவாக்கும் சதிச் செயல் என்கிறார் ராஜபக்ச.

இதற்காக அவர்கள் அமெரிக்கா, நோர்வே தூதரகங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ராஜபக்ச கூறுகிறார். ஈழத்தில் நடந்த போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்காக தனக்கு தண்டனை வழங்கிக் கொடுக்கவே இந்த ஒப்பந்தம் நடந்தது என்றும் ராஜபக்ச கூறுகிறார். தேர்தலில் தான் வெற்றி பெறவும் மைத்திரியை தோற்கடிக்கவும் சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டி விட்டு அதில் குளிர்காய முனையும் ராஜபக்சேவின் தந்திரங்கள்தான் இவையெல்லாம் என்பது யாவரும் அறிந்தது.

இதனால் நான் ஒரு சிங்கள பௌத்தன் என்று தன்னை அறிமுகப்படுத்தி மேடைகளில் பேசும் மைத்திரிபால சிறிசேன நானும் ஒரு சிங்கள பௌத்த பேரினவாதிதான் என்பதைக் கூற வேண்டியிருக்கிறது. அது மாத்திரமின்றி இனப்படுகொலை யுத்தத்தை நடத்திய ராஜபக்சேவை யுத்தக் குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மாட்டேன், அந்த கொடூரங்களை இழைத்த இராணுவப்படைகளை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் சிங்கள மக்களிடத்தில் மைத்திரிபால சிறிசேன சத்தியம் செய்கிறார். ஜாதிக ஹெல உறுமய என்ற கடும்போக்குவாத கட்சியும் மைத்திரிக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

அந்தக் கட்சி மைத்திரியோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ராஜபக்சவையும் அவரின் இராணுவப் படைகளையும் யுத்தக் குற்றம் தொடர்பான சரவதேச விவகாரத்தில் பாதுகாப்பேன் என்று ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கிறது. லிபியாவிலும் எகிப்திலும் ஈராக்கிலும் நடந்தது போல் இலங்கையில் நடத்த விரும்புகிறார்கள் என்றும் என்னை மின்சாரக் கதிரையில் இருத்துவதுதான் அவர்களின் நோக்கம் என்றும் ராஜபக்ச கூறுகிறார். இவரது பேச்சுக்கு பதில் அளித்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, ராஜபக்சவுக்கு மரண பயம் ஏற்பட்டிருக்கிறது என்றும் யுத்தக் குற்றச் செயல்களுக்காக அரசியல்வாதிகளைவிடவும் இராணுவ அதிகாரிகளையே தண்டிப்பார்கள் என்றும் தனது மரண பயத்தை வெளியிட்டு தேர்தல் பிரசார மேடையில் பேசினார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதத்தின் கொடும் யுத்தத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றத்தை இனப்படுகொலையை, சிங்கள மக்களிடம் யுத்த வெற்றியாகவும் தேர்தல் கால அரசியல் முதலீடாகவும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள் பேசும்பொழுது அவையே யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த மிக முக்கியமான ஆதாரங்கள் ஆகின்றன. அவர்கள் இப்போது யுத்தக் குற்றத்தை இழைத்ததை ஒப்புக்கொள்கிறார்கள். தாம் இழைத்த குற்றங்களுக்காக மின்சாரக் கதிரையில் இருக்க நேரிடும் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

ஈராக்கில் சதாம்குசைன் நடத்திய இனப்படுகொலைக்கு ஒப்பான படுகொலைளைதான் நடத்தியதாக ராஜபக்க ஒப்புக்கொள்கிறார். எகிப்திலும் லிபியாவிலும் நடந்த மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சியைத்தன் இலங்கையிலும் நடத்துவதாக ராஜபக்சே என்பதை ஒப்புக்கொள்கிறார். இத்தகைய ஒப்புதல்கள் வாக்கு மூலங்கள் முக்கியமானவை. தோல்வியும் அழிவும் நெருங்கும்போது மேற்குறித்த அநீதிகளை இழைத்தவர்கள் அவர்களே தமது வாயால் தாம் இழைத்த அநீதிகளை குறித்து வாக்கு மூலம் அளிக்க நேரிடுகின்றது. இப்பொழுதுதான் அவர்கள் தாம் நடத்திய யுத்தத்தின் கொடூரங்களை அரசியலுக்காக உரிமை கோருகிறார்கள்.

ஒரு குரூரமான யதார்த்தம் இருக்கிறது. ஸ்ரீPலங்கா அரச தலைவரின் தேர்தலில் தமிழர்கள் குறித்து வாய் திறந்தால் சிங்கள மக்களின் வாக்குகள் பறிபோகும் என்ற ஒரு நிலை நிலவுகிறது எனில் சிங்கள தேசத்தில் எத்தகைய இனவாதமும் தமிழினத்துடன் இணக்கமற்ற நிலையும் சமத்துவமின்மையும் நிலவுகிறது எனப் புரிந்து கொள்ளலாம். யார் சிறந்த சிங்கள பவுத்த பேரினவாதி என்பதை நிரூபிக்கும் போட்டி ஒருபுறம். மறுபுறம் ஈழத் தமிழர்கள்மீதான இனப்படுகொலைப் போரை நடத்திய வெற்றிப் புழகாங்கிதமும் அந்தக் குற்றங்களை பாதுகாப்பதை நிபந்தனைகளாக சத்தியம் செய்வதுமாக சிங்கள தேச அரசியல் காணப்படுகிறது.

தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைக் குறித்துப் பேச முடியாது என்பதுடன் புலிகளுக்கு எதிராகவும் இராணுவத்திற்கும் சிங்களப் பேரினவாத்திற்கு ஆதரவாகவும் பேச வேண்டும் என்பதே சிங்கள தேச தேர்தல் ஒழுக்கமாக காணப்படுகிறது. சிங்கள பேரினவாதத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பேரினவாதமும் முக்கிய செல்வாக்கு செலுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பையும் கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் சிங்களப் பேரினவாதத்தில் ஒடுங்கி அழிவது அல்லது அதற்கு எதிராக போராடுவது என்பனதான் ஈழ தமிழர்களுக்கு உள்ள தெரிவுகள். இது இன்று நேற்றல்ல காலம் காலமாகத் தொடரும் இந்தப் பேரினவாதப் போக்கு. இதுவே ஈழத் தமிழரின் தனி தேச விடுதலைக்கான நிர்பந்ததத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சில தடவைகளாக நடைபெற்றுவரும் தேர்தலில் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். இப்போதைக்கு தமிழ் மக்கள் தங்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்த இதுவே சிறந்த ஆயுதம். வடக்கில் வீதிகளை திறந்தும் கட்டிடங்களைக் கட்டுவதாலும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்தை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது என்பதை இந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் உணர்த்துவார்கள்.

சிங்கள ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்யும் தேர்தல் என்றபோதும் இதன் ஊடாக ஈழத் தமிழர் தேசத்தின் ஒட்டுமொத்த முடிவும் வெளிப்பட்டு நிற்கும்.

இந்த ஆட்சிமாற்றங்கள் சிங்கள தேசத்திற்கானவை. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கான அறிகுறிகள் சிங்கள தேசத்தின் அரசியல் மாற்றத்திற்கான முயற்சிகளே. அது ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற சந்தேகத்தையே வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் நாம் நம்பவேண்டியுள்ளது. இது ஈழத் தமிழர்களாகிய நமக்கான மாற்றமல்ல. ஆனால் நமக்கொரு மாற்றம் தேவைப்படுகிறது. இலங்கைத் தீவில் தீவிரமான இன ஒடுக்குமுறை முன்னெடுக்கப்படும் சூழலில் தற்போதைய தமிழ் மிதவாத அரசியல் செயற்பாடுகள் மிகவும் மந்தகரமானவை. வினைதிறன் மிக்க அரசியல் இயக்கம் ஒன்றாக மாறவே அல்லது உருவாக்கம் பெறவோ வேண்டிய மாற்றமே எமக்கு அவசியமானது. அதற்கான வாய்ப்பை சிங்கள தேச தேர்தல் மாற்றங்கள் இடமளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக தலைவிரித்தாடிய சிங்களப் பேரினவாதம் இறுதியில் தனது சொந்த மக்களுக்கு எதிராகவே திரும்பியது. மாணவர்கள், கலைஞர்கள், மற்றும் தெற்கு அரசியல்வாதிகயளை காண்டுமிராண்டித்தனமாக சிங்கள அரசு ஒடுக்கத் தொடங்கியிருக்கிறது.

பேரினவாதமும் சர்வாதிகாரமும் இவ்வாறான ஒரு இறுதி நிலையை எட்டும். இங்கு மகிந்தராஜபக்சவின் குடும்ப சர்வாதிகாரத்தை ஒழிக்கும் இந்தத் தேர்தலில் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் உதவுவது என்பது பிரித்தானிய ஆதிக்கர்களிடமிருந்து இலங்கை விடுதலைக்காக தமிழர்கள் முன்னின்று போராடியதற்கு ஒப்பானது. ஆனால் ராஜபக்சவை தோற்கடிப்பதனால் கிடைக்கும் சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டுமா? இல்லை அது தமிழர்களுடனும் பகிரப்படுமா? என்பதே முக்கிய கேள்வியாகும்.

தீபச்செல்வன்.
(இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் குறித்து இந்த மாதம் வெளியான இந்திய இதழ் ஒன்றில் எழுதப்பட்ட கட்டுரை,
தேர்தல் நடைபெற முன்னர் எழுதப்பட்டது.)