canada-womesமார்ச் மாதம் 8 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூறப்பட்டு நடைபெறவிருக்கும் அனைத்துலக மகளிர் எழுச்சி நாளை முன்னிட்டு கனடாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் வரிசையில் சனிக்கிழமை, மார்ச் 5, 2016 அன்று காலை 11:00 மணிக்கு ரொறன்ரோவில் மைய நகரப்பகுதியில் மாபெரும் பெண்கள் எழுச்சி பேரணி நடைபெற்றது.

 

சுமார் 5000 க்கும் மேற்பட்ட ஆணென்றும் பெண்ணென்றும் பின்சென்றும் மூப்பென்றும் பேதமில்லாமல் பேரெழுச்சியோடு மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்களும் பங்கேற்று தமிழீழ தாயகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி கண்ணீரோடு வாழும் ஈழத் தமிழ் பெண்களின் மீது தொடரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மறுக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி, தொடரும் பெண்கள் மீதான இனப்படுகொலை யுத்தத்தின் ஆறாத வடுக்கள், 98,000 க்கும் மேற்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட தாயக உறவுகளின் கண்ணீரோடு வாழும் வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் பல்லின சமூகத்தின் கவனத்திற்கும் ஊடகங்களின் கவனத்திற்கும் எடுத்து செல்லப்பட்டன.

 

தமிழ் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகள் சர்வதேசத்தால் பாராமுகமாக இருக்கும் வலியையும் பிரதான ஊடகங்கள் உட்பட பலதேச ஊடங்களிலும் வெளிவரும் வகையில் எடுத்து சொல்லப்பட்டது.

 

கனடா வாழ் பல்லின மக்களும் கலந்து கொண்ட அனைத்து மகளிர் மீதான சகல ஒடுக்குமுறைகளுக்கும், அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த எழுச்சிப் பேரணியான International Women’s Day Toronto 2016 ஊர்வல நிகழ்வில் உலகில் பெண்களின் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க கனடா தமிழ் மகளிர் அமைப்பினரின் ஒருங்கிணைப்பின் கீழ் கனடா வாழ் தமிழ் மக்களும் ஆண் பெண் வேறுபாடு இன்றி பங்கேற்றார்கள்.
.

252 Bloor Street மேற்கில் அமைந்துள்ள OISE மண்டபத்தில் உள்ளரங்க மேடை நிகழ்வுகள் 11 மணிக்கு ஆரம்பமாகி அதனை தொடர்ந்து 1 மணிக்கு கடும் குளிரான கால நிலையையும் பொருட்படுத்தாமல் வாத்திய இசை, முழக்கங்களோடு ஊர்வலமானது சுமார் 5 km Bloor Yonge வீதிகளினூடாக பயணித்து ரயெர்சன் பல்கலைக்கழகம் வரை சென்று அதன் பின் மீண்டும் உள்ளரங்கத்தில் மாலை கலை நிகழ்வுகளோடு நிகழ்வு நிறைவு எய்தியது.

 

இலங்கையில் நல்லாட்சி என சொல்லப்படும் அரசின் கீழ் இன்னமும் தொடரும் எம் தமிழ் பெண்களின், மக்களின் கண்ணீர் வாழ்வை சர்வதேசத்திற்கு எடுத்து சொல்ல இந்த அணி திரளல் தமிழ் மக்களால் களமாக்க்கப்பட்டதோடு பல நூறு ஊடகங்களில் இந்த நிகழ்வு செய்தியாகவும் எடுத்து வரப்பட்டது.
வீழ்ந்தோம் என்பதில் சிறுமை இல்லை. ஆனால் மீண்டும் கை ஊன்றி எழ நாம் முன்வரவில்லை என்றால் எம்மையும் எம் இனச்சிக்கலையும் இந்த உலகம் இழிவாகவே பார்க்கும்.

 

எத்தனை முறை வீழ்தோம் என்பது பெரிதல்ல. அத்தனை முறையும் எழுந்தோமா என்பதே இங்கு முதன்மையானது.

 

போராடும் மக்களே வரலாறு படைப்பார்கள். அந்த வகையில் நேற்றைய நாளில் கனடிய மண்ணில் பெண்கள் போராடிய பல்வேறு சிக்கல்களை போக்க பெண்களின் ஒன்று பட்ட இந்த போராட்டம் நிச்சயம் வலுவாக இருந்திருக்கும் என்பது உறுதி.